அரசு மறுத்தாலும் பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக கூறுகின்றனர் அங்கோலா முஸ்லிம்கள் - Sri Lanka Muslim

அரசு மறுத்தாலும் பள்ளிவாசல்கள் மூடப்படுவதாக கூறுகின்றனர் அங்கோலா முஸ்லிம்கள்

Contributors

அங்கோலாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல்கள் தகர்க்கப்படுவதாகவும் வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் அரசாங்கத்தின் இக் கருத்தினை மறுத்துள்ள அங்கோலா முஸ்லிம்களின் சார்பில் பேசவல்ல அதிகாரியான டேவிட் ஜா, ஏற்கனவே பல பள்ளிவாசல்கள் மூடப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கோலாவில் இஸ்லாத்திற்கோ அல்லது ஏனைய மதங்களுக்கோ எதிராக எந்த யுத்தமும் தொடங்கப்படவில்லை என அந்நாட்டு மத விவகாரங்களுக்கான தேசிய நிறுவகத்தின் பணிப்பாளர் மனுவல் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். வணக்கஸ்தலங்களை இலக்கு வைத்து தகர்க்க வேண்டிய எந்தவித அதிகாரபூர்வ தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கோலாவில் இஸ்லாத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பள்ளிவாசல்கள் தகர்க்கப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து சர்வதேச முஸ்லிம்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையிலேயே நேற்று முன்தினம் அங்கோலா அரசாங்கம் தனது மறுப்பினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டேவிட் ஜா, அங்கோலாவில் மத சகிப்புத்தன்மை அற்றுப் போயுள்ளதாகவும் அரசியல் ரீதியான அடக்குமுறைகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வாரமும் தெற்கு நகரமான ஹுவாம்போவில் உள்ள பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டது. அதேபோன்று இந்த வாரமும் லுவான்டாவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றை மூடுமாறு எம் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்றும் டேவிட் ஜா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் உரிய அனுமதிப் பத்திரங்களின்றி இயங்கும் பள்ளிவாசல்களே இவ்வாறு மூடப்படுவதாக அந்நாட்டு கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்கள அறிக்கைகளின் படி அங்கோலாவில் மத சுதந்திரம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 அங்கோலாவின் சட்டவிதிகளுக்கமைய மத நிறுவனம் ஒன்று பாடசாலைகளையோ வணக்கஸ்தலங்களையோ நிர்மாணிப்பதற்கு முன்கூட்டியே அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறித்த மதப்பிரிவு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டிருப்பதுடன் அந்நாட்டிலுள்ள 18 மாநிலங்களில் 12 மாநிலங்களில் பின்பற்றப்படுபவையாகவும் இருக்க வேண்டும்.
இதேவேளை அந்நாட்டில் இஸ்லாத்தை சுதந்திரமாகப் பின்பற்ற முடியாதிருப்பதாக அங்கோலா முஸ்லிம் குழுக்களின் பிரதிநிதிகள் தெரிவித்ததாக 2012 இல் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெ ளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள், முஸ்லிம் பாடசாலைகள் என்பன அடிக்கடி அரசாங்கத்தின் தலையீடுகளுக்குள்ளாவதாகவும் அவை மூடப்படும் நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அங்கோலாவில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான முஸ்லிம்களே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team