ஐ.நா. இன் 15 பக்க அறிக்கையில் 12 பக்கங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடந்த உரிமை மீறல்கள், பேச்சு தடை, ஊடக அடக்குமுறைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் - Sri Lanka Muslim

ஐ.நா. இன் 15 பக்க அறிக்கையில் 12 பக்கங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடந்த உரிமை மீறல்கள், பேச்சு தடை, ஊடக அடக்குமுறைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர்

Contributors

ஐ.நா. இன் 15 பக்க அறிக்கையில் 12 பக்கங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடந்த உரிமை மீறல்கள், பேச்சு தடை, ஊடக அடக்குமுறைகள் பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளது – எதிர்க்கட்சித் தலைவர்.

பாராளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உரையாற்றிக்கொண்டிருந்த போது, சற்று சலசலப்பு ஏற்பட்டது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இரண்டாவது நாளாக இன்று (25) இடம்பெற்றது.

முன்னதாக உரையாற்றிய, எதிர்க்கட்சித் தலைவர் ஐ.நாவில் இலங்கைக்கான பிரேரணை மீதான வாக்கெடுப்பு தொடர்பிலும் , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் விளக்கம் குறித்தும் புட்டுபுட்டு வைத்தார். இதனால், எதிரணியின் இருந்தவர்கள், அவ்வப்போது சிரித்து, சிரித்து ஆளும் கட்சியினரை கிண்டல் செய்தனர்.

“ஐ.நாவில், இலங்கைக்கு ஆதரவான நாடுகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது. அதனடிப்படையில், பிரேரணைக்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. 14 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன” என சஜித் பிரேமதாஸ கூறுகையில், ஆளும் கட்சியில் இருந்தவர்களுகள் “ஆங்” என கோரஸ் செய்தனர்.

எனினும், எதிராக வாக்களித்த 11 நாடுகளும், நடுநிலை வகித்த 14 நாடுகளையும் கூட்டினால், ஆதரவாக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாகும். அதாவது 3 வாக்குகள் கூடுதலாகவே கிடைத்துள்ளன என அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார். அப்படியாயின், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்குகளையும் உங்களது முறைமையின் கீழே கணக்கிடுவோமா என சஜித் பிரேமதாஸ கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, “ஜனாதிபதி தேர்தல் வாக்குகள் எண்ணப்படுவது ஒரு முறைமையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது” என்றார்.

ஐ.நாவில் இலங்கைக்கான ஆதரவு குறைந்து கொண்டே வருகின்றது. இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கையின் காரணமாகவே இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்ட சஜித் பிரேமதாஸ, அரசாங்கத்தின் இருக்கும் மற்றுமொருவர், எதிராக வாக்களித்த நாடுகளின் சனத்தொகையை கணக்கிட்டால் நாங்களே வெற்றிப்பெற்றுள்ளோம் என்கிறார்.

இந்நிலையில், ஜெனிவாவில் இருக்கும் இலங்கை அதிகாரிகள், இலங்கைக்கு கிடைக்கவிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகாரிக்கவேண்டுமாயின் அரசாங்கத்தில் இருக்கும் மரமண்டைகள், வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐ.நா பிரேரணையின் அறிக்கையின் பிரகாரம், 3 பக்கங்களின் மட்டுமே வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளன ஏனைய 12 பக்கங்களிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல், பேச்சு சுதந்திரத்துக்கான தடை, ஊடக அடக்குமுறை, ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடுகள் தொடர்பிலே குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகையால், அரசாங்கம் தன்னுடைய வெளிநாட்டு கொள்கை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்

Web Design by Srilanka Muslims Web Team