அமைச்சர் றிஷாத் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றார்- ஜாதிக ஹெல உறுமய போர்க் கொடி - Sri Lanka Muslim

அமைச்சர் றிஷாத் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றார்- ஜாதிக ஹெல உறுமய போர்க் கொடி

Contributors

அமைச்சர் றிஷாத் பதியூதீன் இனவாத அடிப்படையில் செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அமைச்சர் பதியூதீன் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு வீடமைப்பு திட்டமொன்றை முன்னெடுக்க உதவிகளை வழங்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் கோரியிருந்தார்.

 

ராஜதந்திர விதிகளை மீறி அமைச்சர் பதியூதீன் உதவிகளை கோரியதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு புறம்பான வகையில் அமைச்சர் உதவி கோரியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

 

2009ம் ஆண்டில் சுனாமி வீடமைப்பு திட்டமொன்றுக்கு சவூதி அரேபியாவிடம் உதவி கோரிய போது (சுனாமியின் போது இருப்பிடங்களை இழந்த முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள்)  அதற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய கட்சி நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

 

தீகவாபியில் முஸ்லிம்களுக்கு வீடமைப்பு திட்டமொன்றை அமைத்துக் கொடுக்க சவூதி அரேபியாவிடம் உதவி கோரியமை சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

 

ஒரு இன சமூகத்திற்கு நன்மை ஏற்படக் கூடிய வகையில் மட்டும் சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்திருந்தது. அமைச்சர் ரிசாட் பதியூதீன் இன அடிப்படையில் மட்டும் உதவிகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

 

பிரதமர் டி.எம். ஜயரட்னவின் ஊடாக அமைச்சர் பதியூதீன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜே.வி.பி கட்சியும் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team