அடுத்தவாரம் பாராளுமன்றில் நடக்கப்போவது என்ன? - Sri Lanka Muslim

அடுத்தவாரம் பாராளுமன்றில் நடக்கப்போவது என்ன?

Contributors

அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை இன்று (03) நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று (03) கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது. அதில், கீழ்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.

  1. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்து 09, 10 மற்றும் 12ஆம் திகதிகளில் சபை ஒத்திவைப்பு விவாதம்  
  • 2022 வரவு-செலவுத்திட்டத்துக்கான திருத்தச் சட்டமூலம் 09ஆம் திகதி சமர்ப்பிப்பு
  • 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 10ஆம் திகதி சமர்ப்பிப்கு

ஜனாதிபதி இன்று (03) பாராளுமன்றத்தில் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 09, 10 மற்றும் 12ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர்   மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று நாட்கள் விவாதத்துக்கு வழங்குமாறு கட்சித் தலைவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய பாராளுமன்றம் எதிர்வரும் 09ஆம் திகதி பி.ப 1.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் பி.ப 4.30 மணி வரை விவாதம் நடைபெறும். அத்துடன், எதிர்வரும் 10 மற்றும் 12ஆம் திகதிகளி்ல் மு.ப 10.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை பாராளுமன்றம் கூடவுள்ளது. இந்த விவாதம் சபை ஒத்திவைப்பு விவாதமாக இடம்பெறும் என்றும், விவாதம் நிறைவடையும்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் 09ஆம் திகதி  2022ஆம் வருடத்துக்கான 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலமும், எதிர்வரும் 10ஆம் திகதி 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதேநேரம், பாராளுமன்றக் கூட்டத்தொடர் அண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இரத்துச் செய்யப்பட்ட குழுக்களைப் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் நியமிப்பது தொர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கு அமைய தெரிவுக் குழுவை (Committee of Selection) எதிர்வரும் 09ஆம் திகதி அமைத்த பின்னர்  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உள்ளிட்ட ஏனைய குழுக்களை விரைவில் நியமிப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team