அக்கரைப்பற்று முஸ்லிம் இளைஞன் கட்டாரில் சிறையில் அடைப்பு : வெளிவரும் அதிர்ச்சித் தகவல் - Sri Lanka Muslim

அக்கரைப்பற்று முஸ்லிம் இளைஞன் கட்டாரில் சிறையில் அடைப்பு : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

Contributors
author image

Office Journalist

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று என்னும் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் கட்டாரில் நேற்று (2016-04-07) புதன் கிழமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம்ஸ் இணையத்தின் கட்டார் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கட்டார் விமான நிலையத்தில் வைத்தே இவர் கட்டார் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இவ் இளைஞரின் கைது தொடர்பில் அறியவருவதாவது.
அக்கரைப்பற்று மாநகர சபையின் – 03ஆம் பிரிவைச் சேர்ந்த இவ்விளைஞன் தனது விடுமுறையை ஊரில் முடித்துக் கொண்டு கட்டார் திரும்பியுள்ளார்.

இவர் கட்டார் செல்லும் போது இவரது நண்பர் ஒருவரின் பெற்றோர் கட்டாரில் வேலைபார்க்கும் தமது மகனின் நோய்க்காக சில மருந்துகளை இவ்விளைஞனிடம் கொடுத்து அனுப்பிவைத்தள்ளனர்.

இவ்விளைஞனும் அவைகளை எடுத்துக் கொண்டு கட்டார் சென்றுள்ளார். கட்டார் விமான நிலையத்தில் வழமை போன்று இவரது பொதிகளையும் சோதனையிட்ட போதே எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.

இவர் கொண்டு வந்த மருந்துகளை அவதானித்த கட்டார் குடிவரவு குடியகழ்வு அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். இம்மருந்துகள் அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மருந்துகள் தொடர்பில் பூரணமான விளக்கம் இவ்விளைஞரிடமிருந்து கிடைக்கவில்லை. இதனால் மருத்துவரின் மருந்து சான்றிதழை அதிகாரிகள் கேட்டுள்ளனர். எனினும் இவ்விளைஞனிடம் மருத்துவ சான்றிதழும் இருக்கவில்லை.

இதன் காரணமாக இவ்விளைஞன் கொண்டு வந்த மருந்துகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்த அதிகாரிகள் மருத்துவ அறிக்கையை பார்த்து அதிர்ந்து போய்விட்டார்கள்.

ஏனெனில் இவ்விளைஞன் ஊரிலிருந்து கொண்டு வந்த மருந்துகள் கட்டாரில் தடைசெய்யப்பட்டவையாகும்.

இதன் காரணமாக இவ்விளைஞன் கட்டார் பொலிசாரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு தற்போது சிறையில்; வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் நாளை அல்லது இன்னும் ஒரு சில தினங்களில் இவரை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்கவும் கட்டார் குடியவரவு குடியகழ்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இவர் தன்னகத்தே வைத்திருந்த மருந்துகள் கட்டாரில் தடைசெய்யப்பட்டுள்ளவை என்பதினால் இவரது கடவுச்சீட்டை குற்றவியல் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் மத்திய கிழக்கில்  உள்ள அனைத்து நாடுகளுக்கும் இனிமேல் பயணிக்க முடியாதவாறு அவரது கடவுச்சீட்டும் தற்போது முடக்கப்பட்டுள்ளதாக கட்டார் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இவ்விளைஞனை வெளியில் கொண்டு வருவதற்கு இவரது கட்டார் நண்பர்கள் பல முயற்சி எடுத்தும் எதுவும் பயணளிக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.

எச்சரிக்கை குறிப்பு
இவ்விளைஞன் செய்த குற்றம் தான் என்ன? தனது நண்பரின் பெற்றோர்கள் வழங்கிய மருந்துகளை கட்டார் கொண்டு போனமை ஒரு குற்றமா என்று நாம் இலகுவாக நினைத்துவிடலாம். ஆனால் மருத்துவ சான்றிதழ் இல்லாமல் எந்தவித மருந்துகளையும் வெளிநாட்டு பயணங்களில் கொண்டு போவது நமக்கு ஆபத்தையே ஏற்படுத்தும். அதற்கு இச்சம்பவம் ஒரு முன்னுதாரணமாகும்.

வெளிநாடுகளுக்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து மீண்டும் குறித்த நாட்டுக்கு திரும்பும் போது நமது உறவினர்கள் – தெரிந்தவர்கள் வழங்கும் பொருட்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவை ஆபத்திலேயே முடியும்.

எவ்வித தவறும் செய்யாத இவ்விளைஞன் இன்று சட்டத்தின் முன் குற்றவாளியாக கைகட்டிக் கொண்டிருக்கின்றார். இந்த நிலைமை நாளை நமக்கும் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள்.

Web Design by Srilanka Muslims Web Team