ஆசிரியர்களின் கற்பித்தல் எனும் அமானிதமும், மாணவர்களுடன் நடந்து கொள்ளும் முறையும்…. - Sri Lanka Muslim

ஆசிரியர்களின் கற்பித்தல் எனும் அமானிதமும், மாணவர்களுடன் நடந்து கொள்ளும் முறையும்….

Contributors
author image

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பது போல இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார் என்பதனை எல்லோருக்கும் ஞாபகப்படுத்தியவனாக.., இன்று மூலைமுடுக்குகளில் எல்லாம் சர்வதேச பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. சர்வதேசப் பாடசாலைகளில் தம் பிள்ளைகள் கல்வி கற்பதை நம் சமுதாயத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் கௌரவமாக நினைக்கின்றனர். இதனால் பாடசாலையின் தரத்தைப் பற்றி அவர்கள் அக்கறை எடுப்பதில்லை. குறிக்கோளே இல்லாமல் பணத்தை வீண்விரயமாக்குவதில் நம் முஸ்லிம் சமுதாயத்தினர் முன்னணியில் உள்ளனர்.

 

நாம் பிறக்கையில் இவ்வுலகிற்கு எதையும் கொண்டு வருவதில்லை. கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழவேண்டும் என்பதற்காகத்தான் . அயராது உழைத்து மாணவர்களை தன் பிள்ளை என எண்ணி எப்பொழுதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. இ்ந்த உறவு மாணவர்களிடத்தில் உயரியதாகவும் உன்னதமாகவும் கருதப்பட்டு உயிர் உள்ளவரை உணர்ச்சியில் கலந்ததாக, வாழ்க்கை முழுவதும் கூடவே பயணிக்கக் கூடிய ஒரு புனிதமான உறவாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணாக்கர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறைக் கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது.

 

இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும்விட இப்போது மாணவர்களைப்பற்றி அதிகம் பேசப்படுவது யாவரும் அறிந்த உண்மை. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும் மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளைக் காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்துக். கொடுக்கின்றனர். மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிப்போல் வானுயரப் பறந்து வெற்றி சாதனைப்படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே, அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது. மாணவனை சாதனையாளனாக மாற்ற வழிகாட்டியாக  ஆசிரியர் காணப்படுகின்றனர்.

 

 மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும், பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். ’ தடைக்கல்லே உமக்கோர் படிக்கல் ’ என்ற ஊக்கத்தையும் உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே குழந்தைகள் சாதனையாளனாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ ஒரு விதத்தில் ஒளிந்திருக்கிறது.

 

உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக் கொண்ர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரிய பெருமக்களே. மாணவர்களுக்கு குணநலம், தன்னக்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொதுநலநோக்கு, தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும் பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள் இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பது தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வு காண முடியாமல் திணறுகின்றனர்.

இந்த நூற்றாண்டை நோக்கும்போது தவறு செய்பவர் பட்டியலில் அதிகம் இடம்பெறுபவர்கள் படித்தவர்களாகவே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கைத் திறனுக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டும் ஆசானாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர். காலத்தை காரணம் காட்டி அவர்களை புதைக்குழிக்குள் தள்ளிவிடாமல் உதவும் மனப்பான்மையையும், மனிதப்பிறப்பின் மகத்துவத்தையும், அதன் சிறப்பினையும் எடுத்துக்கூறி வார்த்து எடுப்பவர்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்க வேண்டும் இல்லாவிடில் அவர்களுடைய செயல் நாட்டிற்கு தலைகுனிவையும், ஏமாற்றத்தையும் உண்டுபன்னும். ஆசிரியர்கள் செய்வதையே மாணவர்கள் பின்பற்றுவார்கள். ஆகவே முந்தியர் சரியான வழிகாட்டுவது அவசியமாகும்.

 

 மேலும் மூளைத்திறனை விட உன்னத உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும். ஆகவே ஆசிரியர் பனி என்பது தொழில் அல்ல தொண்டு, உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்களாக இருக்க வேண்டும்.

 

 மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித் துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையாதாகவும் சிறப்பித்துப் போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச் சிறந்த பணி என்ற படியினால் ஆசிரியர்கள் தங்கலுடைய தொழிலை இறைவனுக்கு பயந்தவர்களாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

 

ஆசிரியர்களின் கடமைகள், அவர்கள் எவ்வாறு மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்பவற்றை பார்ப்பதற்கு முன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளை நாம் அறிந்து கொள்வோம். ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களை வழி நடத்துவதில் அளப்பறிய பங்காற்றக்கூடியவர்கள்.

 

மாணவர்களை சமூகத்திற்கு ஒரு நல்ல பொறுப்புள்ள பிரஜைகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களே அத்திவாரமாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் சீராக இருந்தால் தான் மாணவர்களுக்கு சீரிய வழியைக் காட்ட முடியும். கல்வியை மட்டும் கற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமை அல்ல. மாறாக, கல்வியோடு சேர்த்து ஒழுக்கம், பழக்கவழக்கங்கள், கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், மாணவர்களின் தனித் திறமைகளை வெளிக் கொண்டு வருதல் ஆகியவற்றுடன் ஏராளமான நற் பண்புகளை கற்பித்தல் ஆசிரியர்களின் கடமைகளாகும்.
01.ஆசிரியர் என்பவர் வேராக இருந்து, மாணவர்கள் மலராய் மலர உறுதுணையாய் இருக்க வேண்டும்.

 

02.அறிவை உருவாக்குதல், ஊட்டுதல், அன்பை விதைத்தல், புதுப்பிப்பவர்களாக இருக்க வேண்டும்.
03.பாதை போட்டுக் கொண்டே பயணம் செய்ய வேண்டும், பயணம் செய்து கொண்டே பாதை போட வேண்டும்.
04.’வெற்றி என்பது பெற்றுக் கொள்ள, தோல்வி என்பது கற்றுக் கொள்ள’ என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

 

05.ஆசிரியர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. நமக்கு மீறிய சக்திதான் நம் அறிவை தீர்மானிக்கும். தீர்மானிக்கும் இடத்தில் தான் நாம் உதவி செய்ய முயல வேண்டும்.
06.மாணவர்களின் படைக்கும் திறன் சிந்திக்கும் ஆற்றலை முதல் வேலையாக எடுத்து செயல்பட வேண்டும்.
07.மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும்.

 

08.ஆசிரியன் என்பவன், ‘வாழ்ந்தால் வானத்தின் எல்லை, வீழ்ந்தால் மரணத்தின் படி’ என்பது போல் இருக்க வேண்டும்.
09.ஆசீர்வதிக்கப்பட்டவன் மட்டுமே ஆசிரியர். ஆசிரியர்தான் உலகிற்கு சொந்தமானவன்.
10.மாணவர்களிடம் கேள்வி கேட்கும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.
11.ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்க ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

 

12.எல்லா இடத்திலும் கேள்வி கேட்பவன் புத்திசாலி அல்ல என்றும், காலம் நேரம் பார்த்து கேட்பவனே அறிவாளி என்றும், கேட்கப்படாத கேள்விகளில் வாழ்க்கையின் மதிப்பு உள்ளது என்பதனையும் உணர்த்த வேண்டும்.
13.மாணவர்களை கை கட்டி, வாய் மேல் விரல் வைக்கும் பழக்கத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இவ்வாறு செய்வதால் அவனின் கேள்வி கேட்கும் திறன், துணிவு குறையும்.

 

ஆசிரியர்கள் முதலில் பொறுமையின் சின்னமாகத் திகழ வேண்டும். ஒவ்வொரு மாணவர்களும் வெவ்வேறு சூழலிலிருந்து பாடசாலைக்கு சமூகமளிக்கின்றனர். அவர்களின் மனநிலையும், உடலமைப்பும் ஒவ்வொரு மாணவர்களுக்கிடையே வித்தியாசப்படும். எனவே, ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கு எற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டு உளவியல் ரீதியில் அவர்களை அன்போடு அவர்களை அணுக வேண்டும்.

 

மாணவர்களைப் பொருத்த வரை அவர்கள் மூன்று பிரிவினர்களாக பிரிக்கப்படுகின்றனர். 1. அதி விவேகமுள்ள மாணவன் (Gifted child) 2. சாதாரண மாணவன் (Normal child)  3. பின் தங்கிய மாணவன் (Backward child).

 

ஒரு வகுப்பறையிலுள்ள இம்மூன்று வகை மாணவர்களையும் சமாளிக்கக்கூடிய தகுதி ஆசிரியருக்கு இருக்க வேண்டும். சளிப்படையாமல் பின் தங்கிய மாணவனை அலட்சியம் செய்யாமல் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். அன்புடனும், ஆதரவுடனும் அம்மாணவனை அணுகினால் சக மாணவர்கள் மத்தியில் பின் தங்கிய மாணவனுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாது. இதனால் மாணவர்கள் மத்தியில் சகஜமாகப் பழகக்கூடியவாறு இருக்கும். தன் வகுப்பறையிலுள்ள மாணவன் மேலுள்ள மூன்று பிரிவுகளில் எப்பிரிவைச் சேர்ந்த மாணவன் என கவனம் எடுக்க வேண்டும்.

 

மாணவனுக்கு கல்வி கற்பதில் ஏற்படும் தடைக்கல்லை அகற்றி அம்மாணவனுக்கு கல்வி கற்பதற்கான படிக்கல்லை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். ஒரு மாணவனுக்கு புரிய வைப்பதற்கு எத்தனை தடவை சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அத்தனை தடவை சலிப்படையாமலும், முகம் சுழிக்காமலும், கோபப்படாமலும் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு ஆசிரியர் தியாக மனப்பான்மை கொண்டவராக இருத்தல் வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏதேனும் ஒரு வார்த்தை பேசினால் தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதனைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை ஸலாம் சொல்வார்கள்.

 

 மாணவர்கள் சிறு பராயத்திலிருந்தே ஆசிரியர்களை அவர்களைப் போல் இருக்க ஆசைப்படுவர். இதனால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். ஒழுக்க விழுமியங்களை மாணவர்களுக்குக் கற்பித்து தாம் அதற்கு மாற்றமாக நடக்கக்கூடாது. எந்த நிலையிலும் மாணவர்களை அரவணைக்ககூடியவர்களாகவும்தன்னம்பிக்கை ஊட்டக்கூடியவர்களாகவும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

 

மேலும் ஆண்,பெண் ஒன்றாகப் படிக்கும் பாடசாலைகளில் சில ஆசிரிய, ஆசிரியர்கள் காதல் விவகாரத்தில் ஈடுபட்டு மாணவர்கள் முன்னிலையில் முன்மாதிரி இல்லாமல் நடந்து கொள்கின்றனர். சில ஆசிரியர்கள் இதற்கு மாணவர்களை தம் தூதுக்கு பயன்படுத்துகின்றனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.அது மட்டுமல்லாமல் வயது கோளாரின் காரணமாக மாணவர்கள் காதல் வளையில் சிக்கிக்கொள்வதனால் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களையோ ஆதரங்களையோ ஒழுக்கக் கட்டுப்பாட்டு குழுவினை கூட்டி அம்பலப்படுத்துவதன் மூலமாக அந்த மாணவியினதும் மானவனினதும் எதிர்கால வாழ்க்கை மூழ்கடிக்கப்பட்டே விடுகின்றது.

 

இதனை ஆசிரியர்கள் மிகவும் பக்குவமாகவும் அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கின்றன என நினைத்து குறித்த மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து இதன் பின் விழைவுகளை பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி மானவர்களின் எதிர்காலத்தை ஆரோக்கியமடைய செய்ய வேண்டும்.  நம் நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆண், பெண் கலந்துள்ள முஸ்லிம் பாடசாலைகளை தனித் தனி ஆண், பெண் பாடசாலைகளாக மாற்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

 

இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தலை ஒரு தொழிலாக மட்டும் கருதி சேவை மனப்பான்மை இல்லாமல், கற்பிக்கின்றோம் என்ற பெயரில் தாம் கற்பிக்கும் விடயம் மாணவர்களை சென்றடைகின்றதா? அல்லது தாம் கற்பிக்கும் முறை சரியாக இருக்கின்றதா? ஒன்றும் பார்ப்பதில்லை. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனையும் உளவியல் ரீதியாகவே அணுக வேண்டும் ஒரு மானவனின் குறையை மற்றைய மானவர்களிடத்தில் மறைத்து நடக்க வேண்டும். அம்மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நடக்க வேண்டும்.

 

ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கற்பிக்காத காரணத்தினாலேயே மாணவர்கள் பாட நேரத்தில் வேறு சிந்தனையுடனும், குறும்புத்தனத்துடனும் நேரத்தைக் கழிக்கின்றனர். சில ஆசிரியர்கள் மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது கோபப்பட்டு எரிந்து விழுகின்றனர். இவர்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்கு பதிலாக கல்வியில் வெறுப்பை ஏற்படுத்துகின்றனர். இதனாலேயே மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பட்டப்பெயர் சூட்டுவதற்கு அவர்களே காரணமாகின்றனர். எந்த ஒரு செயலையும் நன்மையையும், இறை திருப்தியை நாடியே செய்ய வேண்டும்.

 

சில பாடசாலைகளில் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக தற்காலிக (volunteers) ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கின்றனர். இவர்கள் பயிற்றுவிக்கப்படாத காரணத்தினால் மாணவர்களுடன் எவ்வாறு உளவியல் ரீதியல் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியாதுள்ளனர். இதனால் பாதிக்கப்படுவது நம் பிள்ளைகளே. இன்று முஸ்லிம் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாகவே உள்ளது. இந்த இடத்திலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊமைகளாகவே உள்ளனர்.

 

ஆகவே அன்புள்ள ஆசிரியர்களே., ஒவ்வொரு நாட்டின் எதிர்கால வளர்ச்சி அந்த நாட்டின் வகுப்பறையில் தான் உருவாக்கப்படுகிறது. ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உலகம் இன்றளவும் பல்துறை அறிஞர்களை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பது தான் ஆசிரியரின் சிறப்புகளில் மிகவும் பிரதானமாக உள்ளது. மேலும் மாணவ சமூகத்துக்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்று அனைத்தையும் ஒன்று சேர கற்றுக்கொடுத்து அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, நாணயமானவனாக, அறிஞராக, மேதையாக சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் உயரிய பொறுப்பு உங்களுடையதாகும்.

 

 இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி நியாயமான முறையில் தெளிவான கல்வியை மாணவர்களுக்கு கற்பிப்பதின் மூலம் நமது சமுதாயத்தை முதன்மை சமுதாயமாக உயர்த்துவதற்கு உதவுவதின் மூலம் இம்மை மறுமை வாழ்வை சீராக்கிக் கொள்வோமாக.

 

beat1

 

beat1.jpg2

 

 

 

beat1.jpg2.png3

 

Web Design by Srilanka Muslims Web Team