அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் ஐவர் பலி - இருளில் மூழ்கிய வீடுகள் - மேலும் இரு புயல்கள் உருவாகும் வாய்ப்பு - Sri Lanka Muslim

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் ஐவர் பலி – இருளில் மூழ்கிய வீடுகள் – மேலும் இரு புயல்கள் உருவாகும் வாய்ப்பு

Contributors

அமெரிக்கா ஏற்கனவே கொரோனா வைரசுடன் போராடி வரும் நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக அந்த நாட்டை அடிக்கடி பயங்கர புயல்கள் தாக்கி வருகின்றன.

அந்த வகையில் நேற்று தெற்கு மாகாணமான அலபாமாவை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

அதேபோல் சாலைகளில் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் பல இடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புயலில் சிக்கி 100 க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. இதனிடையே இந்த சக்தி வாய்ந்த புயல் காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக மாகாண ஆளநர் கே இவே தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மேலும் 2 புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நேற்று அலபாமா மாகாணத்துக்கு செல்ல இருந்த நிலையில் புயலைத் தொடர்ந்து தனது பயணத்தை ரத்து செய்தார்.

கிழக்கு அலபாமாவில் 2019 இல் தாக்கிய இரண்டு புயல்களில் கட்டிடங்கள் மற்றும் வீதிகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதோடு 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team