அரசாங்கத்தை கொண்டுவந்த தேரர்கள் கடும் அதிருப்தியில் - புதுக்கட்சியை தொடங்க பேச்சு ஆரம்பம்..! - Sri Lanka Muslim

அரசாங்கத்தை கொண்டுவந்த தேரர்கள் கடும் அதிருப்தியில் – புதுக்கட்சியை தொடங்க பேச்சு ஆரம்பம்..!

Contributors

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை உருவாக்க முன்நின்று பாடுபட்ட பௌத்த தேரர்கள் தற்போது புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்கான முதற்கட்டப் பணிகளை தொடங்கியிருக்கின்றனர்.

ஒன்றிணைந்த எதிரணியின் கோட்டையாக இருந்த கொழும்பு – நாரஹேன்பிட்டி அபயராமய விகாரையிலேயே புதுக்கட்சியை ஆரம்பிப்பதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிபீடம் ஏறி இரண்டு வருடங்கள் பூரணமாகவுள்ள நிலையில் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்கப் பெரிதும் பாடுபட்ட பிரதான பௌத்த தேரர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களது அதிருப்தியை அவர்கள் பகிரங்க ஊடக சந்திப்புக்களிலும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோட்டா-மஹிந்த அரசாங்கத்தை எதிர்த்து மாற்று வழியொன்றை உருவாக்குவது பற்றிய பேச்சுக்கள் கொழும்பில் நடத்தப்பட்டுள்ளன. அண்மையில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைக்கு அபயராமய விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், ஓமல்பே சோபித்த தேரர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பௌத்த தேரர்கள் தவிர, நல்லாட்சி அரசாங்கத்தில் பிரபல அமைச்சுப் பதவியை வகித்துவந்த முக்கியஸ்தரும் இதில் கலந்துகொண்டிருப்பதோடு தற்போதைய அரசாங்கத்திலுள்ள ஒருசிலரும் பங்கேற்றியிருப்பதாக கூறப்படுகின்றது.

விசேடமாக புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து மக்களை அந்தக்கட்சிக்காக வழிநடத்துவதற்கு முதலாவது சந்திப்பில் இணக்கம் எட்டப்பட்டதாக அபயராமய விகாரை தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, முருந்தெட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஓமல்பே சோபித்த தேரர் ஆகியோர் கடந்த வாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தனர். பிரதமராகவே முன்வந்து இந்த சந்திப்பினை ஒழுங்கு செய்திருந்த அதேவேளை, இதில் அரசாங்கத்தின் மீதுள்ள பல்வேறு குறைபாடுகளை தேரர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இருப்பினும் அவற்றை அரச தலைவரை சந்தித்து முறையிடும்படியே பிரதமர் ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பௌத்த பிக்குமார்கள் மாத்திரமன்றி கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையும் அதிருப்தியில் இருக்கின்ற நிலையிலேயே மேற்படி புதிய கட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்கான முதற்கட்ட முயற்சிகளும் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team