ஆங் சான் சூகிக்கு எதிராக மீண்டும் குற்றச்சாட்டு பதிவு - Sri Lanka Muslim

ஆங் சான் சூகிக்கு எதிராக மீண்டும் குற்றச்சாட்டு பதிவு

Contributors

காலனித்துவ கால உத்தியோகபூர்வ ரகசியச் சட்டத்தை மீறியதாக பெப்ரவரி முதலாம் திகதி ஆட்சி கவிழ்ப்பின்போது கைது செய்யப்பட்ட மியன்மாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு எதிராக மீண்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது வழக்கறிஞர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் சூகி ஆஜரான ஒரு நாள் கழித்து இந்த புதிய குற்றச்சாட்டு வந்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்பிலிருந்து ஆங் சான் சூகி மற்றும் அவரது தேசிய ஜனநாயகக் கட்சியின் (என்.எல்.டி) மற்ற உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறு கையடக்க ரேடியோக்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை மற்றும் கொரோனா வைரஸ் நெறிமுறைகளை மீறுவது உள்ளிட்ட பல சிறிய குற்றங்களுக்கு இராணுவம் முன்பு சூகிக்கு எதிராக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் சூகி மீதான புதிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் வரை அவரை சிறையில் அடைக்க முடியும்.

பெப்ரவரி 1 ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக மியன்மார் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் படையினர் மேற்கொண்டு வரும் அடக்குமுறைகள் காரணமாக இதுவரை 500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 40 சிறுவர்களும் அடங்குவர்.

Web Design by Srilanka Muslims Web Team