அபாயா - சாரி சர்ச்சையின் பின்னால் சிங்களப் பேரினவாதம்...!!! » Sri Lanka Muslim

அபாயா – சாரி சர்ச்சையின் பின்னால் சிங்களப் பேரினவாதம்…!!!

pikku

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Ajaaz Mohamed


நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கும் இனவாதம் திருகோணமலையில் இன்னொரு வடிவத்தில் வெடித்துள்ளது.

இது வெறும் சாரி – அபாயா விவகாரம் மட்டுமல்ல, இது இந்து – முஸ்லிம் மோதலும் அல்ல.

இதற்குப் பின்னாலும் சிங்களப் பேரினவாதத்தின் கபடக் கரங்கள் இருக்கக் கூடும் என்பதைத் தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இனவாதத்திற்குச் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பேதமில்லை… எல்லா வகையான இனவாதங்களும் மானுடத்துக்கு எதிரானவையே.

அபாயாதான் “இஸ்லாமிய ஆடை” எனும் கற்பிதத்திலிருந்து முஸ்லிம் சமூகம் விடுபட்டே ஆக வேண்டும். முகம், கை தவிர்த்து ஏனைய உடற்பாகங்கள் மறையும் விதமாக முஸ்லிம் பெண்கள் ஆடைகள் அணிந்தாலே போதுமானது. அந்த ஆடைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை குறித்த ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணுக்குமே உண்டு, முஸ்லிம் ஆண்களுக்கோ, முல்லாக்களுக்கோ, சண்முகாவின் இனவாத அதிபருக்கோ இல்லை !

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் குறித்த முஸ்லிம் ஆசிரியைகள் கவனத்தில் கொள்வது நல்லது. அந்த இந்துப் பாடசாலையில் அபாயாக்களுக்கு இடமில்லை என்றால் நாம் எதற்காக வீணாக மல்லுக்கட்ட வேண்டும் ?
நம்மை, நமது கலாச்சாரத்தை மதிக்கத் தெரியாதவர்களை விட்டு விட்டு வேறேதாவது முஸ்லிம் பாடசாலையில் பணிக்குச் செல்லலாமே…??!!

நமது ஆடைக் கலாச்சாரம் குறித்த நமது கடுமையான நிலைப்பாடு பரிசீலிக்கப்பட வேண்டும்.

இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயாவில் பணிபுரிய முடியாது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது, வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இந்த நாட்டின் அரசியலமைப்பே உத்தவாதம் வழங்கியிருக்கும் மத, கலாச்சார உரிமைகளின்மீது கைவைக்க எந்தத் தமிழச்சிக்கோ இந்துவுக்கோ அதிகாரம் இல்லை.

இந்த விடயத்தில் மென்போக்கைக் கையாள முடியாது. முஸ்லிம் சமூகம் இவ்விவகாரத்தைச் சட்டப்படியும் சரியாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் இப்போது உடனடியாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் அலுவலகத்திலும் போலீஸிலும் முறைப்பாடு செய்ய வேண்டும். மேற்கொண்டு தேவைப்பட்டால் கொழும்பில், உயர்நீதிமன்றத்திலும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பாகத் தனித்தனியாக வழக்குகள் தாக்கல் செய்யலாம்.

அதேவேளை, சாரி ஆபாசமானது, அபாயாவே உத்தமமானது போன்ற அனாவசியமான பத்வாக்கள் வழங்குவதை முகநூல் முல்லாக்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எரியும் இனவாதத் தீயில் எண்ணெய் ஊற்றும் முட்டாள்தனத்தை எவரும் செய்ய வேண்டாம்.

Web Design by The Design Lanka