அரசையும், ஜனாதிபதியையும் கெஞ்சுவது என்பது கல்முனை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அரசின் கருணையை எதிர்பார்க்கும் அடிமைகளாக தொடர்ந்தும் இருக்க வேண்டி வரும் - முபாறக் மௌலவி - Sri Lanka Muslim

அரசையும், ஜனாதிபதியையும் கெஞ்சுவது என்பது கல்முனை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அரசின் கருணையை எதிர்பார்க்கும் அடிமைகளாக தொடர்ந்தும் இருக்க வேண்டி வரும் – முபாறக் மௌலவி

Contributors

-எஸ்.அஷ்ரப்கான்-

அரசை கெஞ்சுவது என்பது கல்முனை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அரசின் கருணையை எதிர்பார்க்கும் அடிமைகளாக தொடர்ந்தும் இருக்க வேண்டி வரும் என்ற நிலைப்பாட்டின் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என எச்சரிக்கிறோம் என்று முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச செயலகத்தை இரண்டாக பிரிப்பது பற்றிய தமது கட்சியின் நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது. இது பற்றி கல்முனையில் கடந்த வாரம் நடைபெற்ற ஊடக மாநாட்டில் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்ததாவது,

கல்முனையை இன ரீதியாக பிரிப்பது என்பது முடியாத காரியம் என்பதை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் கல்முனை பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை பொது மக்களுக்கு இலகுபடுத்துவது எனும் அடிப்படையில் கல்முனை வடக்கு பிரதேச செயலக கோரிக்கை அமையுமாயின் இது விடயத்தில் நாம் இரண்டு தெரிவுகளை முன்வைக்கிறோம். முதலாவது, கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தின் எல்லை என்பது கல்முனை ஸாஹிறா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை நீதிமன்ற வீதி வரை இருக்க வேண்டும்.

அதற்கப்பால் உள்ள, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, மருததமுனை ஆகியவற்றை இணைத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அமைவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.  இது விடயத்தில் நற்பிட்டிமுனை மக்கள் தாம் விரும்பினால் அவர்கள் கல்முனை தெற்குடன் அல்லது வடக்குடன் இணைந்து கொள்ளலாம்.

இரண்டாவது தெரிவு என்பது தமிழ் மக்களின் கோரிக்கைக்கு அமைய தரவைக்கோயில் வீதியிலிருந்து கல்முனை வடக்கு எல்லை அமைய வேண்டுமாயின் மேற்படி கோயிலிலிருந்து ஆரம்பமாகும் பிரதான வீதி தனியான கிpராம சேவகர் பிரிவாக உருவாக்கப்பட்டு கல்முனை தெற்குடன் இணைக்கப்பட வேண்டும். அதாவது தரவைக்கோயில் உள்ள பிரதான வீதியிலிருந்து கல்முனை பஸ் டிப்போ வரையான பகுதியும், கல்முனை சந்தையும் வரும் ஒரே நேர்கோடான பிரதேசத்தை தனியான கிராம சேவகர் பிரிவாக உருவாக்கப்பட்டு அது கல்முனை தெற்குடன் இணைக்கப்பட வேண்டும்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கான சேவைக்காகவே மேற்படி வடக்கு பிரதேச செயலக கோரிக்கை அமையுமாயின் நாம் மேற்சொன்ன பிரதான வீதியைக்கொண்ட தனியான கிராம சேவகர் பிரிவில் தொண்ணூற்றி ஐந்து வீதம் முஸ்லிம்களே வாழ்வதால் அதனை கல்முனை வடக்குடன் இணைப்பது நீதியானதாக அமையாது என்பதுடன் இதனை கல்முனை முஸ்லிம்களில் எவரும் ஏற்றுக்கொள்மாட்டார்கள்.  அதனை விடுத்து தரவைக்கோவில் எல்லையிலிருந்து அதன் உட்பகுதியிலேயே தமிழ் மக்களின் குடியிருப்புக்கள் உள்ளதால் அவற்றை கல்முனை வடக்குடன் இணைத்துக்கொள்ள முடியும். அதற்கு முன் நாம் சொன்னது போன்று கல்முனை நகரை உள்ளடக்கிய பிரதான வீதிக்கென தனியான கிராம சேவகர் பிரிவு உருவாக்கப்பட்டு அது கல்முனை தெற்குடன் இணைக்கப்பட வேண்டும்.

ஆகவே கல்முனை மக்களின் நலனை முன்னிட்டு எமது கட்சியின் இந்த நிலைப்பாடு சம்பந்தமாக மனந்திறந்து பேசுவதற்கு தமிழ் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரசும் முன்வர வேண்டும். அதனை விடுத்து இது விடயத்தில் அரசையும், ஜனாதிபதியையும் கெஞ்சுவது என்பது கல்முனை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் அரசின் கருணையை எதிர்பார்க்கும் அடிமைகளாக தொடர்ந்தும் இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team