அதிஷ்டம் இருந்தால் நாமல்தான் அடுத்த பிரதமர் -ஆளும் கட்சி அறிவிப்பு..! - Sri Lanka Muslim

அதிஷ்டம் இருந்தால் நாமல்தான் அடுத்த பிரதமர் -ஆளும் கட்சி அறிவிப்பு..!

Contributors

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அவர் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதமர் ஆவதற்கான தகுதி அவருக்கு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஓய்வு பெறவுள்ளார் என்றும் பிரதமர் பதவிக்கு தனது புதல்வரான விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவை அவர் நியமிப்பார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

எனினும் அவ்வாறான எந்த முடிவையும் இதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பின்போது அரச பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரதமர் பதவிக்கு நாமல் ராஜபக்ச தகுதியுடையவர் என்கிற சான்றிதழை வழங்கினார்.

எனது தனிப்பட்ட கருத்து என்று இல்லை. நாமல் ராஜபக்ஷவுக்கு அப்படியொரு அதிர்ஷ்டம் இருந்தால் அந்தப்பதவி கிடைக்கும். எமது நாட்டில் சிலர் அதிஷ்டம் காரணமாக தெரிவாகினார்கள். அதேசமயம் அதிஷ்டம் காரணமாக அரசியலிலிருந்தே சிலரும் வெளியேறினார்கள். இதனை முன்கூட்டியே தீர்மானிக்கவும் முடியாது. கொரோனா தொற்று வரும் என்று யாருமே நினைக்கவில்லை. அதுபோல எதிர்பாராத நிலைமைகள் ஏற்படலாம்.

நாமல் ராஜபக்ஷ இரண்டாவது முறையாகவும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகினார். சட்டத்தரணியாகவும், சிறந்த கல்வித் தகைமையிலும் அவர் உள்ளார்.

ஆனால் எந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் என்பது கூறமுடியாது. சில அரசியல்வாதிகளின் கல்வித் தகைமைகளைப் பார்க்கின்றபோது அதுபோல ஒப்பிடவும் முடியாது. அடுத்த பிரதமர் ராஜபக்ஷவே உருவாவார் என்பது பற்றி கூறமுடியாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும்”என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team