அரசியல் தீர்வை நோக்கிய பாதை - 01 » Sri Lanka Muslim

அரசியல் தீர்வை நோக்கிய பாதை – 01

poilics

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Siraj Mashoor


அரசியல் தீர்வு குறித்து சில முக்கியமான விடயங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவை என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான். புதிய பார்வை கொண்டோர், மாற்றுக் கருத்துள்ளோர் இந்த உரையாடலை வளர்த்துச் செல்லலாம்.

அரசியல் தீர்வு என்பது…

01.நமது அபிலாஷைகளை முடிந்த வரையில் உள்ளடக்குதல் (Aspirations),
02.ஒப்பீட்டளவில் குறைந்த பாதகங்களும் அதிக சாதகங்களும் உள்ள மாதிரிகளை இனம்காணல் (Pros & Cons),
03.எதிர்காலத் தாக்கங்களின் பல் பரிமாணங்கள் (Future Impacts and Dimensions),
04. நடைமுறைச் சாத்தியம் (Feasibility),
05. தீர்வின் நிலைபேறான தன்மை (Sustainability)

போன்ற காரணிகளிலேயே அதிகம் தங்கியுள்ளது.

அதனால்தான் ஒரு பன்மைச் சமூகத்தில் பல தரப்பட்டவர்களின் அபிலாஷைகள் சந்திக்கும் புள்ளிகள், இடைவெட்டுகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

அரசியல் பலம் குன்றிய சமூகத் தொகுதியினர், அநியாயம் இழைக்கப்படுவதற்கும் கூடிய பாதிப்புகளுக்கு உள்ளாவதற்குமான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஒவ்வொருவரும் மனம் போன போக்கிலே கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால், அரசியல் கோரிக்கைகளை முன்வைப்போர் விட்டுக் கொடுப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். ஆனால், அந்த விட்டுக் கொடுப்புகள் ஒருபோதும் அடிப்படைகளை, அடியாதாரமான விடயகளை சமரசம் செய்யக் கூடாது.

மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்; மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது தாழ்த்திக் கேட்க வேண்டும். மறுதலையாக, மக்களை உசாரேற்றி விட்டு அதில் கூதல் காயக் கூடாது.

எந்தத் தீர்வு மாதிரியை எடுத்துக் கொண்டாலும் அதில் நிச்சயம் சாதகங்களும் இருக்கும், பாதகங்களும் இருக்கும். தீர்வைக் கண்டடையும் பாதையில் சாதக, பாதககளை வருடக் கணக்கில் விவாதித்துக் கொண்டிருக்கலாம். இதை ஒப்பீட்டளவில் அலசி ஆராயும் நுணுக்கம்தான் மிகவும் இன்றியமையாதது.

கடந்த கால கசப்பான அனுபவங்களின் பாதையை நிச்சயம் நாம் திரும்பிப் பார்க்கத்தான் வேண்டும். அதிலிருந்து அவசியமான பாடங்களைப் படிக்கத்தான் வேண்டும். ஆனால், எதிர்காலம் நோக்கிய பாதையில், கடந்த காலம் ஒரு அவசியமற்ற பெரும் சுமையாக நம்மை அழுத்த நாம் அனுமதிக்கவும் கூடாது. இதிலும் நுணுக்கம் தேவை.

தீர்வு என்பது, இலங்கையின் ஆள்புல எல்லைக்குபட்டதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்றுள்ள உலக ஒழுங்கமைப்பில் பிராந்திய, சர்வதச நலன்களை, புவியரசியல் யதார்த்தங்களை- அவை இலங்கை மீது பிரயோகிக்கும் அழுத்தங்களை நாம் அலட்சியம் செய்ய முடியாது. இவற்றை எளிதில் கடந்து செல்லவும் முடியாது.

இன்றைய உலக ஒழுங்கமைப்பு பல்வேறு சிக்கலான கூறுகளால் ஆக்கப்பட்டது. அது அடிக்கடி மாறும் தன்மை கொண்டதாகவே உள்ளது.

ஆதலால் முடிந்த முடிபான, நிரந்தரத் தீர்வுகளைக் கண்டடைவது மிகவும் சிக்கலான பொறிமுறையாகும். ஆகவேதான் நடைமுறைச் சாத்தியமான, கணிசமான காலம் தாக்குப் பிடிக்கக் கூடிய தீர்வு மாதிரிகள் குறித்து நமது கவனத்தைக் குவிக்க வேண்டியுள்ளது.

தனியான இன மைய அதிகார அலகுகள் தாக்குப் பிடிப்பது மிகவும் கடினம். இன்னொரு ‘பாகிஸ்தானை’ – குறைந்தளவு அதிகார எல்லைக்குள்ளேனும் – இங்கு நிறுவ முற்படுவது அபாயகரமானது. அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. தேசியவாதங்களைக் கடந்து செல்ல வேண்டிய வரலாற்றுப் பிரிசந்தியில் நாம் வந்து நிற்கிறோம். தோற்றுப் போன அரசியல் மாதிரிகள், வரலாற்று ஓட்டத்தில் நம்மை ஓட்டாண்டிகளாகவும் அரசியல் அநாதைகளாகவுமே மாற்றி விடும்.

இந்தப் பின்புலத்தில்…

இலங்கையின் கிழக்கு மாகாணம் தனியான மாகாணமாக இருப்பதே அதிகம் நன்மை பயக்கும். இதுவே நடைமுறைச் சாத்தியமான தீர்வு அலகாகவும் இருக்கிறது. அத்துடன் இங்குள்ள பல்லினப் பண்புக்கு அதிகம் பொருந்தி வருவதாகவும் உள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு தீர்வு வழங்குவது என்பது, ஒரு வகையில் முழு இலங்கையர்களுக்குமான நீடித்த தீர்வுக்கான பாதையை இலகுபடுத்தும்.

கிழக்கு மாகாணத்தின் இனச் சமநிலையும், அதிகார சமநிலையும் தனிச் சிறப்பு மிக்கது. இலங்கையின் வேறெந்த மாகாணங்களிலும் இந்தப் பண்பைக் காண முடியாது. ஆதலால்தான் கிழக்கிலங்கை மக்கள் முன்னே, பிளவுபட்ட சமூகங்களை ஒருங்கிணைக்கும் வரலாற்றுக் கடப்பாடு இருக்கிறது.

தொடரும்…

Web Design by The Design Lanka