அளுத்கமை முதல் மஹியங்கனை வரை » Sri Lanka Muslim

அளுத்கமை முதல் மஹியங்கனை வரை

aluthgama

Contributors
author image

M.M.A.Samad

உலகளாவிய ரீதியில் இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் விருத்தியும் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரிகளை கிளிகொல்லச் செய்திருக்கிறது. அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. அதற்கான நவீன பெயர்தான் இஸ்லாமிய போபியா என அழைக்கப்படுகிறது.

இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் வளர்ச்சி குறித்த அச்சமானது இன்று நேற்று உருவானதல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே எதிரிகளிடம் உருவாகிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் உலகளவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புக்கள் சீரழிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு வருகின்றமையாகும்.

முஸ்லிம்களுக்கு எதிரான நவீன அழிப்பு நடவடிக்கைளின் ஆரம்பம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி நியோர்க் நகரிலுள்ள இரட்டை வர்த்தகக் கோபுரத் தாக்குதல் நாடகத்துடன் ஆரம்பித்தது. அதன் பின்னர் இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை உருவாக்கி கிளர்ச்சியாளர்களுக்கும், மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்குவதாக அந்நாடுகளுக்குள் நுழைந்து குறிப்பாக ஈராக், லிபியா போன்ற நாடுகளின் வலிமைமிக்க அரசியல் தலைவர்களையும் அந்நாடுகளின் சமூக, பொருளாதார, அரசியலையும் அழித்து, சின்னாபின்னமாக்கி இலட்சக்கணக்கான மக்களை கொண்டழித்து, அகதிகளாவும், அங்கவீனர்களாகவும் ஆக்கியதன் பின்னணியில் இஸ்லாத்தின் எதிரிகளிடத்தில் காணப்படும் இஸ்லாமிய போபியாதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இஸ்லாம் வெறுத்த தீவிரவாதத்தையும,; பயங்கரவாதத்தையும் இஸ்லாமிய பெயர்தாங்கியவர்களைக் கொண்டு அமைப்புக்களை உருவாக்கி, அவற்றின் மூலம் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் எதிரிகளின் மற்றுமொரு கைவரிசைதான் தற்போது மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலையாகும்.

வலைகுடாவை நெருக்கடிக்குள் தள்ளி கட்டார் நாட்டுக்கு எதிராக சவூதி உள்ளிட்ட ஏனைய ஆறு நாடுகள் முன்னெடுத்த நடவடிக்கைகளின்; பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி ரொனாட் ரம்பின் சவூதி விஜயமும், அவர் 52 நாடுகளின் தலைவர்கள் மத்தியில் ஆற்றிய உரையும், ஊடகப் பயங்கரவாதமும்;, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அமெரிக்காவுக்கான தூதுவராகக் கருதப்படுகின்ற யூசுப் குதைபா என்பவரின் மின்னஞ்சல் திருடப்பட்டு அவை கசியவிடப்பட்டமையும் அவருக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான தொடர்பும் என பல்வேறு பின்னணிக்; காரணிகள் காணப்படும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் பொருளதார மற்றும் சமூகக் கட்டமைப்பு சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கிறது.

வலைகுடாவின் சமகால நிலைமைகள் தொடர்பில் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்ட மேற்குல இஸ்லாமிய எதிரிகள் முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த சிங்கள கடும்போக்காளர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து கடந்த காலங்களில் அவ்வமைப்புக்களுக்கு உரமூட்டியவர்கள் தற்போது முதலைக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசின் மீது குற்றஞ்சுமற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசும் இவ்வன்முறையாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் காலம் தாழ்த்தி வருகிறது என்ற நிதர்சனங்களுக்கு மத்தியில,; கடும்போக்காளர்கள் இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்படுத்துகின்ற நெருக்கடிகள் இன்று நேற்று ஆரம்பித்ததல்ல.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்;
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இந்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தொடங்கி விட்டது. அதன் வரலாற்றுப் பதிவுகளை மீட்டுப்பார்க்கும் காலத்திற்குள் நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். ஏனெனில், ஆங்கங்கே முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் சம்பவங்கள் இந்நாட்டில் அமைதியாக வாழும் முஸ்லிம்களின் நிம்மதியைச் சீர்குழைத்து பெரும் அழிவுக்குள் தள்ளிவிடுவதற்கு எடுக்கப்படும் முயற்சியே என்பதில் எவ்வித சந்தேகவுமில்லை.

இருப்பினும், அநியாகம் இழைக்கப்பட்ட சமூகமாக வாழும் முஸ்லிம்களினது பிரார்த்தனைக்கும் இறைவனுக்குமிடையில் எவ்வித திரையுமில்லை என்ற நம்பிக்கையில் பொறுமை காப்பது நமது தேவையாகவுள்ளது. விளக்கில் வண்டு விழுந்த கதைக்கு முஸ்லிம்கள் ஆகிவிடாமல் இருப்பதற்கு பொறுமையும் நிதானமும் அவசியமாகவுள்ளது.

ஏனெனில், இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியான கால வரலாற்றைப் பின்னோக்கிப் நோக்குகின்றபோது, மேற்குல ஏகாதிபத்திய வாதிகளின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் மறைமுக ஆதரவுடன் 1915ஆம் ஆண்டின் மே மாதத்தின் பிற்பகுதியில் ஆரம்பித்து அதே ஆண்டின் ஜுன் மாதத்தின் நடுப்பகுதியில் நிறைவுக்கு வந்த முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறையானது பல்வேறு அழிவுகளை அக்கால முஸ்லிம்களைச் சந்திக்கச் செய்துள்ளது. உயிர் இழப்பு முதல் சொத்தழிவு வரை இத்தாக்குதல்களினால் ஏற்படுத்தப்பட்டது.

இந்நாட்டில் முஸ்லிம்களின் வளர்ச்சியானது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பார்வையை தொடர்ச்சியாகக் குத்திக் கொண்டிருந்த போதிலும,; பல்வேறு கோணங்களில் அவற்றின் வெளிப்பாடுகள் அரங்கேற்றப்பட்டு வந்த போதிலும,; பெரும்பான்மைக் கட்சிகளின் அரசியல் தேவைகளுக்காக முஸ்லிம்களின் ஆதரவு இன்றியமையாததாக இருந்தமையினால், பேரினவாதத்தின் நேரடித்தாக்குதல்களை பெரும்பான்மை கட்சி அரசாங்கங்கள் அடக்கி வந்தன.

இருப்பினும், முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளும் பேரினவாத்தின் திட்டமானது நேரடியாகல்லாது மறைமுகமாகத் திசைமாற்றப்பட்டது. வடக்கு கிழக்கில் ஒரே மொழி பேசும் இனங்களாக வாழ்ந்த முஸ்லிம்களும் தமிழர்களும் தங்களுக்குள் மோதிக்கொள்ளவும் ஒருவரை ஒருவர் ஜென்ம விரோதிகளாக வரலாற்று நெடுங்கிலும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவும் பௌத்த சிங்கள பேரினவாதம் சூழ்ச்சி செய்தது.

இச்சூழ்ச்சியினால் காலத்திற்குக் காலம் தமிழர்களும் முஸ்லிம்களும் அடிக்கடி மோதிக்கொண்டனர். ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்களைக் கொண்ட அமைப்புக்களினால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமையும், தாக்கப்பட்டமையும் அதற்கு பதிலாக முஸ்லிம்கள் தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் இடம்பெற்றமையும என்ற இரு சமூகங்களும் விளங்;கிக் கொள்ளாத கசப்பான சம்பவங்கள் குறிப்பாக 1990 ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கில் நீடித்தது. அந்தக் கசப்பான வரலாற்றுத் தொடரின் பெரும் தவறுதான் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையாகும். இந்த வரலாறுகள் நம்முன் நிழலாடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், முஸ்லிம்களுகளுக்கு எதிரான செயற்பாடுகள் பொதுபலசேனா என்ற அமைப்பின் ஆரம்பத்துடன் வலுவடைந்தது என்று கூறலாம்.

2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொதுபலசேனா மற்றும் அவற்றோடு கைகோர்த்து செயற்பட்டுக்கொண்டிருக்கும் கடும்போக்குவாத அமைப்புக்களின் மத நிந்தனைகள், வெறுப்பூட்டும் பேச்சுக்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அதே நேரத்தில் பௌத்த சிங்கள அப்பாவி இளைஞர்கள் மத்தியில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வளர்ச்சி மீது அச்சத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் உருவாக்கியிருக்கிறது.

பொதுபலசோன உருவான காலம் தொட்டு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பட்டியல்கள் தொடர்ந்து நீண்டுகொண்டுதான் செல்கிறது. 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அநுராதபுரம் மல்வத்து ஓயா பள்ளிவாசலையும் அங்கு வாழ்ந்த முஸ்லிம்களின் குடியிருப்புக்களையும் அகற்றக் கோரி பிக்குகள் மேற்கொண்ட போராட்டத்துடன் தொடங்கிய முஸலிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இன்னும் ஓயவில்லை.

2013ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராக 250 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் 15 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு 2014ஆம் ஆண்டிலும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆட்சியின் இறுதிக்கால கட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல தாக்குதல் சம்பவங்கள் கடும்போக்காளர்களினால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

2014ல் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற எடுத்த முயற்சி, வீதி அபிவிருத்தி என்ற பெயரில் பள்ளிவாசலை அண்டி வாழ்ந்த மக்களை வெளியேற்றியமை, 300 வருட பூர்வீக வரலாற்றைக் கொண்ட மாவனல்லை தெவனகல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி எனத் தொடர்ந்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகள், 2014 ஜுன் 15ஆம் திகதி அதாவது இன்றைய தினத்தில் இற்றைக்கு 3 வருடங்களுக்கு முன் அளுத்தகமையில் நேரடி இனவெறியாட்டமாக அரங்கேற்றப்பட்டது. கறுப்பு ஜுன் ஆக இன்றைய நாளை இந்நாட்டு முஸ்லிம்களின் வரலாற்றில் எழுதச் செய்தது. சட்டமும் நீதியும் புதைக்கப்பட்டு அராஜகம்; சில மணித்தியாளங்கள் அளுத்தமையில் தாண்டவம் ஆடியது. ஜனநாயகம் கண்ணீர் சிந்தச் செய்யப்பட்டு பேரினவாதம் அகோரம் பெற்றது இன்றைய தினத்தில்தான்.

ஜனநாயகத் தேசமும் பேரினவாதத்தின் அகோரமும்

பௌத்த பிக்குவை ஏற்றி வந்த வாகன சாரதிக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்குமிடையே இடம்பெற்ற தனிநபர் பிரச்சினை ஒரு சமூகத்தை நிலைகுலையச் செய்தது. பேரினவாதத்தின் இலக்குகளை நிறைவேறச் செய்தது. கறைபடிந்த கறுப்பு ஜூனாக வரலாற்றில் எழுதச் செய்தது. பேரினவாதத்தின் வெறியாட்டம் முஸ்லிம்களின்; உயிர்களைக் காவுகொண்டு உடல்களை குருதிபாயச் செய்து வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் வழிபாட்டுத்தளங்களையும் எரியூட்டியது.

மாணவர்களின் கல்வி அடையாளத்தை அழித்தது. பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளைப் பாதித்து சின்னஞ்சிறார்களின் சின்ன மனங்களில் அழியாத வடுக்களை ஏற்படுத்தியது. இவ்வாறு அளுத்கமை, தர்ஹா நகர் மற்றும் பேருவளைப் பிரசேதங்களைச் சேர்ந்த ஒற்றுமொத்த முஸ்லிம் மக்களினதும் சமூக, பொருளாதார கட்டமைப்புக்களைச் சிதைத்தது. இத்தனை அழிவுகளுக்;கும் பொதுபல சேனாவின் செயலாளரின் இனவெறுப்புப் பேச்சே காரணமென அப்போது தெரிவிக்கப்பட்டது.

அன்றைய அரசு இக்கடும்போக்காளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதன் விளைவு ஆட்சி மாற்றத்திற்கும் வழிகோலியது. ஆனாலும், 2015ஆம் ஆண்டில் உருவான இக்கூட்டாச்சியிலும் கடும்போக்காளர்களும் அவர்களின் செயற்பாடுகளும்; கட்டுப்படுத்தப்படவில்லை என்பதே கவலையளிக்கும் விடயம் மாத்திரமின்றி சந்தேகங்களையும் உருவாக்கியுமுள்ளது..

ஏனெனில், 2014 ஜுனில் அளுத்தகமையில் ஆரம்பித்த இனவாதத்தின் இனவெறியாட்டம் 2017 ஜுனிலும் மஹியங்கனை வரை தொடர்ந்திருக்கிறது. 20 வருடகாலமாக மஹியங்கனைப் பிரதேசத்தில் சிங்கள மக்களோடு அன்னியயொண்ணியமாக வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் வர்த்தகரின் வர்த்தக நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு அவரின் பொருளாதாரம் அழிக்கப்பட்டிருப்பது மாத்திரமின்றி அப்பிரசேத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு இனவாதிகளினால் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள். வர்த்தக நிலையங்களுக்கான பாதுகாப்பை வேண்டிநிற்கிறார்கள்.

2015ஆண்டில் உருவான நல்லாட்சி என்ற அழைக்கப்படும் கூட்டாட்ச்சியின் இதுவரையான காலப்பகுதியில் 100க்கு மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு சில சம்பங்களுக்கான சூத்திரதாரியென ஒரிருவர் கைது செய்யப்பட்டாலும். இச்சம்பவங்களின் மூலவேர் அங்கிருந்து உருவாகிறது என்பதைக் கண்டறியப்படுவதற்கு காலம் தாழ்த்தப்படுவது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது. ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் சட்டத்தையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. நாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மக்களுக்கு நல்வாழ்வு கிட்டச் செய்வதே ஜனநாயகத்தின் குறிக்கோளாகும். ஜனநாயக நாட்டில் வாழும் மக்களுக்கு சுதந்திரமாக வாழும் உரிமையுமுண்டு. ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்தவொரு இனத்திற்கு எதிராகவும் அதிகாரம் செயற்பட ஜனநாயகம் அனுமதிக்கவுமில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஜனநாயகம் அதன் நிலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

சம உரிமையுடனும், பாதுகாப்புடனும் வாழ வழியமைக்க வேண்டும். சமத்துவமும் பாதுகாப்பும் கேள்விக்குட்படுத்தப்பட்டு இன ரீதியான மத ரீதியான நிந்தனைகள் அதிகரிக்கின்றபோது ஜனநாயகம் அதனது வடிவத்தை மாற்றிக்கொள்கிறது. ஜனநாயகத் தேசத்தில் சிறுபான்மையினரின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்படுகிறது

ஒரு ஜனநாயக நாடு என்பது அந்த நாட்டில் வாழுகின்ற ஒரு இனத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. ஏனெனில,; அந்த நாட்டின் அரசாங்கத்தை தெரிவு செய்வது ஒரு இனம் மாத்திரமல்ல. அந்நாட்டில் வாழுகின்ற எல்லா இனத்தைச் சார்ந்த மக்களும்தான் வாக்களித்து அரசாங்கத்தை உருவாக்குகிறார்கள். எல்லா இன மக்களும்தான் அந்த அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள். இவ்வாறான நிலையில் அரசாங்கமும், பாதுகாப்புத்தரப்பும் ஒரு இனத்திற்குரியது என அழிச்சாட்சியம் புரியும் பேரினவதாக அமைப்புக்கள் கூக்குரல் இடுவதில் எவ்வித நியாயமுமில்லை.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டுக்குரிய மக்கள்தான். இந்த நாட்டில் பிறந்து இந்நாட்டுத்தண்ணீரைக் குடித்து, இந்நாட்டின் காற்றைச் சுவாசித்து வாழும் இந்த இரு இனமும் இன்னுமொரு நாட்டிக்குச் சென்று வாழ முடியாது. இந்த நாடும் இந்த இரு இனத்திற்கும் சொந்தமானதுதான்.

எந்தவொரு சமூகமும் இன்னுமொரு சமூகத்தை அடக்கியொடுக்கி வாழ விரும்பக் கூடாது. ஒரு சமூகத்தினர் அல்லது ஒரு இனத்தினர் மற்றைய சமூகத்தை இழிவுபடுத்தி, தாழ்த்தி, பொருளாதாரத்தை பிடுங்கி, அழித்து வாழ விரும்பம் கொள்ளக் கூடாது. எந்தவொரு இனத்தின் மத்தியிலும் இன்னுமொரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் மனப்பாங்கு ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்படுகின்றபோது இன முரண்பாடுகளும். அமைதியின்மையும் வன்முறைகளும் தோற்றம் பெருகின்றன.

உலகிலுள்ள ஜனநாயக நாடுகளில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்காத நெருக்கடிகளை இந்நாட்டில் வாழும் தமிழ் – முஸ்லிம் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்குகிறது என்று கூறுவதில் தவறேதும் இருக்க முடியாது.

உலகிலுள்ள ஜனநாயக நாடுகளின் தரவரிசைப்படி முதன்மை பெருகின்ற சுவிடன், டென்மார்க், பின்லாந்து, நோர்வே, நியூசிலாந்து, சுவிட்சலாந்து , பெல்ஜியம், அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, அயர்லாந்து, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் சிறுபான்மை சமூகங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இந்நாடுகளிளெல்லாம் இனவாதம் தலைவிரித்தாடவில்லை. இருப்பினும,; இஸ்லாமிய எதிரிகளினால் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாம் பெயர்தாங்கி தீவிரவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் மேற்குலகில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் தற்காலத்தில் கேள்விக்குற்படுத்தியிருக்கிறது. மிக அண்மையில் இலண்டனில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் அதற்கான உரிமைகோரலும் அங்கு வாழும் முஸ்லிம்களின் மீது சந்தேகப் பார்வைய உருவாக்கியருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

சமகால செயற்பாடுகளும் அரசின் மீதான நம்பிக்கையும்
இலங்கையில் பேரினவாhத்தின் நெருக்கடிகளும் அங்காங்கே இடம்பெறும் தாக்குதல்களும் அசௌகரியங்களையும் சொத்தழிவுகளையும் ஏற்படுத்தினாலும் அவற்றின் செயற்பாடுகள் இன்று வரை நீண்டு கொண்டு சென்றாலும் இந்நாட்டில் அமைதியும் நல்லிணக்கவும் ஏற்பட வேண்டும் என்று சிந்திக்கின்ற பெரும்பான்மை இன மக்களோடு இணைந்து இனவாதத்திற்கு எதிராகப் போரட வேண்டிய பொறுப்பும் பொறுமையும் முஸ்லிம்களின் இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.

அளுத்கமையில் தொடங்கிய பேரினவாதத்தின் வெறியாட்டம் இன்று வரை மத நிந்தனையாகவும், வெறுப்புப் பேச்சாகவும், சிலை வைப்பாகவும், தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்தலாகவும், பலாத்கரமாகக் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளாகவும், பூர்வீக காணிகளில், பிரதேசங்களில் வாழ விடாமல் தடுப்பற்கான போலிப் பிரச்சாரங்களாகவும் அவற்றை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் ஊதிப்பெருப்பிக்கும் இனவாத ஊதுகுழல் ஊடகங்களின் செயற்பாடுகளாகவும், முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு எதிரான போலிப்பிரச்சாரங்களாகவும் என பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்; கடந்த இரு மாதகாலமாக பள்ளிவால்களை குண்டு வைத்துத் தகர்ப்பதாவும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களை தீயிட்டுக் கொழுத்துவதாகவும் மாறி நிற்கிறது.

பேரினவாதத்தின் முஸ்லிம்கள் சார் இலக்குகளில்; ஒன்றான பொருளாதார அழிப்பு என்ற இலக்கை கடந்த இரண்டு மாதங்களில் கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறது. இந்நிலையில் இன ஒடுக்கு முறையை மேற்கொண்டு வருகின்ற கடும்போக்கு அமைப்புக்கள் தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருவது தொடர்பில் அரசாங்கம் எதுவும் செய்ததாகத் தெரிவில்லை என பல்வேறு தரப்புக்களிலிருந்து வெளிவரும் கருத்துக்கள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும்.

கடும்போக்குவாத அமைப்புக்கள் தொடர்பிலும் சர்வதேசத்திலும், உள்ளுரிலும் எழுந்துள்ள கருத்துக்களுக்கும் கோஷங்களுக்குமான விடை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையில் தங்கியுள்ளதுடன் அதுவே இனவாதத்தீயினால் வலிகைளச் சுமந்து வாழும் மக்களின் உள்ளார்ந்த பாதிப்புக்கான வலி நிவாரணியாகவும் இந்நாட்டில் சகவாழ்வும் சாதானமும் ஜனநாயகவும் வளர்வதற்கான உரமாகவும் அமையும்.

இந்நிலையில், முஸ்லிம்களும் தமது செயற்பாடுகளை பேரினவாதத்தின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகாத வகையில் மேற்கொள்வது அவசியமாகவுள்ளது. பள்ளிவசால்கள் நிறுவப்படுவது இறைவனை வணங்குவதற்காகவேதான். விளம்பரப்படுத்துவதற்காகவல்ல. ஒரு பள்ளிவாசல் ஏதோவொரு பிரதேசத்தில் நிறுவப்பட்டால் அவற்றை சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் அரசியல் நலனுக்காவும் வேறு தேவைகளுக்காகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. சமகாலத்தில் இவ்வாறு விளமபரப்படுத்துவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உணரப்படுவது அவசியமாகும்.

அதேபோன்று தங்களிடமிருக்கும் செல்வத்தினை அலங்காரப்படுத்தும், பிரபல்யப்படுத்தும் ஆடம்பரத் திருமணங்கள் மற்றும் வைபங்களிலும், பள்ளிவசால்கள் முன்னாலும் தமது வாகனங்களின் காட்சிப்படுத்தல்கள் தொடர்பிலும் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும். ஏனெனில், முஸ்லிம்களின் பொருளாதார வளர்ச்சியானது பேரினவாதத்;தின் கண்களை வெகுவாகக் குத்திக் கொண்டிருக்கிறது. பல சந்தேகங்களை உருவாக்கியிருக்கிறது. அச்சந்தேகங்களுக்கு விடையாக நமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.

உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பிரதான காரணமாக அமைது முஸ்லிம்களின் இன விருத்தி மற்றும் பொருளாதார விருத்தியாகும். இவற்றை அழிப்பதற்கான வழிகளையே இன்று பேரினவாதம் தேடிக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இவற்றின் பின்னணியில் இருப்பது ஒரு ஞானசார தேரர் மாத்திரமல்ல.

ஒரு திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் வடிவமைப்பின் கீழ் பலதரப்பட்டவர்களின பகிபாகங்களுடன் ஒரு சிலரை முன்நிலைப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற அழிப்பு நடவடிக்கைகள் அளுத்தமை முதல் மஹியங்கனை வரை இடம்பெற்றிருக்கிறது. என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் நிறுத்திக் கொள்வது அவசியமாகும். இந்த அவசியத்தின் அடிப்படையில் முஸ்லிம்களையும் முஸ்லிம்களினது பொருளதாரம், பாதுகாப்பு உட்பட எதிர்கால சந்ததியினரின் இருப்பு என்பவற்றையும் உறுதிப்படுத்துவதற்கான ராஜதந்திர நடவடிக்கைளை முறையாகத் திட்டமிட்ட வடிவில் ஒன்றுபட்டு மேற்கொள்வதுடன் பேரினவாதத்தின் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் செயற்பாடுகளிலுமிருந்து தவிர்ந்து கொள்வதும் காலத்தின் தேவையாகவுள்ளது.

மறுபக்கம் இந்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை உருவாக்குவதையும் கோஷமாகக் கொண்டு சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்புடன் ஆட்சி பீடமேறிய இந்த நல்லாட்சி அரசு இந்நாட்டின் அமைதிக்கும் இன ஒருமைப்பாட்டுக்கும் ஜனநாயக விழும்மியங்களுக்கும் வேட்டு வைத்து செயற்படும் கடும்போக்காளர்களின் செயற்பாடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் காலதாமதம் ஏற்படுத்தாமல் சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற அழுத்தங்களின் யதார்த்தத்தினை செயற்படுத்தும் போதுதான் இவ்வாட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கை வலுப்பெறும். இந்த நம்பிக்கையைக் கட்டியெழுபப்படுவதற்கு அல்லது கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் முழுமையாக அடக்கப்படுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும் என்பதே சிறுபான்மையின மக்களின் இன்றைய வினாவாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Web Design by The Design Lanka