அதிகாரப் போட்டி » Sri Lanka Muslim

அதிகாரப் போட்டி

politics

Contributors
author image

M.M.A.Samad

பொதுவாக ஒரு தேசத்தின் மக்களை அல்லது ஒரு சமூகத்தின் அங்கத்தவர்களை ஒற்றிணைப்பதும், பிரித்தாள்வதும் சமூக, மற்றும் அரசியல் சூழ்நிலைகள்தான். இச்சூழ்நிலைக் காரணிகளே மக்கள் ஒன்றிணைந்து செயற்படவும், பிளவுபட்டு நிற்கவும் வழியமைக்கிறது. இவற்றுக்கு அரசியல், சமூக ரீதியாக உருவாகும் அதிகாரப் போட்டிகள் காரணமாகின்றன. இலங்கையின் வரலாற்றில் அரசியல் மற்றும் சமூக அதிகாரப் போட்டிகள் ஏற்படுத்திய விளைவு 30 வருடங்கள் இந்நாட்டை யுத்த மேகங்கள் சூழ்ந்திருக்க வழிவகுத்தது.

அந்நிய ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பிற்பாடு இந்நாட்டில் வாழும் இனங்களுக்கிடையே இனமுறுகளும், முரண்பாடுகளும் விரிவடைந்தன. இதன் பின்னணியில் அரசியல்வாதிகளும், சமூகத்தின் மத்தியில் செயற்பட்ட கடும்போக்கு பேரினவாதிகளும்; தங்களது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகச் செயற்பட்டதனால் ஓரினத்தின் மீது பிரிதொரு இனம் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை வீரியமடையச் செய்தன.

ஒடுக்கப்படும் இனம் தமக்கிடையே நிலவும் பொது அடையாளத்தைக் கொண்டே தம் மீது ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாக உணரும். இவ்வுணர்வானது ஒடுக்குமுறைகளிலிருந்து இனத்தைப் பாதுகாப்பதற்காக அவ்வினம் ஒன்றிணைய வேண்டிய தேவையும், எழுச்சியும் உருவாக்கும். இவ்வாறு ஒடுக்கப்படும் ஒரு சமூகம் மொழி, மதம், காலாசாரம், பொருளாதாரம், நிறம், பிரதேசம், பாரம்பரியம், இனம், பொதுவான வரலாற்று அனுபவம் என பல்வேறுபட்ட காரணிகளில் ஒன்று அல்லது பலவற்றின் மூலம்  தங்களுக்குள் ஒன்றிணைக்கின்றன. இவை உலகின் நியதியாகும்.

இந்நாட்டில் வாழுகின்ற தமிழினம் பெரும்பான்மை பேரினவாத சக்திகளால் ஒடுக்கப்பட்டபோது அல்லது அலைக்கழிக்கப்பட்டபோது, உரிமைகள் மறுக்கப்பட்டபோது அவ்வாறான செயற்பாடுகளால் ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் ஒன்றிணைக்கப்பட்டு அரசியல் கட்சி சார்பான அகிம்ஷைப் போராட்டங்களை முன்னெடுத்தது. முன்னெடுக்கப்பட்ட அப்போராட்டங்கள் வெற்றி பெறாது என்ற நிலை உருவானபோது அப்போராட்டமானது ஆயுதப் போரட்டத்திற்கு வித்திட்டடது,

இவ்வாயுதப் போராட்டம் வடிவத்தின் விளைவு அழிவுகளாக அமைந்ததும் அழிவுகள் யுத்த முடிவினூடாக நிறைவுக்கு வந்ததும் தெரிந்த வரலாறுகளாகும். இவ்வரலாற்றின் முடிவில் அரசியல்  பலத்துடன்; பயணிப்பதன் மூலம் தீர்வைப் பெறுவதென்பது அவசியமாயிற்று.

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் அரசியல் பயணம்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்படாது காலம் கடத்தப்பட்ட நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் மக்களினதும் பெரும் ஆதரவுடன் 2015ல் உருவாக்கப்பட்ட நல்லாட்சி எனப்படும் கூட்டு அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றமானது சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளும், தமிழ்  தேசியக் கூட்டமைப்பும் இந்நல்லாட்சியுடன் இணைந்து பயணிப்பதைக் காணலாம்.

குறிப்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்த அரசியல் பயணம் கூட்டமைப்பிலுள்ள ஒரு சிலரின் நன்மைக்கானது என்றும், இதனால் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாது என்றும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைபின்; அரசாங்கத்தோடு இணைந்த இப்பயணமானது நடைபெறவுள்ள இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இரு துருவங்களாக பிரித்திருப்பதோடு, இரு கூட்டமைப்புக்களாக வடக்கு, கிழக்கில் தேர்தல் களத்தில்  போட்டியிடவும் வழிவகித்திருப்பதைக் காணலாம்.

இவ்வாறன நிலையில், கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பயணம் ஆரம்பப் புள்ளியை நோக்கி நகர்வதைக் காண முடிவதுடன், இத்தேர்தலை அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டியாகவும், கட்சி அரசியலை முன்கொண்டு செல்வதற்கு  முஸ்லலிம் அரசியல் தலைமைகள்  செயற்படும் நிலைமையையும் அவதானிக்க முடிகிறது. எத்தகைய நோக்கத்திற்காக  தனித்துவ கட்சிக்கான எழுச்சி ஏற்பட்டதோ அவ்வெழுச்சியானது திசைதிருப்பட்டு பதவிகளையும,; சுகபோகங்களையும், அனுபவிப்பதை இலக்காக்கொண்டு முஸ்லிம் அரசியல் பயணிக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

கிழக்கு முஸ்லிம்களும்  அரசியல் எழுச்சியும்
இலங்கை வாழ் முஸ்லிம்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம்கள் பெரும்பான்மை இனக்கட்சித் தலைமைகளினால் புறக்கணிக்கப்பட்டமை;, காணிப்பறிப்பு, விவசாயத்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையில் சிங்கள குடியேற்றத்தின்  விளைவால் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதாரப் பாதிப்புக்கள், ; பேரினவாதத்திற்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட உணர்வுகள்;, இதனால் முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களுடன் இணைவதற்கு காட்டிய ஆர்வம், தமிழ் தரப்பு கட்சிகளில் உரிய இடம் கிடைக்காமை, தமிழ் போராளிக்குழுக்களின் நெருக்குவாரங்கள் என அன்று தொடர்ந்த நிகழ்வுகள்  வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒன்றிணையவும், ஒனறிணைக்கப்பட வேண்டிய தேவையையும் உருவாக்கியது.

சமூகத்திற்குள் காணப்படும் இதர வேறுபாடுகளை கடந்து பொது அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து தமக்கென தனியான அரசியலை முன்னெடுக்கக் கூடிய இயக்கத்தின் தேவை அக்கால கட்டத்தில் சமூகத்திற்காக சிந்திக்க கூடியவர்கள் மத்தியில் வெகுவாக உணரப்பட்டது. அவ்வுணர்தலானது 1980களில் வலுப்பெற்றது. இவ்வாறு குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்த அரசியல் எழுச்சியும் சிறந்த தலைமைத்துவ வழிகாட்டலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கதை உருவாக்கியதுடன் அதனை பெரு விருட்சமாக்கவும் செய்தன.

கடந்த காலங்களில் ஒடுக்குமுறைகளுக்கும,; நெருக்கடிகளுக்கும் அதிகம் உள்ளாக்கப்பட்டவர்கள் வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம்கள் என்பதிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. ஏனெனில், இலங்கை முஸ்லிம்களின் குடித்தொகையில் வடக்கு மற்றும் கிழக்கிலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்றனர். அதிலும் அதிகப்படியான முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கிறார்கள். இவ்வாறு செறிந்து வாழ்வதானது முஸ்லிம்களின் அரசியலில் பலமிக்கதாகவும் காணப்படுகிறது.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரவேசம் 1987ஆம் ஆண்டு நடைபெற்ற வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலினூடாக ஆரம்பமானது. அத்தேர்தலில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை வென்றது. முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஒரு அரசியல் கட்சியின் தேவையை முஸ்லிம்கள் உணர்ந்ததன் விளைவு  முஸ்லிம் காங்கிரஸ் இம்மாகாண சபைத் தேர்தலில் 17 ஆசனங்களை வெற்றிகொள்ள வழிசமைத்தது.

1988ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையாளராக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 1989ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மரச்சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் வடக்குக், கிழக்கு முஸ்லிம்களின் 202,016 வாக்குகளைப் பெற்று கிழக்கில் 2 ஆசனங்களையும் வடக்கில் ஒரு ஆசனத்தையும் போனஸ் ஆசனம் ஒன்றையும் பெற்றுக்கொண்டது. இந்த 4 ஆசனங்களும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாது முழு இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களின் குரலாக பாராளுமன்றத்தில் செயற்பட்டது.

1987ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் வடக்கை விடவும் கிழக்கில் கனிசமான வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது. கட்சியின் ஆரம்ப காலத்திலோ அல்லது கட்சியின் வளர்ச்சியிலோ பங்களிப்புச் செய்யாதவர்களை, கட்சியக்காக எவ்வித தியாகங்களையும் புரியாதாவர்களைக் கூட கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள்; பாராளுமன்ற உறுப்பினர்களாகவும,;  மாகாண சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களாக பதவி வகிக்கச் செய்திருக்கிறது. தேசிய பட்டியல் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

இவ்வாறு கடந்த காலங்களில் இக்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் தனிநபர் செல்வாக்கிற்காகவோ அல்லது அவர்களால் புரியப்பட்ட மக்கள் சேவைகளுக்காகவோ அல்ல. மாறாக முஸ்லிம் என்ற அடையாளத்துடன் ஒடுக்குமுறைக்கும் புறக்கணிப்புக்களுக்கும் நிவாரணம் தேடியபோது ஏற்பட்ட ஒட்டுமொத்த அரசியல் எழுச்சியின் விளைவாக உருவான கட்சி என்பதற்காகவும்.; முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஸ்தாபத் தலைவரின் மரணம் வரையான 2000ஆம் ஆண்டு காலப் பகுதி வரை இக்கட்சியின் அவசியத்தையும,; அதன் சமூகப் பங்களிப்பையும், இக்கட்சியின் ஆதரவுச் சக்தியினூடாக எவற்றையெல்லாம் அடைய முடியும் என்ற யதார்த்தத்தையும் வலியுறுத்தி, வழிகாட்டி, இக்கட்சியை யதார்த்த பூர்வமாக்கிய அந்த அஷ்ரப் எனும் ஜனரஞ்சகத் தலைவரை இம்மக்களால் மறக்க முடியாமல் இருப்பதுவுமே காரணங்கள் என்று கூறப்படும் கருத்துக்களையும் நிகாரிக்க முடியாது.   

சமூகத்தின் உயர் வர்க்கத்தினரைத் தவிர சாதாரண விவசாயி முதல் பலசரக்குக் கடை முதலாளி வரை முஸ்லிம் காங்கிரஸ் என்பது கிழக்கு முஸ்லிம்களின் தேசிய எழுச்சியினூடாக கட்டியெழுப்பப்பட்ட கட்சி என்பதும் கிழக்கு மக்களால் மறக்கப்பட முடியாத   தலைவர் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற பார்வையுயே இன்றும் இம்மக்கள்;pன் மனப்பதிவாகவுள்ளன.

மக்களின் இந்நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு நடைபெறும் ஒவ்வொரு தேர்தல்கள் மூலம் கிடைக்பெற்ற அதிகாரங்களின் பயன்களை, மரத்தை வளர்த்தவர்கள் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவர்கள் பகடையக்காய்களாக பயன்படுத்தப்பட்டு, இக்கட்சியின் வளர்ச்சி;க்காக ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்கள் அவற்றை அனுபவிக்க இக்கட்சியின் தற்போதைய தலைமை வழிசமைத்தமை இக்கட்சி மீதான வெறுப்புக்கும், அதிருப்திக்கும் காரணமெனக் குறிப்பிடப்படுவதையும் பதிய வேண்டியுள்ளது.

தேர்தல் காலங்களில் அஷ்ரபின் புகைப்படங்களை போஸ்டகர்களிலும் பெனர்களிலும் பதியச் செய்து அம்முகத்தின் மறைவில் வெற்றியடைந்து அரசியல் அதிகாரங்களைப் பெற்ற பின் வாக்களித்த மக்கள் குறித்து எவ்வித அக்கறையுமின்றி செயற்படுவதற்கு நடைபெறவுள்ள இத்தேர்தல்; முஸ்லிம் காங்கிரஸுக்கு வாய்ப்பளிக்காது என மாற்றுக் கட்சிக்காரர்கள் குறிப்பிட்டு வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

கட்சி அரசியலும் தவறும் இலக்குகளும்    
இந்நிலையில்; கிழக்கு முஸ்லிம்களிடையே  இற்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் எழுச்சியின் இலக்குகள் மறக்கப்பட்ட நிலையில்  தொடங்கிய அதே புள்ளிக்கு மீண்டும் திரும்புவதை உணர முடிவதாகக் கூறப்படுகிறது. பச்சையும் வேண்டாம் நீலமும் வேண்டாம் என்ற அன்றைய அரசியல் நிலைப்பாடு மாற்றப்பட்டு நீலத்திலும், பச்சையிலும் தேர்தலில் களமிறங்கினால்தான் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளலாம், பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்கலாம் என்ற நிலை முஸ்லிம் அரசியலில் உருவாகியிருப்பது முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் பலத்தை கேள்விக்குறிக்குள் தள்ளிவிட்டது எனக் கூறப்படுவதை நிராகரிக்க முடியாது.

இந்நிலைமை இத்தேர்தல் உருவாக்கியிருக்கிறது. இச்சூழல் உருவாகுவதற்கு வழிவிட்டதும் இத்தலைமைகள்தான் என குற்றச்சாட்டப்படுவதை மறுக்க முடியாது. ஏனெனில், அரசியல் பலமிழந்து ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து அரசியல் அரங்கில் அங்கம் வகிப்பதனால் சமூகத்திற்கெதிராக ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களுக்காக ஒருமித்து குரல் கொடுக்க முடியாத நிலையானது எதிர்கால முஸ்லிம் அரசியலின் ஆபத்துக்கான சமிஞ்சையாகும்.

சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவத்தில் குறைவை ஏற்படுத்தக் கூடியதும் பிரதிநிதிகளை அதிகளவில் பெறுவதற்கு பிரதான கட்சிகளில் தங்கிருப்பதற்குமானதொரு தேர்தல’ முறைமையாக இக்கலப்புத் தேர்தலை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான தேர்தல் திருத்தச் சட்டம் வெற்றி பெற ஆதரவு வழங்கியமை முஸ்லிம் அரசியலின் பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என விமர்சிக்கப்படுவதையும் ; ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஏனெனில், சிறுபான்மை கட்சிகள் அல்லது சிறிய கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனச் அச்சம் கொள்ளும் இத்திருத்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும்  குறைந்தபட்சமாக 5 விகித வாக்குகளைப் பெற்றிருந்தாலேயே கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் வட்டாரங்கள் மூலமாக 60 வீகிதப் பிரதிநிதிகளும், விகிதாசாரம் மூலமாக 40 விகிதப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படவுள்ளனர். தேர்தலின்போது வட்டாரங்களின் மூலமாக வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்குத் தொகையைக் கழித்துவிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களின் வாக்குத் தொகைகள் சேகரிக்கப்படும். அத்தொகைகள் வேட்பாளர்களின் கட்சிக்ளுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் இந்த 40 விகித விகிதாசாரத் தெரிவு நடைமுறையாகின்றது. இச்சந்தர்ப்பத்தில்தான் இத்தேர்தல் முறைமைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 விகித வெட்டுப்புள்ளி சிறுபான்மைக் கட்சிகளைப் பாதிக்குமெனக் கூறப்படுகிறது.

ஏனெனில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 5 விகித வாக்குகளைப் பெறாத வேட்பாளர்களின் வாக்குகள் இக்கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்படாது. இதனால், சிறுபான்மை கட்சிகளின் வாக்குத் தொகை கணிசமாகக் குறையும். ஆதலால், நேரடியாக வட்டாரங்களின் மூலமாக வெற்றி பெற முடியாத சிறுபான்மை வேட்பாளர்கள் விகிதாரச முறையின் கீழும் தெரிவு செய்யப்பட முடியாத நிலைமை ஏற்படும். இது சிறுபான்மை கட்சிகளையும், சிறிய கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் வெகுவாகப் பாதிக்கும் என அச்சம்கொள்ளப்படுகிறது.

இதனால், இத்தேர்தல் முறைமை பெரும்பான்மை கட்சிகளுடன் கட்டாயமாககக் கூட்டுச் சேர வேண்டியதொரு நிர்பந்தத்தை சிறிய கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றது. இதன்பொருட்டே  சிறுபான்மை முஸ்லிம் கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளுடன்  கூட்டுச் சேர்ந்திருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் கா    ங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலும் தேசிய காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலும் கிழக்;கிலும் கிழக்கிற்கு வெளியிலுமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடுவதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபை;யில் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா சார்பானவர்கள்; போட்டியிடுவதுடன், மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளிலும் கிழக்கில் போட்டியிவதற்கு தத்தமது கட்சி சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறங்;கியுள்ளனர்.

இந்நிலையில், இத்தனை கட்சிகளினதும் சவால்களை எதிர்கொண்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனித்து இரட்டைக் கொடியில் களமிறங்கியிருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். ஆனால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினைத் தவிர ஏனைய முஸ்லிம் கட்சிகள் உள்ளுராட்சி மன்றங்களினூடாக மக்கள் அடையவுள்ள நன்மைகள் தொடர்பிலோ அல்லது இந்நல்லாட்சியில் அ;ங்கம் வகிக்கின்ற இரு கட்சிகளும் இத்தேர்தல முறைமைக்கு ஆதரவு வழங்கியது குறித்தோ, இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்கு கிடைக்கக் கூடிய தீர்வுகள் எவை என்பது பற்றியோ, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால மற்றும் எதிர்கால பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது தொடர்பிலோ, முஸ்லிம்களின் எதிர்கால சமூக, பொருளாதார, கல்வி, சுகாதாரம் போன்;றவற்றின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் குறி;த்தோ ஆக்கபூர்மான ;;கருத்துக்களை தேர்தல் மேடைகளில் தெரிவிப்பதைக் காண முடியவில்லை.

மாறாக,  ஒரு கட்சித் தலைமை இன்னுமொரு கட்சி தலைமையை குற்றச்சாட்டுவதற்கும், விமர்சிப்பதற்கும் தேர்தல் மேடைகளை பயன்படுத்துவதைக் காண முடிவதுடன், பெரும்பான்மை முஸ்லிம் பிரதேசங்களின்; உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கான வியுகங்களுடன் முழு முயற்சியுடன் செயற்படுவதையே காண முடிகிறது. அதிகாரப் போட்டியில் ஜெயிப்பதற்காக சாணக்கியதுடன் மக்களை ஏமாற்றும் முஸ்லிம் அரசியலில் மாற்றம் தேவையா? தேவையில்லையா? என்பதை தீர்மானிப்பது ஒவ்வொரு வாக்காளனதும் தார்மீகக் கடமையாகும்.

முக்களுக்கு சேவை செய்வதற்காக ஆளுமையும் பொது நலம் கொண்டவர்களை வட்டாரங்களிலிருந்து தெரிவு செய்ய மக்களுக்குள்ள சிறந்த ஆயுதம் வாக்காகும். ஆவ்வாக்கையளிப்பதில் மக்களது மனச்சாட்சி வெற்றி பெறட்டும்!

Web Design by The Design Lanka