ஆபத்தான இடமாக மாறும் யாழ்ப்பாணம்? - Sri Lanka Muslim
Contributors

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று நிலைமை சற்று அதிகரித்த நிலைமை காணப்படுகின்றது. இன்று வரை 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் தொற்றுக்குள்ளன 258 பேர் பூரண சுகமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். 739 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 892 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த தொற்று நிலைமையானது அண்மைய காலங்களிலே தற்போதைய மார்ச் மாதத்தில் உச்சபட்ச நிலைமையில் காணப்படுகின்றது.

மார்ச் மாதத்தில் மாத்திரம் 150 பேருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது தற்போதைய காலகட்டத்தில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலகட்டமாக காணப்படுகின்றது.

தற்பொழுது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு ஏனைய அனைத்து செயற்பாடுகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது.

இடர் காலமாக இருக்கின்ற இக் காலப்பகுதியில் மிகவும் அவதானமாக பொதுமக்கள் செயற்பட வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் விடுக்கின்ற அறிவுறுத்தல்கள் அதேபோல சமூக இடைவெளி பேணுதல் முகக் கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றி தங்களையும் தங்களுடைய உறவினர்களையும் சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களுக்கு இருக்கின்றது.

போக்குவரத்தின் போதும் ஏனைய செயற்பாடுகளின் போதும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுதல் அவசியமாகும். அத்தோடு அத்தியாவசியமான தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதை தவிர்த்தல் சிறந்தது.

அத்தோடு பெற்றோர்கள் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் அத்தோடு ஏனைய தரப்பினரும் இந்த விடயங்கள் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

குறிப்பாக திருமண நிகழ்வுகள், மரண வீடுகள் அதேபோன்ற வீட்டில் இடம் பெறும் நிகழ்வுகள், அரச கூட்டங்கள் ஏனைய கூட்டங்களில் பொதுமக்கள் கூடும் போது மிகவும் அவதானமாக சுகாதார நடைமுறைகளை அனுசரித்து பொது சுகாதாரப் பரிசோதகர்களின், பொது வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனவே, அவற்றை முறையாகப் பின்பற்றி அமுல்படுத்தினால் தொற்று நிலைமையில் இருந்து யாழ்ப்பாண மாவட்ட கட்டுப்படுத்த முடியும். யாழ் மாவட்டத்தில் தற்போதைய நிலைமையானது ஏனைய மாவட்டங்களில் சற்று வித்தியாசமான நிலையில் காணப்பட்டது.

எனவே, யாழ்ப்பாண மாவட்டத்தினை கொரோனா தொற்றில் இருந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றோம். எனவே, அந்த ஒத்துழைப்பினை பொதுமக்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்.

இந்த விடயத்தில் சுகாதார தரப்பினருக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிக மிக அவசியமான விடயமாகும்.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை சகல நடவடிக்கைகளும் வழமைபோன்று இடம்பெறுகின்ற நிலையில் பெரும் தொற்று ஏற்படும் நிலைமையானது மீண்டும் முடகத்தினை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, இது மக்களை அசௌகரியத்தை ஏற்படுத்தும். தொற்றினை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பதன் மூலம் முடக்க நிலைமை கட்டுப்படுத்தி தொற்று நிலைமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team