அசிங்கமாய்த் தொங்குகிறது அமைதி எனும் ஆடை! » Sri Lanka Muslim

அசிங்கமாய்த் தொங்குகிறது அமைதி எனும் ஆடை!

yea

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


21ம் நூற்றாண்டு எனும்
இலத்திரணியல் பூமி
பதினேழை அடைந்த
படபடப்பில் இருக்கிறது.

இரண்டு துருவங்களிலும்
இயற்கை தலை வழிக்க
நடுவில் மட்டும்
நாகரிகமாய் நீட்டி நிற்கிறது
டீன் ஏஜ் பூமியின் தலை.

சிரியக் குழந்தைகளை
சிவப்பாக அரைத்து
பொலிடிக்கல் நகங்களுக்கு
பொலிஷ் இடப்பட்டிருக்கிறது.

அரபு ஆட்சிகளில்
ஆங்காங்கே துளையிட்டு
ஏகாதிபத்தியத்தின்
இமிடேஷன்கள் கொழுவப்பட்டுள்ளன.

அதன்
கண் புருவமாய் இருக்கும்
காடுகளை வழித்து விட்டு
செயற்கை அழகுகள்
சீமெந்திகளால்
சிங்காரமாக்கப் படுகின்றன.

ஆலைகளில் உள்ள
ஆகாயம் நோக்கிய குழாய்களால்
சிகரட் புகை தள்ளி
சிதைக்கிறது வாழ்வை.

நவீனம் எனும் பெயரில்
ஆங்காங்கே பிய்ந்து
அசிங்கமாய்த் தொங்குகிறது
அமைதி எனும் ஆடை. – இது
அராஜகத்தால் வந்த பீடை.

இந்த டீன் ஏஜ் பூமி
இன்னும் வாழ்கிறது
இறைவன் கருணையே.
இல்லையென்றால்
இந்தக் கொடுமைகளால்
எப்போதோ செத்திருக்கும்
இருபத்தோராம் நூற்றாண்டெனும்
இந்த
இலத்திரணியல் பூமி.
(நிஷவ்ஸ் – 01/01/2016)

Web Design by The Design Lanka