அமைச்சர் ரவிக்கு தெரியாது, ஞாபகமில்லை வியாதி » Sri Lanka Muslim

அமைச்சர் ரவிக்கு தெரியாது, ஞாபகமில்லை வியாதி

ravi

Contributors
author image

நஜீப் பின் கபூர்

அமைச்சர் ரவிக்கு தெரியாது, ஞாபகமில்லை வியாதி
ரணிலுக்கு சீறியஸ் நல்லாட்சிக்கு பெரும் நெருக்கடி!

நஜீப் பின் கபூர்

யாரும் இதுவரை அறியாத அதிரடித் தகவல்கள்!
மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் இரட்டை வேடம்!
எதிரணித் தலைவர் சம்பந்தன் தவறிழைக்கின்றார்!
பழைய கள்ளன் புதிய கள்வனுக்கு போர்க்கொடி!
பதவி விலகலும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பும்!
சதி வேலைக்கே பழக்கப்பட்ட ரவியின் பரம்பரை!


முன்னைய ஆட்சியாளர்களான மஹிந்த ராஜபக்ஷாக்களுக்கு இந்த ரவி விவகாரம் நல்லதொரு பாதுகாப்பைக் கொடுத்திருக்கின்றது. இப்போது முழு நாடுமே இந்த ரவியின் மோசடி – பகற் கொள்ளை பற்றிப்பேசிக் கொண்டிருப்பதால் ராஜபக்ஷக்கள் ஒருவகையில் இப்போது சற்று நிம்மதியாக இருக்க முடிந்திருக்கின்றது. என்னா நாங்கள் மட்டுமா என்ற வகையில்.!

2015ல் நல்லாட்சிக்கு அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் நியமனம் செய்த அந்த நாட்களில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு இவர்கள் எந்த வகையிலும் இந்தத்துறைகளுக்குப் பொறுத்தமில்லாதவர்கள் என்று இந்தக் கட்டுரையாளனால் அன்று வார இதழ்களுக்கு எழுதப்பட்ட கட்டுரைகளில் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்தது.

இவ்வாறான கட்டுரைகளைப் பிரசுரம் செய்ததால் குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு மேல் மட்டத்தில் நெருக்கடிகளும் கொடுக்கப்பட்டு வந்தன. இப்படி துறைக்குப் பொறுத்தமில்லாத அமைச்சர்கள் என்ற வரிசையில் நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க முக்கியமானவர் என்று கட்டுரையாளனால் அன்றே அடையாளப்படுத்தப்பட்டிருந்தது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த விவகாரம் அப்படி பதிவில் இருக்க, இப்போது நமது நாட்டில் பரபரப்பாகப் பேசப்படுகின்ற அமைச்சர் ரவி தொடர்பான புதிய பல தகவல்களை நமது வாசகர்களுக்கு இந்த வாரம் சொல்லலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

சிங்கள ஊடகங்கள், அமைச்சர் ரவி நிர்வாணமாக மக்கள் முன் நின்று கொண்டிருக்கின்றார். அச்சம், பயம் என்ற நரம்புகள் ரவி உடம்பிலிருந்து அருத்தெரியப்பட்டிருப்பதால்தான் அவர் இன்று மக்கள் முன் நடமாட முடிகின்றது, பிரதமர் ரணிலும் இந்த பிணைமுறி விவகாரத்தில் சிக்கி இருக்கின்றார் என்று தலைப்புச் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிக்றன.

இதற்கிடையில் ரவியை ஜனாதிபதி இராஜினாமாச் செய்யுமாறு கேட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இது பற்றி சர்ச்சைக்குறிய அமைச்சர் ரவியிடம் கேட்டால் அது ஒரு கற்பனைச் செய்தி. அப்படியான எந்தக்கோரிக்கைகளையும் என்னிடத்தில் ஜனாதிபதி விடுக்க வில்லை என்று அவர் சொல்கின்றார். மனிதனுக்கு தெரியாது, ஞாபகமில்லை என்ற வியாதி பீடித்திருப்பதால் அவர் சொல்வதை நாம் எப்படி நம்புவது!

பிணைமுறி விவகாரத்தில் நடந்த ஊழல்கள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் நிதி அமைச்சரும் தற்போதய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருனாநாயக்காவுக்கு அதன் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டாலும் அவர் தொடர்ந்து அங்கு ஆஜராவதை தவிர்த்து வந்திருந்தார். இறுதியாக இது பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட விஷேட ஆணைக்குழு தனது கடுமையாக விசனத்தை வெளியிட்டதால் தொடர்ந்தும் தலைமறைவாக நிற்பதற்கு ரவியால் நொண்டிக் காரணங்களை முன்வைக்க முடியவில்லை.

எனவே வேறு வழியின்றி விஷேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் சென்ற ரவி அங்கு கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும்போல் தெரியாது! ஞாபகமில்லை! என்ற பதிலைக் கொடுத்ததன் மூலம் தான் ஒரு பெரும் மோசடிக்காரன் என்பதனை சிறுபிள்ளைக்குக் கூட தெரியப்படுத்தி விட்டார்.

வெளியே வந்தவர் விழுந்தவன் மீசையில் மண்படவில்லை என்று கதைவிடுவது போல் பாருங்கள் நல்லாட்சி இருப்பதால்தான் என்னைப்போன்ற ஒரு பெரும் அமைச்சரையே விசாரணைக்கு அழைக்க முடிந்தது என்று ஊடகங்களுக்குச் சொல்லியதை நாம் பார்க்க முடிந்தது. வேடிக்கை என்னவென்றால் தான் வசிக்கின்ற வீடு தனக்கு எப்படிக்கிடைத்தது என்பதைத்தான் அறிந்திருக்கவில்லை என்று விசாரணைக்குழு முன் அவர் சொல்லி இருக்கின்றார்.

ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜரான ரவி உடனடியாக பிரதமர் ரணிலைச் சந்தித்து நடந்தவற்றை விபரமாக அவருக்கு எடுத்துக் கூறி இருக்கின்றார். அப்போது பிரதமர் ரணில் ஊடகங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று ரவிக்கு ஆலோசணை சொல்லி இருக்கின்றார்.

இந்தக் கவனித்துக் கொள்ளுங்கள் என்ற விடயத்தை தெளிவாக சொல்வதானால் தற்போது நமது நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களும் போல் நடுநிலைத் தன்மையை இழந்து விட்டது, அல்லது பணத்துக்காக அல்லது அரசியல் நியாயங்களுக்காக உண்மைக்குப்புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனவே பணத்துக்கு ஊடகங்களை ஊடகக்காரர்களை கொள்வனவு செய்வதில் அமைச்சர் ரவி கருனாநாயக்க கைதேர்ந்தவர் என்பது அரசியல் ஆர்வலர்கள் நன்கு அறிந்த விவகாரம்.

இந்த நாட்டிலுள்ள முக்கிய பல பௌத்த குருமார்களுக்கு சொகுசு வாகனங்களை வழங்கியமை மற்றும் பின் வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரை தனக்கு வக்காளத்து வாங்குவதற்காக அவர் அரச பணத்தை மாதாந்தம் கொடுப்பனவாக வழங்கிய வந்தமை பற்றியும் புதிய நிதி அமைச்சர் மங்கள தான் பதவிக்கு வந்ததும் இப்படி வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை நிறுத்தியமை பற்றி நாம் ஏற்கனவே சொல்லி இருந்தோம்.

ஆனால் இந்த முறை அவர் விஷேட ஆணைக்குழு முன் ஆஜராகும் சந்தர்ப்பத்தில் தன்னுடன் துணைக்கு வருமாறு அனைத்து ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுத்தபோது கண்டி மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே, கம்பஹா மாவட்ட உறுப்பினர் காவித்த ஜயவர்தன, குருனாகலை பாராளுமன்ற உறுப்பினர் நளின் ஆகியோர் மட்டுமே அவர் பின்னால் துணைக்குப்போய் இன்று மூக்குடைபட்டு நிற்கின்றார்கள்.

இதற்கிடையில் கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின் சர்ச்சைக்குரிய அமைச்சர் ரவி பிரதமர் ரணிலின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அதற்கான அழைப்பிதழ்களை அங்கிருந்தவர்களுக்குக் கையளித்திருக்கின்றார். இதனைப் பார்த்து விட்டு இந்த நேரத்தில் இப்படியான வேலைகளைச் செய்ய வேண்டாம் யாரிடம் கேட்டு இந்த ஏற்பாடுகளைச் செய்தீர்கள் என்று ரவியின் முகத்தில் பாய்ந்திருக்கின்றார் பிரதமர் ரணில். எமக்குக்கிடைக்கின்ற தகவல்களின்படி இந்த இசைக்கச்சேரி குளோஸ்-நடக்காது என்று தெரிகின்றது.

தனக்கு எதிராக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் போது குழப்பங்களை ஏற்படுத்துகின்ற முயற்சியிலும் பணத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வழக்கம்போல் வாங்கி அதில் வெற்றிபெறுகின்ற திட்டமொன்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னர் ரவியை பதவியிலிருந்து வெளியேற்றி நல்லாட்சிக்குத் தற்போது ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்குமாறு ஆளும் தரப்பிலுள்ள ஐதேக மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடத்திலும் பிரதமரிடத்திலும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்கள் என்று எமக்குத் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

அதே நேரம் இந்த பிணைமுறி விவகாரத்தை கோப் குழு முன் எடுத்துச் சென்ற போது அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அர்ஜூன் மகேந்திரனுக்கு சாதகமாக பேசி வந்தார்கள். இதற்கு பின்னணி அமைச்சர் ரவி, அர்ஜூன் மகேந்திரன் ஊடாக அவர்களுக்குப் பல சலுகைகளை வழங்கி வந்திருந்தார் என்ற தகவல்களும் தற்போது கசியத் துவங்கி இருக்கின்றது. இதனையும் நாம் அன்று சொல்லி இருந்தோம். எனவே நம்ப முடியாத பல உயர் மட்ட ஐதேக அரசியல்வாதிகளும் இதில் உள்ளடங்கி இருக்கின்றார்கள் என்பதும் இதில் முக்கியமான ஒரு முஸ்லிம் அமைச்சரும் அடங்கி இருக்கின்றார் என்று தெரிகின்றது. செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டு அவர் நாமத்தை கசியவிடலாம் என்று எதிர் பார்க்கின்றோம். இந்த விவகாரத்தில் மேல் மட்டத்திலுள்ள பலரை ரவி சுக்சகமாக சிக்கவைத்து தனது வியாபாரத்தை நகர்த்தி இருக்கின்றார்.

ஜனாதிபதி மைத்திரி ரவியிடமிருந்து நிதி அமைச்சுப் பதவியை பறித்துக் கொண்டபோது அவருக்கு அனுதாபம் தெரிவிக்கின்றவகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் ரவிக்கு ஆறுதல் கூறியது தொடர்பான செய்தியை நாம் முன்பு சொல்லி இருந்தோம். இது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகின்றது. அத்துடன் எதிரணியினர் அண்மையில் அமைச்சர் கெஹல்லிய ரம்புக்வெலவின் மகன் திருமண வீட்டில் வைத்து ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கையெழுத்து திறட்டிய போது அதில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட மறுத்திருக்கின்றார்.

அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதிலும் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பதாகத் தெரிகின்றது. இது கூட்டு எதிரணி உறுப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏன் மஹிந்த இப்படி நடக்கின்றார் என்றால் அமைச்சர் ரவிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படும் என்று அவர் அஞ்சுகின்றார். அத்துடன் கள்வர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மன உணர்வு மக்களிடத்தில் ஏற்படுவது தனக்கு ஆரோக்கியமானதல்ல என்று சிந்தனையாளர் சிந்திப்பதும் அவரது இரட்டை வேடத்திற்கு காரணமாக இருக்கலாம்.

இப்போது இந்த ரவி கருனாநாயக்க பற்றிய பின்னணியை சற்றுப்பார்ப்போம். முன்னாள் பிரதமர் ஸ்ரீ மா பண்டாரநாயக்க காலத்தில், 1962 களில் அரசுக்கு எதிரான சதிப் புரட்சியொன்றை ஏற்படுத்த முயன்ற குழுவில் ஜங்கல் திசாநாயக்க மிக முக்கிய பாத்திரம் வகித்தவர். இவர் ரவிக்குத் தாய் வழிப்பாட்டன். எனவே சதிக்குப் பேர்போன ஒரு குடும்பம்தான் ரவி பரம்பரை. இந்த ஜங்கல் திசாநாயக்க என்பவர் முன்னாள் உதவிப் பொலிஸ் மா அதிபராக பதவி வகித்த சிரில் திசாநாயக்க என்பவராவார்.

மதத்தால் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் வெள்ளை ஆடை அணிந்து தன்னை ஒரு தூய பௌத்தனாக இவர் விகாரைகள் வழியே விழாக்களுக்குச் சென்று நாடகமாடி வருபவர். இவர் தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் அது பற்றி ஆச்சரியப்பட்டுக் கொள்ள முடியாது ஏனெனில் அவர் மனைவி பிறப்பால் ஒரு முஸ்லிம் என்பதால் தனக்கு அந்த உரிமை இருக்கின்றது என்று இந்த மனிதன் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மறதி வியாதிக்காரர் எதைவேண்டுமானாலும் கூறலாம்தானே.!

2001-2004 ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் சதோச என்ற ஜனரஞ்ச நிறுவனத்தில் கோடிக் கணக்கில் கொள்ளையடித்து அதனை நாசம் செய்தவர் என்ற வகையில் ரவிக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டு இருக்கின்ற நேரத்தில்தான் அவருக்கு செல்வாக்கான அமைச்சுக்களைப் பெற்றுக் கொடுப்பதில் பிரதமர் ரணில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்திருக்கின்றார். இதன் பின்னணியில் உள்ள கொடுக்கல் வாங்கள் என்னவென்று தெரியாது. என்றாலும் இந்த பிணை முறிமோசடியில் பிரதமருக்கும் பங்கு என்று மக்கள் மத்தியில் ஒரு பலமான கருத்து இருந்து வருகின்றது. எனவேதான் ஜேவிபி ரணிலையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்கின்றது.

போர் காலத்தில் 20 இலட்சம் அமெரிக்க டொலர்கள் தனது வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்தது எப்படி என்பதற்கும் இந்த ரவி இன்றுவரை பதில் சொல்லவில்லை. எனவே இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய மோசடியான அரசியல்வாதி என்ற விருதை ரவிக்கு வழங்கலாம் என்று நாம் சிபார்சு செய்கின்றோம்.

தற்போதய பாராளுமன்றத்தில் மூத்த அரசியல்வாதி சம்பந்தன். அவர் இன்று எதிர்க் கட்சித் தலைவர். ஆனால் அவர் தற்போது அரசாங்கத்தின் ஒரு பங்காளி என்ற நிலைப்பாட்டிலேயே காரியம் பார்க்கின்றார் என்று தோன்றுகின்றது. பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் என்ற வகையில் ஊழல்பேர்வழிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டியடிக்கின்ற முயற்சியில் அவர் தனது பங்களிப்பை வழங்க வேண்டும்.

நாம் ஏன் இப்படிக் கூறுகின்றோம் என்றால் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்துக்கு வந்தால் அதற்கு ரவி சார்பில் அவர் ஆஜராக வேண்டும், அல்லது வாக்கெடுப்பிலிருந்து அவர் – கூட்டமைப்பு விலகி நிற்க வேண்டும் என்ற வகையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட இருப்பதால் பொறுப்புள்ள எதிர்க் கட்சித் தலைவர் என்ற நிலைப்பாட்டில் இது விடயத்தில் அவர் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

பிந்திய தகவல்களின் படி ரவி பதவிக்கு ஜனாதிபதி ஆப்பு வைப்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்று தெரிகின்றது. இது பற்றி அவர் தனது கட்சி உறுப்பினர்களுக்கு வாக்குறுதியும் கொடுத்திருக்கின்றார்.

Web Design by The Design Lanka