அமைச்சர் அஷ்ரஃபின் 14 ஆவது நினைவு வருடத்தில் அபிவிருத்தியா கட்சியின் புனரமைப்பா இன்று தேவை? - Sri Lanka Muslim

அமைச்சர் அஷ்ரஃபின் 14 ஆவது நினைவு வருடத்தில் அபிவிருத்தியா கட்சியின் புனரமைப்பா இன்று தேவை?

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 14 ஆவது வருட நினைவு இந்த மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது தொடர்பான நிகழ்வுகள் பல இடங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விசேடமாக, அம்பாறை மாவட்டத்தில் நிகழ்வுகள் பெருமளவில் இடம்பெறவுள்ள நிலையில் கல்முனைத் தொகுதியில் இம்முறையும் இதற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் முன்னெடுத்துள்ளார்.இந்த வைபவங்களில் தேவையுடையோருக்கான உதவிகள் வழங்கலுடன் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வழக்கமாக அவர் மேற்கொள்ளும் பணிகளை மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 14 ஆவது நினைவு வருட அபிவிருத்தி என்ற மகுடத்தின் கீழ் அவர் முன்னெடுக்கவுள்ளார். காரணம் சாதாரணமாக பணிகளை முன்னெடுக்கும் போது சில தடைகள் ஏற்படலாமென அவர் நினைத்திருக்கலாம். இது அவரது கசப்பான அனுபவமாகவும் இருக்கலாம். அதற்காகவே அஷ்ரஃபின் பேரிலாவது முன்னெடுத்தால் பணிகளை பிரச்சினைகளின்றி முடிக்கலாம் என்ற ஆதங்கம் அவருக்கு இருக்கலாம்.

 

எது எப்படியிருப்பினும் அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி என்பது அமைசச்ர் அஷ்ரஃபின் மறைவின் பின்னர் கல்லில் நார் உரித்த கதையாகத்தான் உள்ளன. அபிவிருத்தி பணிகளுக்கான அத்திவாரங்கள் தோண்டப்படல், அடிக்கல்நாடல், நினைவுப் படிகம் திரைநீக்கம் செய்தல் போன்றனவற்றுடன் அந்தப் பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன. சில இடங்களில் சில நாட்களின் பின்னர் அவை இருந்த இடம் இல்லாமலே செய்யப்படுகின்றன. இதுதான் அம்பாறை மாவட்டத்தின் விசேடமாக, கல்முனைத் தொகுதியின் இன்றைய நிலை.

 

அபிவிருத்தி என்ற பெயரிலான மாயைத் தோற்றங்கள் அந்த மக்களுக்கு இன்று சலிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஒன்றுமே புதிதாக உருவாக்கப்படாத நிலையில் உள்ளவைகள் சிலவும் அரசியல் உருமாற்றம் பெற்று வருவது வேதனைக்குரியது.

 

அன்று அமைச்சர் மர்ஹும் அமைச்சர் அஷ்ஃரபும் முன்னாள் அமைச்சர் மன்சூரும் கல்முனைத் தொகுதிக்குச் செய்த சேவைகளால் கல்முனை இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது. அதுவும் இல்லாவிடின் ஆப்கானிஸ்தானில் கற்களும் மணற் புதர்களும் நிறைந்த ஒரு பகுதிக்கு ஒப்பாகவே இந்தக் கல்முனையும் இன்று காட்சியளித்திருக்கும்.

 

இந்த இருவரது சேவைகளும் அன்று கல்முனை தொகுதிக்கு அரசியல் கலப்பில்லாமல் கிடைத்தன. யார் குற்றினாலும் அரிசியானால் சரி என்ற நோக்கத்துடன் அவர்கள் இருவரும் தங்களது பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்திருந்தனர். அவர்கள் மேற்கொண்ட அபிவிருத்தி போட்டி அபிவிருத்தியாகவே இருந்ததே தவிர ஒருவரின் காலை ஒருவர் இழுத்து விடுவது போன்றிருக்கவில்லை. இதனை இன்று கல்முனைத் தொகுதி மக்கள் மனதளவில் ஏற்றுக் கொள்கிறாரகள்.

 

ஆனால், இன்று அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளுக்கு சுயநல அரசியல் சாயம் புசப்பட்டு விட்டன. ஓர் அரசியல்வாதி ஒன்றைச் செய்ய முயற்சிக்கும் போது மற்ற அரசியல்வாதி அந்த விடயத்தைக் கூட்டிக் கழித்து தனக்கு இது நஷ்டம் என்ற நினைப்போடு அதனைத் தடுக்கும் நிலையே அங்கு தொடர்கிறது.

 

பிரதேச ரீதியான பாகுபாட்டுத் தன்மைகள் கூட அங்கு மேகக் கூட்டம் போன்று கருக் கட்டத் தொடங்கி விட்டன. இது ஓர் ஆரோக்கியமான விடயமல்ல. ஓர் அரசியல்வாதி சாதாரணமாக ஒரு வீதியைப் புனரமைக்க முயற்சிக்கும் போது கூட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த அல்லது ஒரே கட்சியைச் சேர்ந்த மற்றொரு நபர் அதற்கு ஏதோ வகையில் தடை போட முயற்சிக்கும் சின்னத்தனமான அரசியலும் அங்கு இடம்பெறுகிறது. பள்ளிவாசல்களுடன் தொடர்புடைய விடயங்கள் கூட ஆள் பிடித்து பிரச்சினைகளை உருவாக்கி விடும் நிலைமையில்தான் இன்று அங்கு கடைகெட்ட முஸ்லிம் அரசியல் நடக்கிறது. அமைச்சர் மர்ஹும் அஷ்ரஃபின் மறைவின் பின்னர் கல்முனையின் அபிவிருத்தி என்பது சமாதி கட்டப்பட்ட ஒன்றோகவே உள்ளது. இதனை அந்த தொகுதி மக்கள் நன்கறிவர்.

 

அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல் தளமானது இன்று ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்ற நிலைக்குப் போய் விட்டது.

 

அதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹாரிஸின் அபிவிருத்தி தொடர்பான முன்னெடுப்புகளை இங்கு விமர்சிக்கவில்லை. ஆனால், அவரது முதுகெலும்பு சிலாரால் முறிக்கப்பட்டுள்ளதனை சிலாகித்தே ஆக வேண்டியுள்ளது. இவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்த போதும் அவற்றில் பெரும்பாலானவை அரை குறையாக நின்றதற்கு சாட்சிகள் நிறையவே உள்ளன.

 

எது எப்படியிருப்பினும் மர்ஹும் அஷ்ரஃபின் 14 ஆவது வருட நினைவு காலத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதே முக்கிய விடயமென்று கூறமுடியாது. அவரால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை சீர்மைப்படுத்துவதே இன்றைய அவசியத் தேவையாகும். அவர் எதற்காக இந்தக் கட்சியை ஆரம்பித்து முன்னெடுத்துச் சென்றாரோ அதே இலக்கில் தான் இந்தக் கட்சி இன்றும் பயணிக்கிறதா? நாம் கூட அவரின் இலட்சிய வழியில் செல்கிறோமா என்பதனை தங்கள் மனட்சாட்சியைத் தொட்டுக் கேட்டு திருந்தி நடக்க வேண்டியவர்கள்தான் இன்று அந்தக் கட்சிக்குள் அதிகமாக உள்ளனர்.

 

உயர்மட்டத்திலிருந்து சாதாரண உறுப்பினர்கள் வரை கட்சியின் கொள்கைகள், இலட்சியங்களை மறந்தவர்கள்தான் இன்று அதிகம் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று தென்னிலங்கை அரசியலிலும் அரசாங்கத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பெறுமானத்தை இழந்து நிற்பதற்கும் இதுவே பிரதான காரணம். ஐக்கியம் எங்கு இல்லையோ அங்கு பலவீனங்கள் இலகுவாக குடியேறிக் கொள்கின்றன. இதுதான் இன்று கட்சிக்குள் உள்ள நிலைமை.

 

அன்று அஷ்ரஃபின் கீழ் இந்தக் கட்சி செயற்பட்டுக் கொண்டிருந்த போது யாராவது ஒருவர் கட்சியை விட்டு விலகினால் அல்லது விலக்கப்பட்டால் அது ஓர் ஆச்சரியமான விடயமாக முஸ்லிம் மக்களால் பரப்பரப்பாகப் பேசப்பட்டது. நோக்கப்பட்டது. ஆனால், அந்த நிலை இன்றில்லை. எவரும் வெளியே போகலாம்.. போன பின்னர் மீண்டும் வரலாம் என்ற திறந்த பொருளாதார சந்தை போன்றுள்ளது. இவர்கள் விடயத்தில் மக்கள் ஆச்சரியப்படுவதும் இல்லை. இவ்வாறானவர்களைக் கணக்கில் கொள்வதும் இல்லை.

 

தலைமைத்துவக் கட்டுப்பாடு கட்சியை விட்டு இன்று தூரச் சென்றுள்ளது. கட்சிக்குள்ளிருந்து கல்லெறிவோரும் குழி பறிப்போரும் ஏன் காட்டிக் கொடுப்போரும் அங்கு தாராள மயமாக்கப்பட்டு விட்னர். ஆனால் அவ்வாறானவர்களுக்கே நல்ல காலம் என்ற நிலையும் இல்லாமல் இல்லை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறியமை நிரூபிக்கப்பட்டால் கூட எவருக்கும் எதிராக சாதாரண நடவடிக்கை எடுக்கவோ எவரையும் வெளியேற்றவோ முடியாத நிலைமையில்தான் கட்சியின் தலைமை இன்று சூழ்நிலைக் கைதியாகி உள்ளது. அவ்வாறு ஏதும் நடந்தால் அவர்களை ஏலத்தில் வாங்குவதற்கு அரசாங்கமும் ஏலவே கேள்விப்பத்திரம் கோரிய நிலையில் தயாராகத்தான் உள்ளது.

 

கடந்த காலங்களில் கட்சியின் உயர்மட்டக் குழு எத்தனையோ பேர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் நடந்தது என்ன? அடுத்த கட்ட தீர்மானத்துக்கு கட்சியின் தலைமையினால் செல்ல முடிந்ததா? இல்லையே.

 
எனவே, இன்று முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் தேவை பெரிதாக இல்லை. கட்சிக் களையெடுப்பும் புனரமைப்புமே தேவை. இந்த விடயங்களை உண்மையில் சிந்திப்போர் கட்சித் தலைமையுடன் சேர்ந்து இதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே சிறந்தது.

 

அத்திவாரம் பலமாக இருந்தால் மட்டுமே கட்டடத்தை வலுவாக எழுப்ப முடியும். முடியும் இன்றேல் இரண்டுக்குமே நஷ்டமான நிலைதான் என்பதனை மறந்து விடக் கூடாது. வெளியே இருக்கும் எதிரிகளை விட உள்ளே இருக்கும் வஞ்சகர் தொடர்பில் கட்சி கவனம் செலுத்த வேண்டும். எனவே, மர்ஹம் அஷ்ரஃபின் 14 வருட நினைவில் கட்சியைச் புனரமைத்து செம்மைப்படுத்துவதே முக்கியமானதாகும் அதுவே அந்த மாமனிதருக்குச் செய்யும் நன்றியாகவும் இருக்கும்.

 

உண்மையைச் சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கி விட முடியாது. என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு கூறியதனை இங்கு நினைவுபடுத்தியே ஆக வேண்டியுள்ளது. (நன்றி ஞாயிறு வீரகேசரி)

Web Design by Srilanka Muslims Web Team