அவள் நினைத்துப் பார்க்கிறாள் (கவிதை) » Sri Lanka Muslim

அவள் நினைத்துப் பார்க்கிறாள் (கவிதை)

tear

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


கரிச் சட்டி கழுவும் போது
கண்ணுக்குள் காட்சி வரும்
பரீட்சையில் மதிப்பெண் பெற
பாடு பட்டு படித்த நாட்கள்

மீன் கழுவி ஆக்கும் போது
மீண்டும் காட்சி வரும்
தேன் தமிழில் கவி எழுதி
திறமைப் பரிசு பெற்ற நிகழ்வு

பம்பஸைக் கழற்றி எடுத்து
பாலிதினீல் போடும் போது
கெம்பஸில் எழுதிய தீஸிஸ்
வம்பாக மனதில் தோன்றும்

கோழி முட்டை பொரித்து
கோப்பையில் போடும் போது
தோழிமார் கூட்டமாய்
தோளில் சாய்தல் நினைவு வரும்

சோறு ஆக்கி இறக்கி
ஆறவைத்து ஊட்டும் போது
நூறு மார்க்ஸ் வாங்கி
தேறியது நினைவு வரும்

என்றாலும் நினைவுகளால்
இதயத்தில் கவலை வராது.
நன்றாக என் பிள்ளை
நாளை வர வேண்டுமென்ற
ஒன்றே மனதில் நிற்கும்
ஓயாது இயங்கச் சொல்லும்.

இன்று படிப்பென்று
இருக்கின்ற பிள்ளைகளும்
என்றோ ஒரு நாளில்
இதே நிலை அடைவீர்கள்!

ஆதலால் எல்லை மீறி
அடுத்த பக்கம் செல்லாது
போதிய கவனமெடுத்து
புத்தியாய்ப் படியுங்கள்.

Web Design by The Design Lanka