அவசரத்தில் புத்தி மழுங்கிய செயல்பாடே கோட்டாபயவின் ஐ.நா உரை, கூட்டமைப்பு சாடல்..! - Sri Lanka Muslim

அவசரத்தில் புத்தி மழுங்கிய செயல்பாடே கோட்டாபயவின் ஐ.நா உரை, கூட்டமைப்பு சாடல்..!

Contributors

டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரை இவர்கள் எவருக்கும் நாடு தொடர்பாக ஒரு முகம் இல்லை, ஒரு கொள்கை இல்லை. நம் நாட்டின் பல்லினத் தன்மையை எற்றுக்கொள்ளும் மனோபாவம் கூட இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(Govindan Karunakaram) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சம்மந்தமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மன்னாரிலே எரிபொருள், எரிவாயு எடுக்கலாம் என்ற பேச்சுக்கள் வதந்திகள் இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் ஐ.ஓ.சி நிறுவனம் சம்மந்தமாகவும், திருகோணமலையில் இருக்கும் எண்ணெய்த் தாங்கிகள் சம்மந்தமாகவும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் சார்ந்த பிரதேசம் மற்றும் என் இனம் சம்மந்தமாகவும் சில கருத்துக்களைக் கூற நினைக்கின்றேன்.

அதற்கும் மேலாக இன்று ஆசிரியர் தினம். ஏணிப்படிகளாக இருந்து மாணவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து அவர்களை நற்பிரஜைகளாக ஆக்கும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இன்று அவர்கள் வீதியிலே இறங்கிப் போராடும் ஒரு நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளிவிட்டிருக்கின்றது.

அவர்களது அபிலாசைகள் தீர்த்துவைக்கப்படாத காரணத்தினால் அவர்கள் இன்று போராடும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். அதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்விநிலை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் ஆசிரியர்களது கோரிக்கைகளை அரசு செவிமடுத்து உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும்.

அத்துடன் இந்த நாடடின் உணவு உற்பத்தியில் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் இன்று மிகவும் வேதனையுடன் அவர்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இன்று சேதனைப் பசளை, நஞ்சற்ற உணவு தயாரிப்பு என்றெல்லாம் கூறி அவர்கள் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகள் தான் நடைபெறுகின்றன. சேதனைப் பசளையின் முழுமையான உற்பத்தி இங்கு கிடையாது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றீர்கள் அதிலும் கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சீனாவில் இருந்து வந்த சேதனப் பசளைகளில் தொற்றுக் கிருமிகள் இருப்பதாக நிராகரித்தமைக்காக விவாசய அமைச்சருக்கும், அவருடன் சம்மந்தப்பட்ட பகுப்பாய்வாளர்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று அதனை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு யோசிக்கின்றீர்கள்.

சேதனப் பசளையில் நைதரசன் எத்தனை வீதம் இருக்கின்றது. யூரியாவில் எத்தனை வீதம் இருக்கிறது. தற்போதும் யூரியா சந்தையில் கிடைக்கின்றது. ஆனால் அதன் விலை மூன்று மடங்கிற்கு அதிகமாக இருக்கின்றது. இப்படி இருக்க விவசாயிகள் எவ்வாறு தங்கள் விசாயத்தைச் செய்வார்கள். ஒரு ஏக்கர் வேளாண்மைக்கு நாற்பது ஐம்பது மூடைகள் விளைவித்தவர்கள் இன்று இருபது மூடைகள் விளைவிப்பதற்கும் முடியாமல் இருக்கின்றார்கள்.

இவ்வறான நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும். அவ்வாறு இருக்கும் போது இந்த நாடு எவ்வாறு தன்நிறைவை அடையும். சேதனைப் பசளை மூலமாக தேயிலைப் பயிர்செய்கை கூட இன்று பாதிப்படைவதாக முன்னாள் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியிருக்கின்றார்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு தேயிலை ஏற்றுமதி. அதுகூட பாதிப்படையும் நிலையில் இருக்கின்றது. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அரசாங்கத்திற்கு ஒரு கொள்கை இருக்க வேண்டும். நான் சார்ந்த கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு கொள்கை, ஒரு இலக்கு இருக்கின்றது. எமக்கு ஒரு முகம் மாத்திரமே இருக்கின்றது. நாடாளுமன்றத்தில், பிரதேசத்தில், எமது மக்களிடத்தில், உள்நாட்டில் அல்லது சர்வதேசத்தில் எங்கு எப்போது எவ்விடம் சென்றாலும் நாம் ஒரு முகத்தையே காட்டி வருகின்றோம்.

ஆனால் எமது ஜனாதிபதி, பிரதமர் ஆட்சியாளர்கள் என இந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல டி.எஸ்.சேனநாயக்க(D.S.Senanayake), எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க(S.W.R.D.Bandaranayaka), ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க(Sirimavo Bandaranaike), ஜே.ஆர்.ஜெயவர்த்தன(J.R. Jayewardene), ஆர்.பிறேமதாச(R.Premadasa), சந்திரிக்கா பண்டாரநாயக்க(Chandrika Bandaranaike), மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajabaksha), மைத்திரிபால சிறிசேன(Maithribala Sirisena) ஏன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajabaksha) வரை இவர்கள் எவருக்கும் நாடு தொடர்பாக ஒரு முகம் இல்லை. ஒரு கொள்கை இல்லை.

நம் நாட்டின் பல்லினத் தன்மையை எற்றுக்கொள்ளும் மனோபாவம் கூட இல்லை. அத்தகைய நாட்டின் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து எமது புலம்பெயர் அமைப்புகளுக்கு கலந்துரையாட அழைப்பு விடுத்தார். புலம்பெயர் அமைப்புகளையும், நபர்களையும் தடைசெய்து விட்டு அவர்களைப் பேச்சுக்கு அழைப்பது நகைப்புக்கிடமானது.

உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்வு காண்பேன் என்று அவர் சொல்லி மூச்சு விடுவதற்குள் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இராஜாங்க அமைச்சர் அங்குள்ள தமிழ் அரசியற் கைதிகளின் மனித உரிமையையும், மாண்பையும் சிறப்பாகக் கவனித்தார். இதுதான் உள்ளகப் பொறிமுறை என்னும் ஒரு சோற்று உதாரணம்.

இதனை விட இன்றைய பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடமும் பதின்மூன்று போதாது பதின்மூன்று பிளஸிற்ச் செல்வேன் என்றார். இவை, எதை எப்படிப் பேச வேண்டுமோ அதை அப்படிப் பேசி உள்நாட்டையும், சர்வதேசத்தையும் தம்வசப்படுத்தி தனது இலக்கை அடையும் பக்குவம் பெற்றவர்கள் எமது ஆட்சியாளர்கள் என்பதையே காட்டுகின்றது.

அதன் தொடர்கதை தான் தற்போதைய ஜனாதிபதியின் ஐ.நா. உரையும், புலம்பெயர் அமைப்புகளைக் கலந்துரையாடலுக்கான அழைப்பும். உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை அழைப்பதென்பது அவசரத்தில் புத்தி மழுங்கிய செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி எமக்கு வைகுண்டம் காட்டும் உரையே அவரது உரை.

எம் தமிழ் மக்கள் தொடர்பாக, எமது வடக்கு கிழக்கு நிலம் தொடர்பாக, எமது தமிழ் மொழியின் பாவனை தொடர்பாக, எமது ஆறு தசாப்த அகிம்சை, ஆயுத வழிப் போராட்டம் தொடர்பாக எவ்வித புரிதலும் தெளிவும் பெறும் எண்ணம் இன்னும் ஆட்சியாளர்களிடம் இல்லை. ஜனாதிபதி ஒரு கருத்து, பிரதமர் ஒரு கருத்து, ஜனாதிபதி சார்பான அமைச்சர்கள் ஒரு கருத்து, பிரதமர் சார்பான அமைச்சர்கள் ஒரு கருத்து, தமிழர்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது என்போர் ஒருபுறம் என இவர்களா எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவார்கள்.

இன்று பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றிப் பேசப்படுகின்றது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் எப்படி எதற்காக உருவாக்கப்பட்டது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் உருவாகியது.

மாகாணசபை முறைமை உருவாகியது. மாகாணசபைத் தேர்தலும் நடந்தது. இன்று மூன்று நான்கு வருடங்களுக்கு மேலாக மாகாணசபைத் தேர்தல் இல்லாமல் குட்டி ஜனாதிபதியான ஆளுநர்களின் கைகளிலேயே மாகாணங்கள் இருக்கிறது. மிக விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி மாகாணசபைகளுக்குரிய பூரண அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.   (IBC)

Web Design by Srilanka Muslims Web Team