அனைத்து அடிப்படைவாத அமைப்புகளும் கட்டம் கட்டமாக தடைசெய்யப்படுகிறது, தொடர்புடைய நபர்களும் கைது..! - Sri Lanka Muslim

அனைத்து அடிப்படைவாத அமைப்புகளும் கட்டம் கட்டமாக தடைசெய்யப்படுகிறது, தொடர்புடைய நபர்களும் கைது..!

Contributors

அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புகள் கட்டம் கட்டமாக நாட்டில் தடைசெய்யப்படுவதுடன் சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கும் வகையில் விரைவில் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரித்துள்ளதாவது,

தற்போதைய தண்டனை சட்டக் கோவையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் வெளியிடப்படுவதால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அவை பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு அடிகோலும் கருத்துகளும் வெளியிடப்படுகின்றன. அவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்பவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடல்களுக்கு அமையவவே 11 இஸ்லாமிய அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் எவ்வித கலந்துரையாடல்களுமின்றி இவ்வாறான அமைப்புகள் மீதான தடைகள் நீக்கப்பட்டிருந்தன. அதனால்தான் மீண்டும் தீவிரவாதம் தலைத்தூக்கியிருந்தது.

அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்துடன், தொடர்புடைய அமைப்புகள் கட்டம் கட்டமாக தடைசெய்யப்பட்டு வருவதுடன், தொடர்புடைய நபர்களும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன், இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளையும் அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Web Design by Srilanka Muslims Web Team