'அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியல் தலைவரின் இரகசிய வாக்குறுதி அல்ல -பழீல் பீஏ - Sri Lanka Muslim

‘அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியல் தலைவரின் இரகசிய வாக்குறுதி அல்ல -பழீல் பீஏ

Contributors
author image

பி. முஹாஜிரீன்

 

‘அட்டாளைச்சேனைக்குரிய தேசியப்பட்டியல் மு.கா. தலைவரின் இரகசிய வாக்குறுதி அல்ல. எல்லா மேடைகளிலும் போராளிகள் மத்தியிலே அறுதிபட, ஆணித்தரமாக, பகிரங்கமாக அடித்துச் சொல்லப்பட்ட ஒன்று. தேசியத் தலைமையின் வாக்குறுதியை நம்பித்தான் கடந்த தேர்தலில் நம்பிக்கையோடு அம்பாரையில் மு.கா. போட்ட மூவருக்கும் வாக்களித்து அம்மக்கள் வரலாறு படைத்திருக்கின்றார்கள். அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நிச்சயிக்கப்பட்டதனால்தான் கழியோடைக்கப்பால் தேர்தலுக்கான வேட்பாளரே நிறுத்தப்படவில்லை’ என முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் அட்டாளைச்சேனை எஸ்.எல்.எம். பழீல் பீஏ தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) ஓலுவில் துறைமுக விடுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின்போது தலைவர் தன்னை கடிந்து கொண்டதை வைத்து, ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பழீல் பீஏ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இருந்துவருகின்ற ஈடுபாடு, பிணைப்பின் ஆழம் புரியாமல், சமகாலத் தலைமைத்துவத்தோடு எனக்கிருக்கின்ற பந்தபாசத்தின் சிநேகபூர்வ அடிப்படையிலான விசுவாசத்தின் இஸ்லாமிய அடிப்படை விளங்காமல், என்னைப்பற்றி விமர்சிப்பதும் எழுதுவதுமாக இருக்கின்றபோது நாம் வாய்திறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

நாம் உண்மையாக உள அடிப்படையில் விரும்பாவிட்டாலும், சிலருக்கு மட்டுமே தெரிந்து பலருக்குத் தெரியாமலிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டிய அநாகரிக ‘மேதாவிலாஷத்திற்கும்’ அப்பால் சென்று இந்த ‘சுயவிலாசாம்பிரத்தை’ எடுத்துக்கூறவேண்டிய உந்துதலுக்கு ஆட்படுத்தப்பட்ட இக்கட்டில் நான் மாட்டியிருக்கின்றேன்;.

என்னோடு தலைவைர் ரவூப் ஹக்கீமைச் சந்திக்கச் சென்ற சுமார் 20க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் சமகால அரசியல் விடயமாக கலந்துரையாடினோம். அம்பாரை மாவட்ட கரும்புக்காணிச் செய்கையாளர்களின் தீராத பிரச்சினை, அவர்களின் விரக்தியுற்ற ஏழ்மையினை பயன்படுத்தி ஏப்பமிடத் துடிக்கும் கையாகாலாகாத வக்கற்ற அரசியல் போக்கு பற்றி தலைமைக்கு எடுத்துரைக்க வேண்டியது எமது அவசர கடமை என எண்ணினோம். ஏனெனில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இப்பிரச்சினையில் தலைமையின் வழிகாட்டலில் ஜனாதிபதி மட்டத்திற்கு கொண்டு சென்று அப்பிரச்சினையினை கபினட் உபகுழுவிற்கு உட்படுத்தி நிரந்தர தீர்விற்காக, அரசின் கொள்கைத் தீர்மானத்திற்காக காத்திருக்கின்றோம். இவ்விடயம் பற்றி போதிய அறிவும் அதன் ஆழ அகலமும் தெரிந்த கபினட்டிலுள்ள ஒரேயொரு அமைச்சராகவே எமது தலைவர் ரவூப் ஹக்கீமைப் பார்க்கின்றோம். இப்பிரச்சினை அவரூடாக மட்டும்தான் தீர்க்கப்பட முடியுமென்பதிலும் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். கொழும்பிலும், பாராளுமன்றத்திலும் பலதடவைகள் பலகூட்டங்களில் இதற்காக கலந்துரையாடியிருக்கின்றோம்.

ஆனால் மற்றவர்கள் நினைப்பதுபோல் அட்டாளைச்சேனையின் தேசியப்பட்டியலுக்காகத்தான் பழீல் எப்போதும் தலைவரை சந்திக்கின்றார் என்பது வெற்றுக் கண்களிலே படுகின்ற அரண்டவன் கண்களுக்கு தெரிகின்ற காட்சி. ஆனால், மறுபுறத்தில் கழியோடைக்கப்பால் பொத்துவில் வரை வாழும் வாக்களித்த சுமார் 85,000 மக்களின் நம்பிக்கை எதிர்பார்ப்பு, உணர்வுகளை மதிக்காத, புரியாத அல்லது ஒரு கனதியான காரணியாக கண்டுகொள்ளாத தலைமையல்ல நமது மு.கா. தலைமை.

30வருடமாக தியாகங்களோடும், அர்ப்பணிப்புகளோடும் நிரல் பிறழாது மு.கா அரசியலில் முனைப்பாக இன்றும் செயற்படும் மக்கள். 19வது தேசிய மாநாட்டையும் கரைபுரண்ட மக்கள் வெள்ளத்தோடு நடாத்திக்காட்டி சமுதாய உணர்வில் அயராதுழைக்கும் இம்மண்ணுக்கு தேசியப்பட்டியல் ஒரு எட்டாக்கனி அல்ல. அதை தலைமை விரைவில் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை நெருங்கிய விசுவாச போராளிகளான எமக்கு உண்டு. ஆனால் இதை ஒரு நக்கலான பேசுபொருளாக, நையாண்டி மந்திரமாக, வக்கற்ற ஊடக எழுத்தாக மாற்ற வேண்டிய தேவை எவருக்கும் கிடையாது. இந்த விவகாரத்தில் என்னை அவமானப்படுத்தும் நோக்கோடு தொடர்புபடுத்தி எமது உள்ளக அரசியல் கற்றுக் குட்டிகளும் கட்சியின் 30வருட வரலாறு புரியாத மற்றவர்களும் கற்பனைக் கதைகளை புனைந்து பேனாமுனையின் புனிதத்துவத்தை மதியாது, உண்மை புரியாது தாறுமாறாக எழுத முற்படுவதும் கண்டனத்துக்குரியது.

இப்பிரதேசத்தில் மறைந்த தலைவர் அஷ்ரபின் சமுதாய வாசகங்களினால் ஈர்க்கப்பட்டு, நாடி நாளங்களில் சமுதாய முறுக்கேற்றப்பட்டு சமுதாயக் கரிசனையுள்ள போராளியாக மாறியவன் நான். கல்முனையிலே வங்கி முகாமையாளர் தொழிலை இழந்து, இந்த அர்ப்பணிப்பு அரசியலில் இன்று வரையும் பலருக்கு அரசியல் ஏணியாக அமைந்து இறைவனின் பொருத்தத்துடன் சமுதாயத்துக்காக முடியுமானதை, ஹலாலாக செய்துவிட்டு இறைவனிடம் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு போராட்ட அரசியலைத் தொடர்பவன். செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலை வரையும் தண்டனை அனுபவித்து, தொடர் தேர்ச்சியான நீதிமன்ற வழக்குகளுக்கு மாதாமாதம் ஏறிஇறங்கி எனது வாழ்க்கையையே சமுதாய அரசியலுக்காக அர்ப்பணித்து இன்னும் சவால்களை எதிர்நோக்குபவன். ஆனால் பட்டம் பதவி அல்லாஹ்வின் நாட்டத்திலுள்ளது அவன் நாடிய நேரத்தில்தான் நிதர்சனமாகும் என்ற அசையாத நம்பிக்கையுமுள்ளவன்.

ஆகவே, இது சமுதாயத்திற்கான தொடர்ச்சியான போராட்டம். இதை இறைவனின் திருப்திக்காக தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். இது சந்தர்ப்பவாத அரசியலில் மற்றவனுக்கு குழிபறித்து, குறுகிய ஆதாயம் தேடும் ‘ஹைபிரைட்’ போசாக்கு தமாஷா அல்ல. என்னை மலினப்படுத்தி, அவமானப்படுத்தும் நோக்கோடு பார்க்க வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன்.’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team