அலி சப்றி றஹீம் : தனது இழி செயலை நியாயப்படுத்த புத்தள மக்களை சந்திக்கு இழுக்கின்றாரா…? - Sri Lanka Muslim

அலி சப்றி றஹீம் : தனது இழி செயலை நியாயப்படுத்த புத்தள மக்களை சந்திக்கு இழுக்கின்றாரா…?

Contributors

” எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே “ என கூறுவதை கேட்டிருப்போம். இங்கு புத்தளம் என கூறப்படுவது, நாம் தற்போது புத்தளம் என அழைக்கும் பிரதேசத்தையல்ல, அது புது பிரதேசமொன்றையாகும். இதனை தவறாக புரிந்துகொண்டவர்கள் புத்தளத்திற்கு செல்ல வேண்டாம் என பொருள்கொள்வர். இதனை சிலர் புத்தளத்தை இழிவுபடுத்தவும் பயன்படுத்துவர். இது அறியாமையின் விளைவுகளில் ஒன்று என்பது மறுப்பதற்கில்லை. தற்போது பா.உறுப்பினர் அலி சப்றி றஹீம் செய்து கொண்டிருப்பதானது புத்தள மண்ணுக்கு, ஒரு வாரலாற்று கரும்புள்ளியையே ஏற்படுத்தப் போகிறது. இந்த கரும்புள்ளியை யாராலும் ஒரு போதும் அகற்றிட இயலாது போகும்.

இலங்கை முஸ்லிம்களை உச்ச அளவில் வேதனைபடுத்திய அரசாக தற்போதைய ஆளும் அரசை குறிப்பிடலாம். முஸ்லிம்களின் ஜனாஸாக்களையே எரித்து, கையில் சாம்பலை கொடுத்த இவ்வரசை ஏசி பெற்ற வாக்கில் வென்று, அவ் அரசையே ஆதரிப்பதைப் போன்ற கேவலம் வேறு எதுவும் இருக்க இயலாது. இவரது மேடைகளில், இவரின் பிரதான போட்டியாளராக கருதப்பட்ட மரணித்த நகர பிதா பாயிஸ் மொட்டு அணி சார்பானவர் என கூறியே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவருக்கு போதியளவு வாக்கு கிடைக்காமைக்கு இவ் விமர்சனமே பிரதான காரணமாக அமைந்திருந்தது. அலி சப்றி றஹீம் பாராளுமன்றம் தெரிவாகியதும், அவர் பிரச்சாரங்களில் முன் வைத்த கருத்துக்கு முற்றிலும் மாற்றமாக, ஒரு மொட்டு உறுப்பினராகவே செயற்படுகிறார். பெரும் வர்த்தகர்கள் அரச ஆதரவின்றி, தங்களது வர்த்தக நடவடிக்கைகளை கொண்டு செல்ல முடியாது. பா.உறுப்பினர் அலி சப்றி றஹீமும் வர்த்தகரல்லவா? எப்படி எதிர்க்க இயலும்?

இவர் மொட்டுவை ஆதரிப்பது அவரது சுயநலத்தின் அடிப்படையிலாகும். இவர், தனது சுயநலத்தை மறைக்க, மக்கள் நல பூச்சை பூச முனைவதை அவதானிக்க முடிகிறது. இவர், தனது நியாயப்படுத்தல்களின் போது, புத்தளம் மக்கள், முக்கியஸ்தர்கள், ஜம்மியதுல் உலமா போன்ற அமைப்புகள், நபர்கள் கூறியே, தான் அரசை ஆதரிப்பது போன்ற விம்பத்தை ஏற்படுத்த முனைகிறார். தங்களது பகுதியை அபிவிருத்தி செய்ய இதுவே பொருத்தமாக தீர்மானமாக அவர்கள் கூறுவதாகவும் கூறுகிறார். இதுவே இங்கு ஆழச் சிந்திக்க வேண்டிய ஒன்று. இதுவே புத்தள மக்களை இழிவுபடுத்தும் புள்ளி.

எமது முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்து, சாம்பலை கையில் கொடுத்தாலும் பறவாயில்லை, எங்களுக்கு பாதை போன்ற அபிவிருத்தி தான் வேண்டும் என்று யாராவது கூறியிருப்பார்களாக இருந்தால் ( இது பா.உறுப்பினர் அலி சப்றி றஹீம், தன்னை நியாயப்படுத்த கூறும் கூற்றே தவிர, ஒரு போதும் புத்தள மக்களின் எண்ணமாக இராது என உறுதியாக நம்புகிறேன். ), அவர்கள் அல்லாஹ்வின் தண்டனையை பயந்துகொள்ளட்டும். தற்போது புத்தளத்தில் சில பாதைகள் போடப்படலாம், அது முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை எரித்த சாம்பலில் தான் போடப்படுகிறது, போடப்பட்டுள்ளது, போடப்படும் என்பதை உறுதியாக பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை, ஏன் எரித்தீர்கள் என கேள்வி கேட்டாமல் மௌனமாக இருக்கவும், இதன் பிறகு நடக்கப்போகும் அநியாயங்களை இவர்கள் ஆதரிக்கவும் வழங்கப்பட்டே பரிசுகளே இவைகளாகும். ஒரு இஸ்லாமிய புத்தகத்தை கூட இலங்கைக்குள் இலகுவாக கொண்டுவர முடியாத நிலையிலுள்ளோம். இன்னும் எத்தனையோ விடயங்களை சுட்டிக்காட்ட முடியும். தற்போது இவர்கள் போடும் பாதைகள் மார்க்கத்தை விட்டுக்கொடுக்க, முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களை பார்த்து மௌனிக்கவுமே என சுருக்கமாக குறிப்பிடலாம். இப்படியான அபிவிருத்திகள் தேவை தானா? இது இறை சாபத்தை கேட்டுப் பெறுவது போன்று அமையாதா?

உங்கள் மாவட்டத்திற்கு மூன்று தசாப்தங்களின் பின் பா.உறுப்புரிமை கிடைத்திருக்கலாம். அவர் அபிவிருத்திகளை செய்ய வேண்டிய கடப்பாடு உடையவாராகவும் இருக்கலாம் என்பதெல்லாம் மறுப்பதற்கில்லை. அதற்காக இப்படி மார்க்க விடயங்களை சகித்துக்கொண்ட அபிவிருத்தி தேவை தானா? புத்தளம் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் பா.உறுப்புருமையை பெற்றுள்ளது. இலங்கையில் எத்தனைமோ மாவட்டங்கள் முஸ்லிம் பா.உறுப்பினரை பெற சாத்தியமற்ற நிலையில் உள்ளது. அவர்கள் இருப்புக்கள் பற்றி சிந்திக்கும் கடமை ஒவ்வொரு பா.உறுப்பினருக்கும் உள்ளது. இது நீண்ட கலந்துரையாடல் செய்ய வேண்டிய பகுதி. அலி சப்றி றஹீமை புத்தளத்துக்கான பா.உறுப்பினராக நோக்குவதை விட, முழு இலங்கை முஸ்லிம்களினதும் பிரதிநிதிகளில் ஒருவராக நோக்குவதே சால பொருத்தமானது.

அபிவிருத்தியே அரசியல் என்ற கொள்கை மிகவும் இழிவானது. அது இலங்கை முஸ்லிம் அரசியலுக்கு சிறிதும் உகந்ததல்ல. இலங்கைக்கு இஸ்லாமிய புத்தகங்களை கொண்டு வர தடை செய்தால், எப்படி நாம் இஸ்லாத்தை கற்பது? மத்ரஸாக்களையும் தடை செய்தால், எம் சந்ததிகள் மார்க்கத்தில் எந் நிலையில் இருப்பார்கள்?அல்லாஹ், அவனது மார்க்கத்தை எதிரியை கொண்டாவது பாதுகாப்பான். இவைகளை நாம் பாதைகளுக்காக சகிக்க முடியுமா? அதனை சகித்தால் இறை தண்டனை எம்மை வந்தடையாதா? நாம் அஞ்ச வேண்டியது ராஜபக்ஸ அரசுக்கா அல்லது அல்லாஹ்வுக்கா?

நான் மேலே சுட்டிகாட்டியுள்ள விடயங்களை புத்தள மக்கள் நன்கு அறிவார்கள். இந்த அற்ப பாதை அபிவிருத்திக்காக, எமது புனித மார்க்கத்தில் விளையாடும் அரசை ஒரு போதும் ஆதரிக்க கூறியிருக்க மாட்டார்கள் என, ஈமான் கொண்ட ஒருவனான உறுதிபட நம்புகிறேன். துன்யாவின் மோகங்களில் ஒன்றான அற்ப அரசியல் இலாபத்துக்காக, புத்தள மக்கள் கூறியே, தான் இந்த அரசை ஆதரிக்கின்றேன் என கூறி, புத்தள மக்களை இழிவுபடுத்தும் செயலை பா.உறுப்பினர் அலி சப்றி றஹீம் நிறுத்த வேண்டும். பா.உறுப்பினர் அலி சப்றி றஹீமின் இக் கருத்துக்கு புத்தள மக்கள மக்கள் கண்டனத்தை பதிவு செய்வதோடு, எதிர்காலத்தை தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் நம்புகிறேன்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Web Design by Srilanka Muslims Web Team