அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் - சுமந்திரனின் கூற்றுக்கு சிவாஜிலிங்கம் பதில் - Sri Lanka Muslim

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் – சுமந்திரனின் கூற்றுக்கு சிவாஜிலிங்கம் பதில்

Contributors

அரசாங்கத்துக்கு நொந்துவிடும் என்பதற்காக இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறாதீர்கள் என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இனவழிப்பு நடைபெற்றது என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் போதாது என சர்வதேச நிபுணர்களின் கருத்தைச் சுட்டிக்காட்டி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், சுமந்திரனின் கருத்துக் குறித்து சிவாஜிலிங்கத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அவர், “இனப்படுகொலை என்பது நேற்று இன்று நடந்தது இல்லை. இலங்கையில் நீண்ட காலமாக இடம்பெற்ற ஒரு விடயம்.

வட மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்லாது மாகாண சபையில் அங்கம் வகித்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு இனப்படுகொலை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனப்படுகொலை என்பது இன்று, நேற்றல்ல 1977ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக விசாரிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கிறோம்.

தந்தை செல்வா – பண்டா ஒப்பந்தத்தில்கூட எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் நடத்தப்படாமல் இருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1965ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற ஒப்பந்தத்தில்கூட இனப்படுகொலை நடந்தது தொடர்பான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில்கூட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழரின் வாழ்வியல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் சுமந்திரனுக்கு இனப்படுகொலை விடயம் தொடர்பாக விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 1983இல் இனத்தினை அழிக்கும் எண்ணத்தோடு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் அனைவருக்கும் அறிந்ததே.

எனவே, இனப்படுகொலை என்பது ஒரு இனத்தை தெரிவுசெய்து படுகொலை செய்ய நினைப்பது என்பதை நிரூபிக்க முடியும். உலகில் எத்தனையோ நாடுகளில் இனப்படுகொலை நடைபெற்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team