அவநம்பிக்கை » Sri Lanka Muslim

அவநம்பிக்கை

IMG_1147

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

– முகம்மது தம்பி மரைக்கார் –


அரசியலரங்கில் ஒன்றை இன்னொன்றாலும், அதனை மற்றொன்றாலும் நாம் மறந்து கொண்டேயிருக்கின்றோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சில வேளைகளில் முன்னைய சம்பவத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய சம்பவங்கள் அரசியலரங்கில் உருவாக்கப்படுகின்றன. நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க்கத் தவருகின்றவர்களுக்கு எல்லாம், இயல்பாக நடக்கின்றவை போலவே தெரியும்.

பிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பானது, ஓர் உதைப்பந்தாட்டப் போட்டிக்கு ஈடான பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. அந்தப் பிரேரணையை மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் கொண்டு வந்தமையினால், சிறுபான்மை கட்சிகள் அதனை எதிர்த்தமைக்கான காரணத்தை இலகுவாகச் சொல்லிக் கொள்ள முடிகிறது. ஆனாலும், மக்களிடம் அந்தக் காரணங்கள் எடுபட்டனவா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் மற்றும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் போன்றவை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதான குற்றச்சாட்டாகக் கூறப்பட்டிருந்தன. அவை மிக முக்கியமானவையாகும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடியாகப் பொறுப்புக் கூற வேண்டிய விவகாரங்களாக அவை உள்ளன. ஆனால், பிரதமரைக் காப்பாற்ற வேண்டுமென்கிற கோதாவில் பெரும்பான்மையானோர் களமிறங்கியமையினால், பிரதமர் மீது வைக்கப்பட்ட அந்தக் குற்றச்சாட்டுக்கள் வலுவிழந்து போயின.

மத்திய வங்கியென்பது நாட்டின் பொருளாதாரத்தினுடைய முதுகெலும்பாகும். அவ்வாறான ஒரு பெரும் நிறுவனத்தின் ஆளுநராக இலங்கைப் பிரஜையல்லாத அர்ஜுன மகேந்திரன் என்கிற நபரொருவர் நியமிக்கப்பட்டார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அந்த நியமனத்தை வழங்குதற்கு நேரடிப் பொறுப்புதாரியாகவும் இருந்துள்ளார். அர்ஜுன மகேந்திரன் எனும் நபர் ஆளுநராக இருந்த காலப் பகுதியில்தான், மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் பல்லாயிரம் மில்லியன் ரூபாய்கள் மோசடி செய்யப்பட்டுள்ளன.

இவை தவிர, பிணைமுறி மோசடி தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த அர்ஜுன மகேந்திரன்; பிரதமரின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே தான் நடந்து கொண்டதாக கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போது, அர்ஜுன மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்று விட்டார். பிணைமுறி மோசடி வழக்கில், பிரதான சந்தேக நபராக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு பல தடவை அழைப்பாணை விடுக்கப்பட்டது. இருந்தபோதும் இதுவரை அவர் நீதிமன்றுக்கு வருகை தரவில்லை.

வங்கியொன்றில் சிறுதொகை கடனொன்றினைப் பெற்றுக் கொள்வதென்றால் கூட, கடனைப் பெறுகின்றவருக்காக ஆகக் குறைந்தது பிணையாளி ஒருவர் தேவைப்படுத்தப்படுவார். கடன்பெற்றவர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறும் பட்சத்தில், அந்தக் கடனுக்கு பிணையாளியே பொறுப்புக் கூற வேண்டும் என்கிற சட்ட நடைமுறைகள் உள்ளன.

ஆனால், மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரனை நியமிப்பதற்கு காரணமாகவிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அர்ஜுன மகேந்திரன் மேற்கொண்டதாகக் கூறப்படும் பிணைமுறி மோசடி தொடர்பில் இதுவரை எதுவித பொறுப்புக் கூறல்களையும் வெளியிடவில்லை. அர்ஜுன மகேந்திரன் விவகாரத்துக்கும் தனக்கும் தொடர்புகள் எவையும் இல்லை என்பது போலவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடத்தைகள் உள்ளன. ஆனால், இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறானதொரு சம்பவமொன்று முன்னேறிய நாடொன்றில் நடைபெற்றிருந்தால், அதற்குப் பொறுப்பான அமைச்சர் இந்நேரம் ராஜிநாமாச் செய்திருப்பார். அல்லது செய்ய வைக்கப்பட்டிருப்பார். ஆனால், இங்கு விடயம் தலைகீழாக நடந்து முடிந்திருக்கிறது. அர்ஜுன மகேந்திரன் விவகாரத்துக்குப் பொறுப்பேற்று ராஜிநாமா செய்திருக்க வேண்டிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக நாடாளுமன்றில் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. பிணைமுறி மோசடி விவகாரத்தை பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்துக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து பிரதமர் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதில் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் மிகத் தீவிரமாகச் செயற்பட்டிருக்கின்றன.

இன்னொருபுறம் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்தான் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு இருந்தது. ஆனாலும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் ரணில் தவறி விட்டார் என்கிற குற்றச்சாட்டினை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் முன்வைத்திருந்தன. ஆனாலும், அந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்து பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து, பிரதமரைக் காப்பாற்றுவதற்கு முஸ்லிம் கட்சிகள் முன்னின்று செயற்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரும் முரணாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்து பிரதமரைக் காப்பற்றியிருக்கின்றன. மேற்படி இரண்டு கட்சிகளும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்பவையாகும். கடந்த பொதுத் தேர்தலிலும், நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலிலும் இந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் யானைச் சின்னத்தில் களமிறக்கப்பட்டிருந்தனர். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமரைக் காப்பாற்ற வேண்டிய அரசியல் தேவை, இந்தக் கட்சிகளுக்கு உள்ளமையும் கவனத்துக்குரியதாகும்.

இருந்த போதும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிப்பது மிகவும் கடினமாகும் என்றும், முஸ்லிம் காங்கிரசுக்கு ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை மோசடி செய்து விட்டது எனவும், மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறி, இரண்டு வாரங்கள் கடந்து விடாத நிலையில்தான், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து மு.கா. தலைவர் ஹக்கீம் காப்பாற்றியிருக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முஸ்லிம் சமூகம் சார்பாகப் பேசியதாகவும், சில கோரிக்கைகளுக்கு ரணில் விக்ரமசிங்க இணங்கியமையினாலேயே, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், மேற்படி இரண்டு முஸ்லிம் கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன.

இதில் முஸ்லிம் காங்கிரஸ் ஒருபடி மேலே சென்றுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் எழுத்து மூலம் சில உடன்படிக்கைகளைச் செய்து கொண்டதன் பின்னர்தான், நம்பிக்கையில்லா பிரேரணையில் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாக மு.காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அந்த வவையில், பின்வரும் விடயங்களை நிறைவேற்றுவதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சினருடன் மு.காங்கிரஸ் எழுத்து மூலம் உடன்பாடு கண்டுள்ளதாக, மு.காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எல். தவம் தெரிவித்திருக்கின்றார்.

1. புதிய மாகாண தொகுதி எல்லை நிர்ணயத்தை நிராகரிப்பதோடு பழைய முறையில் தேர்தல் நடத்தப்படல் வேண்டும்.
2. கரையோர நிருவாக மாவட்டத்தை ஸ்தாபித்தல்.
3. சீனிக் கூட்டுத்தாபனம், வன பரிபாலனம், வன விலங்கு, மற்றும் அகழ்வாராய்ச்சி போன்ற திணைக்களங்கள் வசம் சிக்கியுள்ள விவசாய நிலங்களை வேறாக்கி விவசாயிகளுக்கு வழங்கல்.
4. நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை கையளித்தல்.
5. அளுத்கம, அம்பாறை மற்றும் கண்டி கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பூரண நஷ்டஈடு வழங்கல்.
6. வட மாகாண முஸ்லிம்களுக்கான மீள்குடியேற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அதனைத் துரிதப்படுத்தல்.
7. பாதுகாப்பு படைகள் வசமுள்ள முஸ்லிம்களின் விவசாய மற்றும் குடியேற்ற நிலங்கள் மீளக் கையளிக்கப்படுதல்.
8. இனவாதம் பேசுதல், இனவாத வன்முறையில் ஈடுபடுதல் என்பவற்றிற்கு எதிரான புதிய சட்டங்களை உருவாக்குதல்.
ஆகியற்றினை முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கைகளாக முன்வைத்திருந்ததாக தவம் குறிப்பிட்டுள்ளார்.

பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் பொருட்டு, மேற்கூறப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவற்றுக்கு பிரமரிடம் மு.காங்கிரஸ் எழுத்து மூலம் உடன்பாடு கண்டிருக்குமாயின் அது பாராட்டத்தக்க விடயமாகும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்ற இந்த விடயம் உண்மைதானா என்கிற கேள்வியும் மக்களிடம் உள்ளது. எனவே, பிரதமருடன் அவ்வாறானதொரு உடன்படிக்கை எழுத்து மூலம் செய்யப்பட்டிருந்தால், முஸ்லிம் மக்களின் கணிசமான ஆணையினைப் பெற்றுக்கொண்ட ஒரு கட்சி எனும் வகையில், அதனை மு.காங்கிரஸ் பகிரங்கப்படுத்துதல் அவசியமாகும்.

இன்னொருபுறம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை, இதுவரையில் உரியவர்களுக்கு பங்கீடு செய்யாமல் இழுத்தடிக்கப்படுகின்றமைக்கு ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கின்ற ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியினர், தமது தலைவரைக் காப்பாற்பாற்றுதற்காக அந்த வீட்டுத் திட்டத்தை பயனாளிகளுக்கு வழங்குவதற்கு இணங்கியுள்ளமையானது அரசியல் போக்கிரித்தனமாகவே தெரிகிறது.

அதேவேளை, எவ்வளவு காலத்துக்குள் இந்த நிபந்தனைகள் நிறைவேற்றபட வேண்டும் என்பதும், அவற்றினை நிறைவேற்றுவதற்கு பிரதமர் தவறுவாராயின் மு.காங்கிரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையும் அந்தக் கட்சி பகிரங்கமாக கூறுதல் வேண்டும்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் பொருட்டு, பிரதமரிடம் 10 கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அவற்றினை மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டுமென காலக்கெடு விதித்துள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. காலக்கெடு விதிக்கப்படாத நிபந்தனைகள் அர்த்தமற்றவையாகும்.

அதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் பொருட்டு, ஒவ்வொரு நாடாளமன்ற உறுப்பினருக்கும் சுமார் 05 கோடி ரூபாய் பணம் லஞ்சமாக வழங்கப்பட்டதாக, அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவின் புதல்வர் ராகித ராஜபக்ஷவும் இவ்வாறானதொரு குற்றச்சாட்டினை தமது பேஸ்புக் பக்கத்தில் முன்வைத்திருந்தார். அதாவது, குறித்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேருக்கும் ஏழரைக் கோடி ரூபாய் வீதம் பணம் வழங்கப்பட்டதாக அர்த்தப்படும் வகையில், ராகித ராஜபக்ஷ எழுதியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்றும், அதனை எழுதியவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், மு.காங்கிரஸ் பிரதியமைச்சர் பைசால் காசிம் நாடாளுமன்றில் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்காக மு.காங்கிரஸ் பணம் பெற்றுக் கொண்டது என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவும் சபையில் குற்றம்சாட்டியிருந்தார் என்பதும் இங்கு நினைவு கொள்ளத்தக்கதாகும்.

எனவே, இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யாயின் அவற்றினை உரிய முறையில் மறுதலிக்க வேண்டிய பொறுப்பு மு.காங்கிரசுக்கு உள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் பொருட்டு, பிரதமருடன் மு.காங்கிரஸ் எழுத்து மூலம் செய்து கொண்டதாகக் கூறிக் கொள்ளும் உடன்படிக்கையினை பகிரங்கப்படுத்துவதன் மூலம், முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்காகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையினை எதிர்த்து வாக்களித்தது என்கிற வாதத்தைப் பொய்யாக்க முடியும்.

உண்மையாகச் சொன்னால், பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமையின் மூலம், முஸ்லிம் மக்களின் அவநம்பிக்கையினை முஸ்லிம் கட்சிகள் சம்பாதித்துள்ளன. நம்பிக்கையில்லா பிரேரணை என்கிற இக்கட்டிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏன் காப்பாற்ற வேண்டும் என்கிற கேள்விக்குரிய நேர்மையான பதிலை, முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரசோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசோ இன்னும் முன்வைக்கவில்லை.

வழமைபோல், இந்த இரண்டு கட்சிகளும் தமது செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்கே முயற்சித்திருக்கின்றன.

அந்த நியாயங்கள் பெரிதும் ஏமாற்றமளிப்பவையாகவே உள்ளன.
நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (10 ஏப்ரல் 2018)

Web Design by The Design Lanka