அரசியல் சலசலப்புக்களுக்கு தலைவர் றிசாத் பதியுதீனையே அரசாங்கம் பலியிடுகிறது : கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்..! - Sri Lanka Muslim

அரசியல் சலசலப்புக்களுக்கு தலைவர் றிசாத் பதியுதீனையே அரசாங்கம் பலியிடுகிறது : கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்..!

Contributors

நூருல் ஹுதா உமர்

ஈஸ்டர் தாக்குதல் முடிந்து இரண்டாண்டுகள் முடிந்தும் இந்நாட்டில் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதனால் ஏற்படும் அரசியல் சலசலப்புக்களை மறைக்க அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனையே அரசாங்கம் மையப்படுத்தி பழிவாங்குவதை இந்த நாட்டு மக்கள் நன்றாக அறிவர் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் தெரிவித்தார்.

அண்மையில் கைதுசெய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து இன்று கல்முனை மாநகர சபை சபா மண்டபத்தின் முன்றலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்த நாட்டில் மலிந்துள்ள ஊழல்கள், முறைகேடுகளை மறைக்க முன்னாள் அமைச்சர் றிசாத் அவர்களையும், அவர்களின் குடும்பத்தினர்களையும் அநியாயமாக கைது செய்கிறார்கள். இந்த நாட்டில் ஜனநாயம், தனிமனித உரிமைகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மாத்திரமின்றி பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் ஒருவரின் சிறப்புரிமையை இல்லாமலாக்கி கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதின் அவர்கள் இன, மத, பிரதேச பேதங்கள் கடந்த அர்ப்பணிப்பு மிக்க தலைவராகவும், மக்கள் சேவகராகவும் இருந்து வரும் ஒருவர். அவரின் விடுதலைக்கு நோன்பின் பொழுதுகளில் முஸ்லிங்கள் இறைவனிடம் பிராத்திப்போம் என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team