அரசியல் கைதிகள் விடுதலையில் சுதாகரனை விடுதலை செய்யாதமை ஏமாற்றமாக உள்ளது : அரசின் பங்காளி கட்சியான இலங்கை மக்கள் தேசிய கட்சி கவலை..! - Sri Lanka Muslim

அரசியல் கைதிகள் விடுதலையில் சுதாகரனை விடுதலை செய்யாதமை ஏமாற்றமாக உள்ளது : அரசின் பங்காளி கட்சியான இலங்கை மக்கள் தேசிய கட்சி கவலை..!

Contributors

நூருல் ஹுதா உமர்

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுஜன கூட்டணியில் நாற்பது கட்சிகள் இணைந்து ஒப்பந்தம் செய்திருந்தோம். அப்போது எங்களுடன் சிறந்த புரிந்துணர்வுடன் நடந்து கொண்டவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸ அவர்கள். அந்த காலப்பகுதியில் எங்களுடனான பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தினோம். அது இப்போது சாத்தியமாகியுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஸ சிறந்த நிர்வாகி அவர் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராக மாறி அதனுடாக அமைச்சு பதவியையும் பெற்று நாட்டின் சகல பாகங்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும். அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நாகராசா விஸ்ணுகாந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனையில் இன்று (29) மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

எரிபொருளின் விலையேற்றத்தை தீர்மானிப்பது அரசாங்கமில்லை. சர்வதேச விலைச்சுட்டியை அடிப்படையாக கொண்டே எரிபொருள் விலையேற்றம், விலையிறக்கம் தீர்மானிக்கப்படுகிறது. விலையேற்றத்தை சுட்டிக்காட்டி கோத்தாபய அரசை கலைக்க கோருபவர்கள் யாரை ஆட்சிப்பீடம் ஏற்ற முனைகிறார்கள். அமைச்சர் உதய கம்பன்வில நாட்டை நேசிக்கும் சிறந்த அரசியல்வாதி. இந்த விலையேற்றத்தினுடாக கிடைக்கும் பணங்களை யாரும் வெளிநாட்டுக்கு கொண்டுசெல்வதில்லை. எமது நாட்டுக்குள்ளையே அது சுற்றிக்கொண்டிருக்கிறது. இதற்காக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாட்டுவண்டி சவாரி செய்வது தீப்பந்தம் ஏந்துவதெல்லாம் முறையாகாது. காலாகாலத்திற்கும் வரும் சகல எதிர்க்கட்சிகளும் இதைத்தான் செய்கிறார்கள்.

எங்களின் அரசாங்கம் அரசியல்கைதிகளை விடுதலை செய்த விடயத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும் எங்களுக்கு பூரண திருப்தியில்லை. அரசியல் கைதியாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுதாகரன் அவரது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி இம்முறை விடுதலை செய்யப்படுவார் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகியுள்ளது. அவரது மனைவி இறந்துள்ள நிலையில் பாட்டியிடம் வளர்ந்துவரும் சிறுபிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தினுள் கொண்டு அவரை விடுதலை செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும். சுதாகரன் போல பல்வேறு கதைகளை உடைய பல அரசியல் கைதிகளும் சிறையில் வாடுகிறார்கள் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team