அபுதாபியின் முதல் ஹிந்து கோயில் » Sri Lanka Muslim

அபுதாபியின் முதல் ஹிந்து கோயில்

_99976492_816e80ca-7457-4cb8-8ad5-605a997a1758

Contributors
author image

BBC

ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட உள்ள முதல் ஹிந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில், இந்திய பிரதமர் மோதி வீடியோ கான்பிரன்சிங் மூலம் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்த கோயிலில் உள்ள சிறப்புகள் என்னென்ன?

அபுதாபியில் இந்த கோயிலை கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட் அரசு 20,000 சதுர மீட்டர் இடத்தைக் கொடுத்தது. 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் மோதி இரண்டு நாள் பயணமாக இங்கு வந்திருந்தபோது இதனை அந்நாட்டு அரசு அறிவித்தது.

அபுதாபியில் இருந்து 30 நிமிட பயணத்தில் செல்லக்கூடிய அல் வாத்பா எனும் இடத்தில் கோயில் கட்டப்பட உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டின் ஐந்து மிகப்பெரிய கோடீஸ்வர இந்தியர்களில் ஒருவரான மருத்துவர் பி.ஆர். ஷெட்டி, இந்த கோயில் கட்டுவதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

2017-ம் ஆண்டின் இறுதியில், இந்த கோயில் கட்டு முடித்திருக்க வேண்டும். ஆனால், சில காரணங்களால் பணிகள் தாமதமானது.

இக்கோயிலில், கிருஷ்ணன், சிவன் மற்றும் ஐயப்பனின் சிலைகள் வைக்கப்பட உள்ளன.

”கோயில் மிகப்பெரிய அளவில் கட்டப்படும் என கூறப்படுகிறது. அத்துடன் பூங்கா மற்றும் நீரூற்று அமைக்கப்பட உள்ளது” என அபுதாபியில் இருக்கும் ரோநக் பிபிசியிடம் கூறுகிறார்.

கோயில் கட்டப்படுவதால் அபுதாபியில் வாழும் ஹிந்து மக்கள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர். தற்போது திருமணம், பூஜை போன்ற சடங்குகளைச் செய்ய ஹிந்து மக்கள் மூன்று மணிநேரம் பயணம் செய்து துபாய் செல்ல வேண்டியுள்ளது.

துபாயில் ஏற்கனவே இரண்டு ஹிந்து கோயில்கள் உள்ளன. அபுதாபியில் சர்ச் இருந்தாலும், கோயில்கள் எதுவும் இல்லை.

இந்திய தூதரகத்தின் கணக்கின்படி, 2.6 மில்லியன் இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கின்றனர்.

இங்கு வாழும் இந்தியர்கள் தங்களது வீட்டில் கடவுள் சிலைகளை வைத்து வழக்கான பூஜைகளை செய்துவருகின்றனர் என ரோநக் கூறுகிறார். விநாயகர் சதுர்த்தி, தீபாவளி போன்ற விழாக்கள் இங்கு விமர்சையாக நடக்கும்.

”தீபாவளி நாட்களில் இங்கு எங்கும் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும். இந்தியாவில் நாம் இல்லையே என்ற உணர்வே ஏற்படாது” என்கிறார் அவர்.

ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவுடன் மிகப்பெரிய அளவிலான வர்த்தக உறவைக் கொண்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியில், ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவின் ஒரு முக்கிய கூட்டாளியாக உள்ளது.

Web Design by The Design Lanka