அம்பாறை மாவாட்ட ஜனாஸாக்களை பாதுகாத்த அதாவுல்லாஹ்வின் கூற்று..! - Sri Lanka Muslim

அம்பாறை மாவாட்ட ஜனாஸாக்களை பாதுகாத்த அதாவுல்லாஹ்வின் கூற்று..!

Contributors

அம்பாறை மாவட்டத்தில் ஒரு மையத்தை கூட எரிக்காமல் பாதுகாத்தேன் என தே.கா தலைவர் அதாவுல்லாஹ் கூறியதாக சமூக வலைத்தள பதிவுகளை அவதானிக்க முடிகிறது. இவர் தடுத்தாரா, இல்லையா என்பதற்கு அப்பால் பல கேள்விகள் எழுகின்றன.

1.அதாவுல்லாஹ் கொரோனாவால் மரணித்திருந்தாலும் ஓட்டமாவடி, மஜ்மா நகரிலேயே அடக்கம் செய்யப்பட்டிருப்பார். நீங்கள் அம்பாறையை மாத்திரம் எல்லை பிரித்து, காத்தது போன்று, அம் மக்கள் எங்களது பகுதியினரது ஜனாஸாக்களை மாத்திரம் இங்கு அடக்குங்கள் என கூறியிருந்தால், நிலை என்னவாகியிருக்கும். உங்களவர்களது உடல்களும் பொசுக்கப்பட்டிருக்கும். உங்கள் பேச்சு நியாயமென்றால், அவர்களது பேச்சிலும் நியாயமுண்டு தானே! ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. பெரு மனது கொண்டவர்கள். முதலில் இது ஏரியா பிரித்து, பேசும் பிரச்சினையா?

2.கடந்த பாராளுமன்ற தேர்தலில் தே.கா திருகோணமலை மாவட்டதிலும் போட்டியிட அக்கறை காட்டியது. வேட்புமனு பிரச்சினைக்கு நீதிமன்றம் எல்லாம் ஏறி, இறங்கியது. அந்த திருகோணமலை மக்களது ஜனாஸாக்களை எரித்தால் பிரச்சினை இல்லையா? தே.கா, தனது எல்லையை சுருக்கி கொண்டது என்பதை இது தெளிவாக்கின்றது.

  1. அதாவுல்லாஹ் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். இதன் காரணமாக அம்பாறை மாவட்ட மக்களை மாத்திரம் காப்பாற்றலை, தனது கடமையாக கருதி இவ்வாறு பேசியிருக்கலாம். முஸ்லிம் பா.உறுப்பினர்கள் அற்ற எத்தனையோ மாவட்டங்கள் இலங்கையில் உள்ளன. அவர்களை எரித்தால் பறவாயில்லையா? ஜனாஸாக்களை அடக்கம் செய்தல் பர்ளு கிபாயாவோடு சம்பந்தப்பட்ட ஒன்று. ஒருவர் செய்யாது போனாலும் அனைவரும் குற்றவாளிகள்.

அதாவுல்லாஹ் தான் அம்பாறை மாவட்ட ஜனாஸாக்களை எரிக்காமல், காப்பாற்ற காரணமானவராக இருந்தாலும் ( இதுவும் ஆராய வேண்டிய பகுதி ), அதனை வெளிப்படையாக கூறி பெருமை பாராட்டும் ஒன்றல்ல என்பதை அறிய வேண்டும். ஏனைய பகுதியை சேர்ந்தவர்களது ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமை இரத்த கண்ணீர் வடிக்க வேண்டிய வரலாறு. நூற்றில் ஒன்றை காப்பாற்றி பெருமைப்பட இயலுமா?

தே.கா தலைவர் அதாவுல்லாஹ்வின் இப் பேச்சானது இயலாமையின் உச்ச வெளிப்பாடாகவே நோக்க முடிகிறது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team