அசாத் சாலி விவகாரம்; CIDக்கு நீதிபதி காட்டம்..! - Sri Lanka Muslim

அசாத் சாலி விவகாரம்; CIDக்கு நீதிபதி காட்டம்..!

Contributors

கடந்த மார்ச் மாதம், ஊடக சந்திப்பொன்றில் வைத்து நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி விவகாரத்தில் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் திரிபு படுத்தப்பட்ட ஆதாரங்களை வைத்துக் கொண்டு தவறாக செயற்பட்டிருப்பதாக காட்டம் வெளியிட்டுள்ளர் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் புத்திக சி. ராகல.

அத தெரன – ஹிரு போன்ற ஊடகங்களில் வெளியான ‘வெட்டி’ ஒளிபரப்பப்பட்ட காட்சிகளும் அதிலடங்குகின்ற பேச்சுக்களுமே இவ்வாறான தோற்றப்பாட்டை உருவாக்குகிறதன்றி முழுமையான ஊடக சந்திப்பை செவி மடுத்தால், அதில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் வகையிலேயே கருத்துக்கள் அமைந்துள்ளதாக நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், மேல் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு பிணை வழங்கும் அதிகாரமில்லையென்பதால் மேல் நீதிமன்றிலேயே பிணையைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டியுள்ளதாக அசாத் சாலி சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, குறித்த ஊடகங்களின் திரிபு படுத்தப்பட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபர் அலுவலகம் மேல் நீதிமன்றில் அசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளமையும், சரியாகப் பார்த்தால் குறித்த ஊடகங்களையே விசாரிக்க வேண்டும் என நீதிபதி புத்திக சி. ராகல சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் மேல் நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது மஜிஸ்திரேட்டின் விளக்கம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை தொடர்கிறது.

Web Design by Srilanka Muslims Web Team