அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப் » Sri Lanka Muslim

அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப்

trump

Contributors
author image

BBC

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வசைச் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் உள்ள, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், “இந்த மலத்துளை நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளவர்களை நாம் ஏன் வைத்திருக்கிறோம்?” என்று கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹைத்தி, எல் சால்வடோர் மற்றும் ஆஃப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களை குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.

பிற அமெரிக்க ஊடகங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டள்ள இந்த செய்தி குறித்து வெள்ளை மாளிகை இதுவரை மறுப்பு எதையும் வெளியிடவில்லை.

“சில வாஷிங்டன் அரசியல்வாதிகள் பிற நாடுகளுக்காக போராட விரும்புகிறார்கள். ஆனால், அதிபர் டிரம்ப் எப்போதுமே அமெரிக்க மக்களுக்காகத்தான் போராடுவார்,” என்று வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ராஜ் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் வெளிநாட்டவர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு குடியேற்ற உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக அவரைச் சந்திக்க சென்றபோது, டிரம்ப் அவ்வாறு கூறியுள்ளார்.

அப்போது ஜனநாயக காட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ரிச்சர்டு டர்பின், இயற்கை சீற்றங்கள், போர் மற்றும் நோய்ப் பரவாலால் பாதிக்கப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க தற்காலிக உரிமை வழங்குவது குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

நார்வே போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அப்போது டிரம்ப் கூறியுள்ளார். நார்வே பிரதமர் புதனன்று அமெரிக்கா வந்துள்ளார்.

டிரம்ப் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினைகளும் வந்துள்ளன. மேரிலேண்ட் மாகாணத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எலிஜா கம்மிங்க்ஸ், அதிபரின் இந்த மன்னிக்க முடியாத கூற்றைக் கண்டிப்பதாகவும், இது அதிபர் பதவியை சிறுமைப்படுத்துவது என்றும் கூறியுள்ளார்.
படத்தின் காப்புரிமை Getty Images

கறுப்பினத்தவரான, நாடாளுமன்ற உறுப்பினர் செட்ரிக் ரிச்மன்ட், டிரம்ப் கூறிய கருத்து, “அவரது அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக்குவோம் எனும் கோஷம் அமெரிக்காவை மீண்டும் வெள்ளை ஆக்குவோம் எனும் நோக்கத்தை கொண்டுள்ளதே உண்மை எனக் காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

எல் சால்வடோர் நாட்டைச் சேர்ந்த சுமார் 2,00,000 பேருக்கு அமெரிக்காவில் வசிக்க மற்றும் பணியாற்ற வழங்கப்பட்ட தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்தை அமெரிக்கா இந்த வாரம் ரத்து செய்தது.

ஹைத்தி மற்றும் நிகரகுவா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த அந்தஸ்து ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் லட்சக்கணக்கான வெளிநாட்டுக் குடியேறிகள் நாடுகடத்தப்படும் சூழலை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Design by The Design Lanka