அசாத் சாலிக்கு விளக்கமறியல்: நேரில் சென்று பார்வையிட்டு நீதிவான் உத்தரவு..! - Sri Lanka Muslim

அசாத் சாலிக்கு விளக்கமறியல்: நேரில் சென்று பார்வையிட்டு நீதிவான் உத்தரவு..!

Contributors

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று (17) அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அசாத் சாலியின் கைது தொடர்பில் பிரதானமாக மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தை கோடிட்டு, அடிப்படைவாதிகளை பாதுகாத்ததாக கூறி கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல முன்னிலையில் சி.ஐ.டி. அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று அந்த குறித்த வழக்கு நகர்த்தல் பத்திரம் ஊடாக மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அதன்படி சனூன் சாலி மொஹம்மட் அசாத் எனப்படும் அசாத் சாலி தொடர்பில் இடம்பெற்ற தடுப்புக் காவல் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறு சிஐடி நீதிமன்றை கோரியது.

எனினும் சுகயீனம் காரணமாக அசாத் சாலி தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் நிலையில், அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. இதனையடுத்து நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் தேசிய வைத்தியசாலைக்கு சென்ற பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, அசாத் சாலியை அங்கு பார்வையிட்டதன் பின்னர் அவரை எதிர்வரும் 31 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதனையடுத்து அசாத் சாலி, சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் தேசிய வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து சிகிச்சைபெற அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team