அரசியல் நெருக்கடியால் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த ஜனாதிபதி » Sri Lanka Muslim

அரசியல் நெருக்கடியால் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்த ஜனாதிபதி

maith

Contributors
author image

Editorial Team

(BBC)


நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரை கடந்த நள்ளிரவுடன் முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த கூட்டத்தொடரை மே மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இங்கு உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடி காரணமாகவே அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொண்டதாக பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து ஜனாதிபதியின் செயலரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின்படி, மே மாதம் 8ஆம் திகதியே நாடாளுமன்ற புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலகட்டத்தில் நாடாளூமன்றத்தில் பிரேரணைகளையோ அல்லது கேள்விகளையோ சமர்ப்பிக்க முடியாது.

அதேவேளை, தற்காலிகமாக 4 பதில் அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து பதவி விலகிய ஜனாதிபதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 6 பேருக்கு பதிலாகவே இந்த 4 புதிய அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி முன்னதாக அறிவித்த முழுமையான அமைச்சரவை மாற்றம் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரே நடக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சரத் அமுனுகம, ரஞ்சித் சிவம்பலப்பிட்டிய, பைசத் முஸ்தபா மற்றும் மாலிக் சமரவிக்கிரம ஆகியோரே புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிக அமைச்சர்களாவர்.

Web Design by The Design Lanka