ஆசி­யா­வி­­­லேயே குறைந்த வரி விதிக்கும் நாடு என்­ப­தை நிரூ­பித்தால் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கு­வேன். அமைச்சர் வாசு­வுக்கு அஸாத் ­­சாலி சவால் - Sri Lanka Muslim

ஆசி­யா­வி­­­லேயே குறைந்த வரி விதிக்கும் நாடு என்­ப­தை நிரூ­பித்தால் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கு­வேன். அமைச்சர் வாசு­வுக்கு அஸாத் ­­சாலி சவால்

Contributors

ஆசியாவிலேயே ஆகக்குறைந்த வரி விதிக்கும் நாடு இலங்கை தான் என்பதை அமைச்சர்
வாசுதேவ நாணயக்கார நிரூபிப்பாரேயானால் அரசியலில் இருந்து விலகத் தயார் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார் .
இலங்கை தான் ஆகக் குறைவான வரிகளை விதிக்கும் நாடு என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் . இது முற்றிலும் பொய்யானது . அவர் அதை மாறிச் சொல்லியிருக்க வேண்டும் . உலகிலேயே ஒரு பொருளுக்கு ஆகக்கூடுதலான வரி விதிக்கும் நாடு இலங்கை தான் . இந்த வரவு – செலவுத் திட்டத்திலும் கூட சுமார் 41 வீதம் வரிகளாகவே காணப்படுகின்றன . இலங்கை தான் ஆகக்குறைவாக வரி விதிக்கும் நாடு என்பதை அமைச்சர் வாசுதேவ உரிய ஆதாரங்களுடன் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்தே விலகிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் . வாசுதேவ போன்றவர்கள் மீது இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கம் பாரிய நம்பிக்கை கொண்டிருந்தது .
ஆனால் அவர் இன்று இந்த மக்கள் விரோத அரசுக்கு வக்காலத்து வாங்குபவராக மாறி , உழைக்கும் வர்க்கத்துக்கே துரோகம் இழைத்துவிட்டார் . அவருடைய இணைப்புக்கள் எல்லாம் இப்போது மாறிவிட்டதாகவே நான் கருதுகிறேன் . அதனால் தான் அவர் மக்களுக்கு பொய் உரைத்து மக்களை ஏமாற்றி வருகின்றார் .
நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அரசியல்வாதிகள் இன்று மிக இலகுவாக விடுதலை பெற்று விடுகின்றனர் . பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையும் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது மிகவும் கவலை அளிக்கின்றது . கொம்பனித் தெருவில் வீடுகளை இழந்த மக்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய நிவாரணத்தைக் கூட பெற்றுக் கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது . உச்ச நீதிமன்றத்தையும் மீறி நாட்டின் நகர அபிவிருத்தி அதிகார சபை செயற்படுகின்றது . கொம்பனி வீதியில் பாதிக்கப்பட்ட மக்களுள் ஒரு பகுதியினருக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் தொகுதியில் வீடுகளை வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொள்ளக் கூடிய ஒரேயொரு நம்பிக்கையான இடம் உச்சநீதிமன்றம் என்ற நிலை இப்போது இல்லையென்றால் இந்த நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பது தான் கேள்வி என்றார் .

Web Design by Srilanka Muslims Web Team