அரசாங்கத்திற்குள் வெடித்தது போர் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்குள் வெடித்தது போர் – ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு..!

Contributors
author image

Editorial Team

ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த மற்றும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று ஜனாதிபதி தலைமையில் இடம் பெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்ல மேலும் தெரியவருகையில்,

ஐக்கிய மக்கள் சக்தியினர் எரிபொருள் விலையேற்றத்தை சுட்டிக்காட்டி வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த கலந்துரையாடல் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக எதிர் கட்சியினர் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, பொதுஜன பெரமுனவிற்கும், பொதுஜன பெரமுனவின் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலை குறித்து ஆராயப்படவுள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து உதய கம்மன்பிலவிற்கும், பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கும் இடையிலான முறுகல் நிலை காரணமாக ஆளும் தரப்பிற்குள் இரு குழுக்கள் உருவாகியுள்ளன. எரிபொருள் விலை கடந்த 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டது.

கொவிட்-19  தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான நிலையில் எரிபொருளின் விலை அதிகரித்தமை பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடு, எரிபொருள் விலையேற்றத்தை பொறுப்பேற்று வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில உடனடியாக பதவி விலக வேண்டும் என  பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாரக காரியவசம் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த உதய கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை தான் தனித்து எடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் வாழ்க்கை செலவு தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமையவே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. ஆகவே தான் பதவி விலக வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து பல பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதுடன், பல சேவைகளின் கட்டணமும் அதிகரிக்கப்பட்டன. எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பினர் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுப்பட்டார்கள். அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டும் என பொதுஜன பெரமுனவிற்கு பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுஜன பெரமுனவின் கூட்டணியின் பிரதான 8 பங்காளி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை வெளியிட்டார்கள்.

இந்நிலையில்,  தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டது. இவ்வாறான நிலையிலேயே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையினை சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியினர் அமைசசர் உதயகம்மன்பிலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளார்கள்.

Web Design by Srilanka Muslims Web Team