அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார்: பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது » Sri Lanka Muslim

அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயார்: பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது

pak66

Contributors
author image

Editorial Team

 அமெரிக்காவின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு முதல் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவரை ரூ.2.14 லட்சம் கோடி வழங்கி உள்ளது. ஆனால் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக உள்நாட்டுப் போரில் ஈடுபடும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுகையில் “தீவிரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் பொய்களை மட்டுமே கூறிவருகிறது. அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

 இதைத்தொடர்ந்து, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,621 கோடி நிதியுதவியை முதல்கட்டமாக அமெரிக்கா நிறுத்திவைத்தது. இது, பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்பட்டு வரும்  நிதியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேற்கூறிய நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு அடுத்தடுத்து நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் எந்த நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 முதல் 48 மணி நேரங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக  குறிப்பிடத்தக்க மேலும் சில நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும் என்று அந்நாட்டு அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை அறிவித்து இருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை தெரிவித்தார்.

Web Design by The Design Lanka