அமைச்சுப் பதவிகளைத் தூக்கி வீசுவதோ, எம். பி. பதவிகளை இராஜினாமாச் செய்வதோ புத்திசாலித்தனமல்ல...! » Sri Lanka Muslim

அமைச்சுப் பதவிகளைத் தூக்கி வீசுவதோ, எம். பி. பதவிகளை இராஜினாமாச் செய்வதோ புத்திசாலித்தனமல்ல…!

dua

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-எஸ். ஹமீத்


பேரினவாதம் தனது கூரிய நகங்களினாலும் பற்களினாலும் நமது சமூகத்தைக் குத்திக் கிழித்துக் குதறத் தொடங்கிவிட்ட இவ்வேளையில் நமது சமூகத்துக்கான மிகக் கூடியளவு பாதுகாப்பைத் தரக் கூடியவை நம்மிடமுள்ள அரசியல் அதிகாரங்களேயென்பதை மறந்துவிடக் கூடாது.

அமைச்சுப் பதவிகளைத் தூக்கி வீசிவிட்டு, வெற்றுக் கையும் வெறும் கையுமாக முஸ்லிம் சமூகம் இருப்பதனையே பேரினவாதிகள் விரும்பி எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். அவர்களின் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுக்கின்ற முட்டாள் சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது.

அரசியல் அதிகாரமற்ற ஒரு சாதாரண முஸ்லிம் பிரஜை பேரினவாதத்திற்கெதிரான அறிக்கையை அமெரிக்காவிடமோ, அரபுலகிடமோ அல்லது ஐ. நா. விடமோ கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமிக்க ஓர் அமைச்சர் கொடுப்பதற்கும் வித்தியாசங்களிருக்கின்றன.

ஓர் அமைச்சர் பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் ஒரு சாதாரண பிரஜை வீதியில் நின்று சத்தம் போடுவதற்குமான வேற்றுமையையும் வித்தியாசங்களையும் நாம் விளங்கிக் கொள்வோமானால், நமது அமைச்சர்கள் அமைச்சுப் பதவிகளைத் தூக்கி வீச வேண்டுமென்று இப்போதைய நெருக்கடியான சூழலில் கேட்க மாட்டோம்.

ஒரு முஸ்லிம் கிராமம் பேரினவாதிகளினால் தாக்கப்படும் போது போலீஸ் மா அதிபருக்கோ அல்லது பிரதமர் ஜனாதிபதிக்கோ பாதுகாப்புக் கேட்டுத் தொலைபேசி அழைப்பு விடுப்பதற்கு ஒரு சாதாரண பிரஜையால் அல்ல…ஓர் அமைச்சரினாலேயே முடியுமாக இருக்கும். இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் நம்ம்மிடத்தே அரசியல் அதிகாரத்துடன் கூடிய அமைச்சர்கள் தற்போது இருந்துதானாக வேண்டும்.

ஆனால், அமைச்சர்கள் உட்பட அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து, ஒரே குரலில் அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கி மாற்றுக்கட்சிக்குத் தற்காலிகமாக ஆதரவளிக்கும் முடிவுக்கு வரலாம். அரசாங்கத்தின் பெரும்பான்மைக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கைகளில் இறங்கலாம். இதன் மூலம் அரசாங்கத்தை அடிபணிய வைக்க முயற்சி செய்யலாம்.

எது எவ்வாறிருப்பினும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பின்விளைவுகளை பற்றிச் சிந்திக்காமல் எடுக்கப்படும் அவசர முடிவுகள் நமது சமூகத்துக்குப் பேரழிவைத்த தந்துவிடாத வகையில் அமைவதே இன்றைய நிலைமையில் மிக முக்கியமாகும்.

Web Design by The Design Lanka