அஸ்வர் எனும் ஆளுமை முகம் எம் மனங்களை விட்டு அகலாது -அப்துல் காதர் மசூர் மௌலானா- » Sri Lanka Muslim

அஸ்வர் எனும் ஆளுமை முகம் எம் மனங்களை விட்டு அகலாது -அப்துல் காதர் மசூர் மௌலானா-

mashoor

Contributors
author image

M.Y.அமீர்

எம்.வை.அமீர், எஸ்.ஜனூஸ்


முன்னாள் இராஜாங்க அமைச்சரும், இலங்கையின் மூத்த அரசியல்வாதியுமான அல்ஹாஜ்.ஏ.எச்.எம் அஸ்வர் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும் கவலையும் அடைகிறேன். என்று இன நல்லுறவிற்கான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவரும் ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் சமூக சிந்தனையாளருமான அஷ்ஷெய்க்.அப்துல் காதர் மசூர் மௌலானா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அனுபவமும் ஆளுமையும் நிறைந்த ஒரு சிரேஷ்ட முஸ்லிம் தலைவரை எமது சமூகம் இழந்து நிற்கிறது. மர்ஹூம் அஸ்வர் இலங்கையின் இரு பெரும் தேசியக் கட்சிகளில் இடம் பிடித்து அங்கெல்லாம் முஸ்லிம் சமூகத்தின் குரலாய் ஓங்கி ஒலித்ததை எவரும் எளிதில் மறந்து விட முடியாது.

அன்னார் முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் எமது சமூகத்திற்கு செய்த அளப்பரிய சேவைகள் என்றும் அழியாதவை. மர்ஹூம் அஸ்வர் அவர்களின் அரசியல் வெற்றிடம் யாராலும் நிரப்பப்பட முடியாது. முஸ்லிம்களுக்கு நாட்டில் பிரச்சினைகள் வந்த காலப் பகுதிகளில் நாடாளுமன்றத்தில் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் அவைகள் பற்றி பேசாமல் இருந்ததில்லை.

இலங்கை பாராளுமன்ற ஆசனத்தை அலங்கரித்த முஸ்லீம் தலைவர்களில் மிக அதிகமான தடவைகள் சமூகம் பற்றி மன்றில் உரையாற்றிய பெருமை மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்களை சாரும். அதற்கு பாராளுமன்ற ஹன்சாட் எனும் ஆவணம் சான்று பகரும்.

தன்னுடைய முதுமையையும் கருத்தில் கொள்ளாது இறுதிக் காலங்களிலும் சமூகத்தின் விடிவுக்காய் சதா உழைத்த மர்ஹும் ஏ. எச்.எம். அஸ்வர் எனும் நாமம் என்றும் மக்கள் மனங்களில் இருந்து அகலாது என்பது திண்ணம்.

அன்னாரின் நற் கருமங்களை இதயத்தில் பொருந்தி மாட்சிமை மிகு மறுமை வாழ்வுக்காய் பிரார்த்திப்பதே நாம் அவருக்குச் செய்யும் உன்னதமான நன்றிக்கடனாகும். யா அல்லாஹ், எம்மை விட்டு பிரிந்திருக்கும் அஸ்வர் எனும் உனது உன்னத அடியானின் அனைத்து நற் கருமங்களையும் ஏற்று உன்னிடத்தில் மேலான அங்கீகாரத்தை வழங்குவாயாக. ஆமீன்…

Web Design by The Design Lanka