அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை! - Sri Lanka Muslim

அரச ஊழியர்களுக்கு இனி வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை!

Contributors

அண்மைய நாட்களில்  எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக, அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை நேற்று (01) வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அண்மைய நாட்களில் நிலவிய போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெள்ளிக்கிழமையை அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து, பொதுநிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது. எனினும், தற்போது பொதுப் போக்குவரத்து படிப்படியாக வழமைக்கு திரும்பிவருகிறது. போக்குவரத்திலிருந்து விலகியிருந்த 800 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபை மீள சேவையில் இணைத்துள்ளது. அத்துடன், வெற்றிகரமான முறையில் QR முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கப்படுகிறது.

எனவே, இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்யுமாறு, பொதுநிர்வாக அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் வழமைபோல இயங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team