அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்க 69 லட்சம் மக்கள் காத்திருப்பு - எதிர்கட்சித் தலைவர்..! - Sri Lanka Muslim

அரசாங்கத்திற்கு பதிலடி கொடுக்க 69 லட்சம் மக்கள் காத்திருப்பு – எதிர்கட்சித் தலைவர்..!

Contributors

மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு தனக்கு அரசாங்கத்திலுள்ள யாரிடமும் டியுசன் எடுக்கத் தேவையில்லை எனவும், இந்த நாட்டின் அறுபத்தொன்பது இலட்சம் மக்களையும் ஏமாற்றிய அரசாங்கத்துக்கு பதில் சொல்லும் வாய்ப்புக்காக மக்கள் காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலுள்ள சிலர் தாம் தவறு செய்ததாக இப்போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதாகவும், இதில் நாட்டு மக்களை ஏமாற்றுவதேயன்றி வேறெதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அரசாங்கம் செய்யும் அனைத்தும் வெறும் ஊடகக் கண்காட்சி என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

சிறந்த விதைகளைப் பெற்றுத் தருமாறும், பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தினை வழங்குமாறும், அறுவடைகளை சந்தைப்படுத்தக் கூடிய சூழலை உருவாக்கித் தருமாறும் விவசாய சமூகம் நாலா பக்கமிருந்தும் கோரிக்கைகளை விடுத்தாலும் அரசாங்கம் அதுபற்றி சிறதளவேணும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராயும் ” கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சித் திட்டத்தின் இன்னுமொரு கட்டமாக இன்று (10) அனுராதபுரத்தின் நொச்சியாகம கொகுன்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொள்ளுவதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர், நொச்சியாகம கொகுன்னேவ ரங்கிரி ரஜமகா விகாரைக்குச் சென்று அதன் தலைமைத் தேரர் சங்கைக்குரிய மிலேவே ஸ்வர்ணபால தேரர் உள்ளிட்ட சங்கைக்குரிய தேரர்களிடமிருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பிரதேச மக்களைச் சந்தித்தார்.

கடந்த சனாதிபதி தேர்தலின் போது இலவசமாக உரம் வழங்குவதாக அனுராதபுரத்தில் வைத்துத் தெரிவித்த அரசாங்கம் அன்று இந்த புனித பூமியில் வைத்து வழங்கிய வாக்குறுதியை இன்று உடைத்தெறிந்துள்ளது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று பல இலட்சம் விவசாயக் குடும்பங்கள் நாட்டில் அநாதரவாக விடப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் இதனை உணரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தைப் பற்றிய மக்களின் விருப்பு வெறுப்பை அறிவதற்கு மக்கள் முன் கொண்டு செல்லுமாறு தான் கோருவதாகவும், அரசாங்கள் அதுபற்றி கவலை கொள்ளுவதில்லை என்றாலும் வெளிநாடுகளில் இருந்து வந்து மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் எனச் சொன்னதும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவத்துவதற்கு கவனத்தைச் செலுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team