அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் 25 ஆவது வெள்ளி விழா நிகழ்வை தடுக்க சில உள்ளுர் அரசியல் வாதிகள் சதி - Sri Lanka Muslim

அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் 25 ஆவது வெள்ளி விழா நிகழ்வை தடுக்க சில உள்ளுர் அரசியல் வாதிகள் சதி

Contributors

(ஏ.எல்.ஜுனைதீன்)
எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் 25 ஆவது வெள்ளி விழா வைபவத்தை அரசியல் நோக்கத்திற்காக சில அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தியிருப்பது குறித்து இவ்வைத்தியசாலையின் ஸ்தாபகரும் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான ஏ.ஆர். மன்சூர் கவலை தெரிவித்துள்ளார்.

 

இவ்விழாவில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவைப்பதற்கு அமைச்சரின் அலுவலகம் தேடிச் சென்று அவரை நேரடியாகச் சந்தித்து உரையாடியதன் நிமிர்த்தம் இவ்விழாவுக்கு வருகை தருவதாக பூரண விருப்பத்தைத் தெரிவித்து உங்கள் பிரதேசத்தில் இவ் வைபவத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம் அடைவதாகக் கூறியிருந்த சுகாதார அமைச்சரின் கல்முனை விஜயமும் அதிகாரத்திலிருக்கும் அரசியல்வாதிகளால் தடுக்கப்பட்டிருப்பது குறித்தும் மன்சூர் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளார்.

 

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மன்சூர் தெரிவிக்கையில்:
கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் 25 ஆவது வெள்ளி விழா வைபவம் தொடர்பாக சுகாதார அமைச்சரை நான் நேரடியாகச் சந்திக்கச் சென்ற போது முன்னாள் அமைச்சர் என்ற வகையில் நான் அவரிடம் இவ்வைத்தியசாலை சம்மந்தமாக பல கோரிக்கைகளை முன்வைத்திருந்ததுடன் குவைத் நாட்டு நிதி கொண்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வது போன்று கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளை குவைத் நாட்டு நிதி உதவி பெற்று அபிவிருத்தி செய்வது சம்மந்தமாகவும் கலந்துரையாடியிருந்தேன்.

இவ்வைத்தியசாலையின் வெள்ளி விழாவை இப்பிரதேச மக்களின் சுகாதார வசதி கருதி வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிட்டிருந்தேன்.

எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும் நிலையில் எமது அரசியல்வாதிகள் மக்களின் நலனைக் கருதாமல் தமது அரசியலை நோக்காகக் கொண்டு செயல்பட்டுவிட்டார்கள்.இது எனக்குமிகுந்த வேதனை அளிக்கின்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன என்னோடு தொடர்பு கொண்டு ‘என்னை மன்னித்து விடுங்கள் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்றக் குழுவாக என்னிடம் வந்து தடுக்கும் போது என்னால் என்ன செய்ய முடியும்’ என்று கூறி மிகவும் வேதனைப்பட்டார் என்றும் மன்சூர் கவலையுடன் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team