அமைச்சு பதவியை துறக்க தயார், பெண்களின் பொருட்களை தலையில் சுமந்து 5 நிமிடங்கள் இருக்குமாறு சவால் - சரத் வீரசேகர..! - Sri Lanka Muslim

அமைச்சு பதவியை துறக்க தயார், பெண்களின் பொருட்களை தலையில் சுமந்து 5 நிமிடங்கள் இருக்குமாறு சவால் – சரத் வீரசேகர..!

Contributors

பியூமி ஹன்சமாலி கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட  போது நான் ஆடைகளை கொண்டு சென்று வழங்கியதாக கூறும் கதையை உண்மையென நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை துறக்கத்தயாராக உள்ளேன் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆனால் என்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்க முடியாது போனால் பெண்களின் பொருட்கள் உள்ளடங்கிய பொதியை தலையில் சுமந்துகொண்டு சபையில் ஐந்து நிமிடம் நிற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார என்னைப் பற்றி அவதூரான கருத்துக்களை வெளியிட்டார். நான் பெண்ணொருவருக்கு உடைகளை கொண்டு சென்றேன் என்றும், பயணக் கட்டுப்பாடுகளை மீறி கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு இவ்வாறு உடைகளை வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

இவர்கள் கூறுவது போல் நான் அந்தப் பெண்ணுக்கு உடைகளை கொண்டு செல்லவும் இல்லை. அதற்கு நினைத்ததும் இல்லை. என்னுடன் தொடர்புடையவர்களும் அவ்வாறு செய்யவில்லை. இவ்வாறான பொய்யையே இவர்கள் சமூக மயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இந்த விடயத்தில் நளின் பண்டாரவுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன். அதாவது நான் குறித்த பெண்ணுக்கு ஆடைகளை கொண்டு சென்றேன் என்பதனை நிரூபிக்க முடியுமென்றால் அல்லது என்னுடன் தொடர்புடையவர்கள் அதனை செய்துள்ளதாக நிரூபித்தால் நான் நாளைய தினமே எனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுகின்றேன்.

எனக்கு 3 இலட்சத்து 28 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நான் வாக்கு எண்ணிக்கையில் கொழும்பில் முதலிடத்தையும், இலங்கையில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளேன்.

இதன்படி அந்த மக்களுக்காக நான் பதவி விலக தயார். இல்லையென்றால் நளின் பண்டார பதவி விலக வேண்டிய அவசியமில்லை. அவர் பெண்களின் பொருட்களை தலையில் சுமந்துகொண்டு நாடாளுமன்ற நுழைவாயிலில் 5 நிமிடங்கள் இருக்குமாறு அவருக்கு சவால் விடுக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team