“ஆட்சியாளரிடம் ஒரு கதை மக்களிடம் வேறொரு கதை” ஏமாற்று அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள் » Sri Lanka Muslim

“ஆட்சியாளரிடம் ஒரு கதை மக்களிடம் வேறொரு கதை” ஏமாற்று அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டுங்கள்

26169288_1964218473594338_7752655585745199849_n

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-எம்.ஏ.றமீஸ்-


அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்திற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும், எமது எதிர்கால சந்ததியினரை அடிமைப்படுத்தி, நமது சமூகத்தின் குரல்வளையினை நசுக்கும் சக்தியாக அமைந்துவிடும் என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சம்மாந்துறைப் பிரதேச வேட்பாளர்களை ஆதரித்து சம்மாந்துறையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இடைக்கால அரசியலமைப்புத் தீர்வுத் திட்டம் போன்றவற்றுக்கு, சமூகத்தினது நன்மையினை ஒரு சதவீதமேனும் கருத்திற்கொள்ளாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினை விலைபேசி ஆட்சியாளர்களிடம் மொத்த வியாபாரத்தினை நடத்தி மக்களிடம் உரிமைப் போராட்டம் நடத்துவதாக நாகூசாமல் பொய்களைக் கூறிவருகின்றது.

கடந்த 17 வருடங்களாக நாட்டில் நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட் தேர்தல்களின்போது மறைந்த பெருந் தலைவரின் உருவப் படங்களையும் கட்சிப் பாடல்களையும் ஒலிக்க விட்டு நமது மக்களின் வாக்குகளை சூறையாடி முஸ்லிம் சமூகத்திற்கெதிரான சக்திகளுக்கு நமது வாக்குகளையும் நம்மையும் விலைபேசி விற்று வருகின்றது மு.காவின் தலைமை.

அவ்வாறான நடைமுறையினை தொடர்ந்தும் மேற்கொள்ளும் வகையிலேயே இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனது சொந்தச் சின்னத்தினை அடகு வைத்து விட்டு யானைச் சின்னத்தில் களமிறங்கியிருக்கின்றது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி. நமது சமூகத்தினை மாற்று சக்திகளிடம் அடகு வைப்பதற்காக யானைப் பாகன் போல் இம்மாவட்டத்தில் பொய்ப் பிரச்சாரங்களை வழமைபோல் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.

நமது பிராந்திய மக்கின் வாக்குகளை சூறையாடிச் செல்லும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தற்போது நமது மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை ஏறெடுத்துப் பார்க்காமலும் நமது மக்களுக்கான அபிவிருத்தி சம்பந்தப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தாமலும் காலம் கடத்தி வருகின்றது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது அம்பாறை மாவட்ட மக்களும் குறிப்பாக சம்மாந்துறைத் தொகுதி மக்களும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வாக்குகளை வழங்கியிருந்தனர். இம்மக்களுக்கு கைமாறு புரியும் வகையில் சம்மாந்துறைப் பிரதேசத்தில் கைத்தொழில் பேட்டையினை உருவாக்கி சுமார் இரண்டாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் வகையில் நாம் கடந்த ஒன்றரை வருட காலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த ஒன்றரை வருட காலத்திலும் எமது அனைத்து முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு எமது அபிவிருத்திக்கான அங்கீகாரத்தினை வழங்காமல் பிரதேச அபிவிருத்திக் குழுவில் அங்கம் வகிப்பதோடு மாவட்ட அபிவிருத்திக் குழுவிலும் அங்கம் வகித்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தமது வெளிப்படையான தடையினை தயக்கமின்றி மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பிராந்தியத்தில் எமது கட்சியின் மூலம் அபிவிருத்திகள் நடைபெற்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழிவடைந்து விடும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக நமது மக்களுக்கு வரவிருக்கும் அபிவிருத்திகளை தடை செய்து வரும் மு.காவின் முகத்திரைகளை இத்தேர்தல் மூலம் மக்கள் கிழிக்க முன்வர வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள நமது முஸ்லிம் யுவதிகளும் இளைஞர்களும் சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று தொழிலுக்காக நீண்ட தூரம் அலைந்து திரிகின்றனர். நமது சமூகத்தின் உரிமைகளை வெல்வதற்காகவும் தன்மானத்தினையும் கௌரவத்தினையும் பாதுகாப்பதற்கா நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு மாற்றுச் சக்தியினர் தடைவிதிப்பதற்கு எதிராக நமது மக்கள் குரல் கொடுக்க பின்னிற்கக் கூடாது.

கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது தம்புள்ள பள்ளிவாசலினை மீட்பதற்கு எமக்கு ஆணை தாருங்கள் என்று மேடைக்கு மேடை மக்களை உணர்ச்சியூட்டி, இனவாத துவேசத்தினைக் கக்கி, அத்தலைமை கூக்குரலிட்டு கர்ச்சித்துக் கொண்டிருந்தது. பின்னர் ஆட்சியாளர்களிடம் சென்று “நான் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன்” என்னை மன்னித்து விடுங்கள் என்று மண்டியிட்டது. தம்புள்ள பள்ளிவாசலினை இலகுவில் மீட்பெதற்கான நகர அபிவிருத்தி அமைச்சு அத்தலைமைக்கு வழங்கப்பட்டும் இன்று வரை எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் மௌனியாக இருந்து வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்துள்ளனர். அவ்வாறான துயரங்களைத் துடைத்து நமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினைத் தோற்றுவித்து நமது மக்களுக்காக பல்வறான விடயங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பெருந்தலைவரின் மறைவிற்குப் பின்னர் அவர் காட்டிய வழியில் நின்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயற்பட்டு வருகின்றது. கட்சியின் தலைமையும் கட்சியின் பெயரால் மேற்கொள்ளப்படும் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளையும் தட்டிக் கேட்கும் பலர் இக்கட்சியில் இருந்து வேண்டுமென்றே வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுமாத்திரமல்லாமல் கட்சியின் கொள்கைகளும் செயற்பாடுகளும் திசை மாறிச் செல்வதால் கட்சியினைச் சேர்ந்த மேலும் பலர் வெளியேறியும் உள்ளனர்.

கடந்த 17 வருடங்களாக மு.காவின் தலைமைப் பதவியினை வகிக்கும் தலைவர் நமது சமூகத்தினைக் காட்டிக் கொடுத்து பல்வேறான பாதகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். நாம் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக அளித்த வாக்குகளை கணக்கிட்டு நமது சமூகத்தில் உள்ள ஒட்டுமொத்த தலைகளை கணக்கிட்டு ஆட்சியாளர்களிடமும் வெளிநாட்டு தீய சக்திகளிடமும் பெருந்தொகைப் பணத்தினை பெற்று சமூகத்தினை விற்று வரும் வரலாறுகள் தற்போது அம்பலமாகிய செய்திகளை நமது மக்கள் நன்கறிவர்.

நமது முஸ்லிம் சமூகம் அனுபவித்த துயரங்களைப்போல் தமிழ் சமூகம் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆயதமேந்தியும் ஜனநாயக ரீதியிலும் பல ஆண்டுகள் போராட்டம் நடத்திய வரலாறுகளைக் கொண்டுள்ளது. இதேபோல் பௌத்தர்களும் தாம் சார்ந்த இனத்தவர்களின் நன்மை கருதி பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறான போராட்டங்களை குழிதோண்டிப் புதைக்கும் செயற்பாடுதான் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை மேற்கொண்டுள்ளது.

26168102_1964218090261043_6636981786062917639_n 26169288_1964218473594338_7752655585745199849_n 26195704_1964218296927689_1791942549215425682_n 26238986_1964217986927720_7928490569226272105_n

Web Design by The Design Lanka