அரசாங்கத்திற்குள் வேண்டும், வேண்டாம் என்ற குழப்ப நிலை..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்குள் வேண்டும், வேண்டாம் என்ற குழப்ப நிலை..!

Contributors
author image

Editorial Team

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணய விவகாரம், தேர்தல் முறைமை உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் பங்காளி கட்சிகளில் பெரும்பாலானோர் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மாகாண சபை தேர்தல் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் மாகாண சபை தேர்தல் குறித்து முன்வைத்த யோசனை தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்குமாறு குறிப்பிடப்பட்டடுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம் என குறிப்பிட்டு ஆளும் தரப்பினர் ஒரு சில உறுப்பினர்கள் எல்லை நிர்ணயம், தேர்தல் முறைமை ஆகிய காரணிகளை முன்வைத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளார்கள்.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழ் நடத்த இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபைதேர்தல் தொடர்பில் எழுந்துள்ள மாறுப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் முழுமையாக பரிசீலனை செய்யப்படும்.

உரிய காலத்தில் மாகாண சபை தேர்தல் இடம் பெற்றிருந்தால் தற்போது இந்த நெருக்கடி நிலை தோற்றம் பெற்றிருக்காது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபையின் நிர்வாகம் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது .

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபை தேர்தல் குறித்து கவனம் செலுத்துமாறு மகாசங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

இந்த யோசனை தொடர்பில் ஜனாதிபதி மகாசங்கத்தினருடன் இடம் பெறும் சந்திப்பின் போது தீர்மானத்தை அறிவிப்பார். நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு

மாகாண சபை தேர்தலை அரசியல் காரணிகளுக்காக பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. மாகாண சபை தேர்தல் எத்தேர்தல் முறையில் , எப்போது இடம்பெற்றாலும் பொதுஜன பெரமுன நாடளாவிய ரீதியில் பெற்றிப்பெறும் என்பதை என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team