அரசாங்கத்துக்குள் நாய்போலவே செயற்படுகின்றோம் - விரட்டியடித்தால் அழிவு நிச்சயம்' - கம்மன்பில எச்சரிக்கை..! - Sri Lanka Muslim

அரசாங்கத்துக்குள் நாய்போலவே செயற்படுகின்றோம் – விரட்டியடித்தால் அழிவு நிச்சயம்’ – கம்மன்பில எச்சரிக்கை..!

Contributors

” வீட்டிலே வளர்க்கப்படும் நாய்போலவே நாம் அரசாங்கத்துக்குள் செயற்பட்டுவருகின்றோம்.

இரவிலே – நாய் அடிக்கடி குரைப்பதால் தூக்கம் கலைகின்றறே…என்ற விரக்தியில், நாயை சுமையாக – பிரச்சினையாகக் கருதி, அதனை வீட்டிலிருந்து உரிமையாளர் அடித்து விரட்டியுள்ளார்.

வீட்டுக்கு ஆபத்து ஏற்படும் தருணங்களிலேயே நாய் குரைக்கின்றது. எனவே, எத்திசையை நோக்கி நாய் குரைக்கின்றது என்பதை அவதானித்து , ஆபத்தை கண்டறிவதைவிடுத்து, நாயை விரட்டியடித்தால் அது வீட்டாருக்கே ஆபத்தாக அமையும்.

நாமும் நாட்டையும், அரசாங்கத்தையும் ஆதரிக்கின்றோம் – நேசிக்கின்றோம். எனவேதான் அரசாங்கத்துக்குள் ஏதேனும் தவறு இடம்பெறும்பட்சத்தில் அதற்கு எதிராக குரல் எழுப்புகின்றோம். இதனை புரிந்து கொள்ளாதவர்களுக்கும் அழிவுதான் ஏற்படும்.”

இவ்வாறு கதைப்பாணியில் இன்று கருத்தொன்றை வெளியிட்டார் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில.

அரசாங்கத்துக்கு பங்காளிக்கட்சிகள் அழுத்தங்களைப் பிரயோகித்தாலும், அவை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை. அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றனவே என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கதைகூறி – விளக்கமளித்தார் அமைச்சர் உதய கம்மன்பில.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டபோது இரட்டைக் குடியுரிமைக்கு எதிராக கம்மன்பில உட்பட பங்காளிக்கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். ஆனால் அந்த சரத்து நீக்கப்படவில்லை. புதிய அரசமைப்பு வரும்போது நிலைமை மாறும் எனக்கூறி சமாளிப்பு இடம்பெற்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தின்போதும் – எதிர்ப்பலை உருவாகியது. ஆனால் கிழக்கு முனையத்தைக்காட்டி, மேற்கு முனையத்தை வழங்குவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. இறுதியாக கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஆளுங்கூட்டணிக்குள் முறுகல் ஏற்பட்டது. ஆரம்பத்தில் பங்காளிகள் துள்ளினாலும் 40 வீத பங்குகளை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பங்காளிக்கட்சிகளின் கோரிக்கைகள், அழுத்தங்கள், வலியுறுத்தல்கள் ஆளுங்கூட்டணியின் தலைமைக்கட்சியான மொட்டு கட்சியின் எடுபடாமையை மையப்படுத்தியே மேற்படி கேள்வி சுருக்கமாக எழுப்பட்டிருக்கலாம்.

அதேவேளை, விருப்பம் இல்லாவிட்டால் பங்காளிக்கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என பிரதமரும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ‘நாய் கதை’ கூறி ஏதோவொரு எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் கம்மன்பில.

ஆர்.சனத்

Web Design by Srilanka Muslims Web Team