அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லிம் சம்மேளனம் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்கு ஆதரவாக முஸ்லிம் சம்மேளனம் ஐ.நா. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..!

Contributors

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குத் தமது கண்டனத்தை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் திங்கட்கிழமை (22) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் இஸடீன் கூறியதாவது:

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார்.

அவர் எமது நாட்டின் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்தினர் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடைசெய்வதற்கு முற்படுகின்றார்.

அவர்கள் எமது நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்யவேண்டிய அவசியம் இல்லை. உள்ளகப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொள்ளும்.

மிச்சேல் பச்லெட் சிலி நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது, உள்ளகப் பிரச்சினைகளில் அங்கு பெரும் எண்ணிக்கையானோர் உயிரிழந்தார்கள். அவ்வாறிருக்கையில் தற்போது அவர் மனித உரிமைகள் தொடர்பில் பேசுகின்றார்.

எனவே இத்தகைய மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம். இலங்கை தொடர்பான பிரேரணை மீது முன்னெடுக்கப்படவுள்ள வாக்கெடுப்பில் நாம் நிச்சயமாக வெற்றிபெறுவோம்.

ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றன. அவ்வாறான நாடுகளின் துணையுடன் இந்தப் பிரேரணையை வெற்றிகொள்வோம் என்று குறிப்பிட்டார்.

மேற்படி கவனயீர்ப்புப்போராட்டத்தில் முடிவில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தின் சார்பில் ஐக்கிய நாடுகள் அலுவலக அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

நன்றி – வீரகேசரி

Web Design by Srilanka Muslims Web Team