அடுத்த ஜனாதிபதி போட்டிக்களத்தில் ஞானசாரர்! » Sri Lanka Muslim

அடுத்த ஜனாதிபதி போட்டிக்களத்தில் ஞானசாரர்!

bbs

Contributors
author image

Editorial Team

நாட்டுக்கு பாரிய ஆபத்தாக வர்ணிக்கப்பட்டு வரும் ஞானசார தேரர் விடயத்தில் அரசு சற்று இழுபறியான நடவடிக்கைகளையே கையாண்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் அவரைப் பிடிப்பதற்காக விஷேட பொலிஸ் குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடி உள்ளனர்.

இது இவ்வாறு இருக்க பொதுபலசேனா அமைப்பினர் ஞானசாரர் ஒளிந்து கொள்ளவும் இல்லை தக்க சமயம் வெளிவருவார் என்று தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமல்லாது அரசுக்கோ, அல்லது மகிந்த ராஜபக்சவிற்கோ ஞானசாரர் விடயத்தில் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ள அவர்கள்.,

மிக முக்கியமான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எவருமே ஞானசாரரைக் காப்பாற்றிக் கொண்டு வரவில்லை எனவும் தெரிவித்தனர்.

அவர்களின் இந்த கருத்துகள் ஞானசாரரின் விடயத்தில் அரசுக்கும், மகிந்த தரப்பினருக்கும் தொடர்புகள் இல்லை என்பதனை வலுப்படுத்துவதற்காகவே கூறப்பட்டவையாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இவற்றையும் தாண்டி நேற்றைய ஊடக சந்திப்பில் பொதுபலசேனா அதிரடியான கருத்து ஒன்றை தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

அதாவது, 2020ஆம் ஆண்டில் சம்பிக்க ரணவக்க ஜனாதிபதியாக வருவாரா அல்லது மகிந்த ராஜபக்ச வருவாரா என்பது தெரியாது. இவர்களின் மீது நம்பிக்கையும் இல்லை.

ரணிலும் கூட இதில் அடக்கம். இவர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் அவர்கள் பௌத்தத்தை காக்கப்போவது இல்லை. அந்த விடயம் எமக்கு அவசியமும் இல்லை.

ஆனால் இப்போது மக்கள் தெரிவித்து வரும் கருத்தானது, பௌத்தத்தைக் காப்பாற்றவும், சிங்கள – பௌத்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்றால் ஞானசார தேரர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதே.

அந்தநிலைக்கு இப்போது அரசியல் தரப்பும் தள்ளிவிட்டு விட்டது என்று பொதுபலசேனா தரப்பு கூறியுள்ளது.

இதுவரை காலமும் அரசியலில் எமக்கு எந்தவித ஈடுபாடும் இல்லை எனத் தெரிவித்து வந்த பொதுபலசேனாவினரும், ஞானசார தேரரும் தற்போது அரசியலிலும், அடுத்த ஜனாதிபதியாகும் நோக்கத்தோடு செயற்படுகின்றார்களா? என்ற பாரிய சந்தேகத்தினை இந்தக் கருத்துகள் ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஞானசார தேரரும் நாட்டில் பௌத்தம் அழிக்கப்படுகின்றது என கூறிக்கொண்டு தன் பக்கம் சிங்கள, பௌத்த மக்களின் ஆதரவினைத் திரட்டிக் கொண்டு அரசியல் அதிகாரத்திற்காக போட்டியிடத் தயாராகி விட்டாரா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

எவ்வாறாயினும் அவர் அரசியல் பக்கம் சாய்வது என்பது நாட்டிற்கு பாரிய ஆபத்தாகவே அமையும் என்பது அரசியல் புத்திஜீவிகளின் கருத்து.

தற்போது ஞானசாரர் மற்றும் பொதுபலசேனா தரப்பினர் அனைவரும் தமக்கு மகிந்தவோ, மைத்திரியோ, ரணிலோ அல்லது அரசு தரப்பு ஆதரவோ அவசியம் இல்லை என்றே கூறிவருகின்றனர்.

வெளிப்படையில் இவர்களைப் பகைத்துக் கொள்ளும் வகையிலான கருத்துகளையும் தற்போது வெளியிட்டு வருகின்றனர். ஒரு வகையில் பொதுபலசேனாவிற்கு பௌத்த மக்களிடையில் பெருமளவு ஆதரவு காணப்படுகின்றது.

ஞானசாரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது என்பது அரசுக்கு ஆபத்தாக விடயமாக மாறிவிடும் என்ற காரணத்திற்காகவே அரசு அமைதியாக செயற்பட்டு வருவதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

எவ்வாறாயினும் ஞானசாரர் அரசியல்வாதியாக மாறுவதும், அடுத்த ஜனாதிபதியாகும் எண்ணத்துடன் செயற்படுவது என்பதும்.,

இலங்கை அரசியல் பாதையில் ஓர் திருப்புமுனையை ஏற்படுத்துவதோடு, அது நாட்டுக்கும், இப்போதைய அரசுக்கும் மட்டுமல்லாது ஆட்சிக் கனவுடன் இருக்கும் மகிந்தவிற்கும் பேரிடியாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.

ஞானசாரரின் அண்மைக்கால கருத்துகளும் அவர் அரசியலில் ஈடுபடும் நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றார் என்பதனையே வலியுறுத்தும் வகையில் அமைகின்றமையும் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

Web Design by The Design Lanka