அலி உதுமான் சேர்: துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும். » Sri Lanka Muslim

அலி உதுமான் சேர்: துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்.

ali uthuman6

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Siraj Mashoor‎ 


ஒவ்வொரு ஓகஸ்ட் 01 ஆம் திகதியும் அலி உதுமான் சேரின் நினைவுகள்தான் மனசை ஆக்கிரமித்திருக்கும். துயரம் நெஞ்சைப் பிழியும்.

முன்னாள் வடகிழக்கு மாகாண சபை உறுப்பினரான அலி உதுமான் சேர், 1989 ஓகஸ்ட் 01 ஆம் திகதி ENDLF இயக்கத்தினரால் அவரது வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த சம்பவம் நடைபெற்றபோது நானும் அருகில் இருந்தேன்.

முழு ஊரும் கலங்கிப் போயிற்று. இளைஞர்கள் ஆத்திரமடைந்து கொதித்துக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் எங்கும் சூழத் தொடங்கியது.

எங்கள் வீட்டுக்கு அயலில்தான் அலி உதுமான் சேரின் வீடும் இருந்தது. அவர் எனக்கு உறவினரும் கூட. எனது மச்சியைத்தான் திருமணம் செய்திருந்தார்.
கேணல் நெஞ்சப்பா தலைமையில் இந்திய ராணுவம் எங்கள் ஊரில் இருந்த காலம் அது. வீதியெங்கும் இந்திய இராணுவத்தினர் நிறைந்திருந்தனர்.

ஆத்திரமடைந்த இளைஞர்களை அமைதிப்படுத்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் EPRLF தலைவர் தோழர் பத்மநாபா அங்கு ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கினார். அலி உதுமான் சேர் போலவே நெடிய உருவம். தமிழ் இயக்கத் தலைவர் ஒருவரை அன்றுதான் நேரில் கண்டேன்.

ENDLF தங்களது இயக்கமாக இல்லாத போதிலும், மாகாண அரசில் EPRLF உடன் அவர்கள் கூட்டணியாக இருந்ததால், நாபா நேரில் வந்து வருத்தம் தெரிவித்தார். ஆனால், கொதிநிலையில் இருந்த மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை. அன்றும் அதற்கடுத்த நாட்களும் பெரும் அல்லோல கல்லோலமாகவே நகர்ந்தன.

அன்றிரவு அடர்ந்த இருளின் இடையே, பலரது கண்ணீருக்கும் பிரார்த்தனைகளுக்கும் மத்தியில், தைக்காவடி மையவாடியில் அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. பெரும் சனக் கூட்டம். ஊரே திரண்டிருந்தது. மக்களுக்காகப் பாடுபட்ட ஒரு நேர்மையான மனிதனுக்குத்தான் அவ்வளவு கூட்டம் சேரும்; அவ்வளவு கரங்கள் உயரும்.

அல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து, உயர்ந்த சுவனபதியை அருள்வானாக.

28 வருடங்களின் பின்பு அந்த மரணத்தை நினைக்கிறபோது மனம் அழுகிறது. எவ்வளவு உயர்ந்த போராளி அவர்! போராளி என்ற வார்த்தை அவருக்குத்தான் மிகச் சரியாகப் பொருந்தும்.

அவர் ஷஹீதாக மரணித்த பத்தாண்டு நிறைவில் 1999 ஓகஸ்ட் முதலாம் திகதி, அவரது நினைவாக ஒரு சிறுநூலை வெளியிட்டோம். ‘துப்பாக்கி அரக்கரும் மனிதனின் விதியும்’ என்பது அதன் தலைப்பு. அது குறித்து அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

அவர் மௌத்தான அன்றைய தினம் வெளியாகிய மஞ்சள் நோட்டீஸ் கவிதை, பலரது மனதுள் பதிந்து இன்னமும் அழியாமல் வாழ்கிறது. அது குறித்தும் எழுதுவேன்.

ali uthuman

Web Design by The Design Lanka