அனைத்து இனத்தவர்களையும் மதங்களையும் மதித்து இலங்கையர் எனும் மனப்பான்மையுடன் -வாழ உறுதி பூணுவோம் - பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி - Sri Lanka Muslim

அனைத்து இனத்தவர்களையும் மதங்களையும் மதித்து இலங்கையர் எனும் மனப்பான்மையுடன் -வாழ உறுதி பூணுவோம் – பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Contributors

-ஜே.எம்.ஹபீஸ்-

பிரதமர் டி.எம்.ஜயரத்னா வழங்கிய பின்வரும் புத்தாண்டு ஆசிச் செய்தியை பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

முன்னூற்றி அறுபத்து ஐந்து நாட்கள் கழிந்ததன் பின்னர் உதயமாகும் இந்த சந்தர்ப்பமானது தாய் நாட்டின் சௌபாக்கியம் மற்றும் நிரந்தர சகவாழ்வினை ஏற்படுத்திக்கொள்வதற்குக் கிடைத்த பெறுமதிமிக்க சந்தர்ப்பமொன்றாகுமென நான் நம்புகின்றேன்.

இலங்கையர் என்ற வகையில் நாம் பல அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டுள்ளதுடன் உதயமாகும் புது வருடத்தில் ஆன்மீக ரீதியிலான எதிர்பார்ப்புக்களை வெற்றிகொள்வதே எமது ஒரே இலக்காகும்.

பௌதீக ரீதியிலான முன்னேற்றத்தினை துரிதமாக அடைந்துகொள்ள எம்மால் முடியுமாக இருந்தாலும் ஆன்மீக ரீதியிலான முன்னேற்றத்தினை எமது உள்ளத்தில் விருத்தி செய்து கொள்வது எம் அனைவரதும் பிரதான எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட்டு சமாதானத்தை ஏற்படுத்திக்கொண்ட எமக்கு, உதயமாகும் புத்தாண்டில் ஒற்றுமையுடன் செயற்பட்டு இந்த நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்காக  இன, மத, குல, கட்சி பேதங்களை மறந்து நாம் கைகோர்த்துச் செயற்படல் வேண்டும். நாடு சகல வகையிலும் பலப்படுத்தப்படும்போதுதான் சகல சூழ்ச்சிகளையும் தோற்கடிக்கும் சக்தி எமக்குக் கிடைக்கின்றது.

தனிப்பட்ட ரீதியிலான வைராக்கியம் மற்றும் பொறாமையைத் தவிர்த்து ஐந்து இனங்களைச் சேர்ந்த நான்கு மதங்களைப் பின்பற்றி வாழும் இந்த நாட்டு மக்களான நாம் அனைவரும்,  அனைத்து இனத்தவர்களையும் மதங்களையும் மதித்து இலங்கையர் எனும் மனப்பான்மையுடன் சகோதரத்துவத்துடன் வாழ்வதற்கு உதயமாகும் புது வருடத்தில்  உறுதி பூணுவோம்.

இலங்கையர் என்ற வகையில் நாம் வெற்றிகொள்ள வேண்டியப பல சவால்கள் எம்முன்னே காணப்படுகின்றன. அந்த சவால்களை வெற்றிகொள்ளத் தேவையான வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஆசியாவின் புதுமையை நோக்கிய எமது பயணத்தின்போது 2014 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும் என்பது திண்ணம். அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்.

உதயமாகியுள்ள புது வருடத்தில் நாட்டுக்காக நாம் அனைவரும் ஒரே கொடியின் கீழ் திரள வேண்டும் என்பதே எனது ஒரே பிரார்த்தனையாகும்.
உதயமாகியுள்ள 2014 ஆம் ஆண்டு அனைத்து இலங்கையர்களுக்கும் மகிழ்ச்சிமிக்க புத்தாண்டாக அமையப் பிரார்த்திக்கின்றேன்!

கலாநிதி தி.மு.ஜயரத்ன
பிரதம அமைச்சர்
புத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர்
இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசு.
2013 டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி

 

Web Design by Srilanka Muslims Web Team